SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுமைப் பள்ளி விருது பெற்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி!

2018-09-03@ 17:17:24

தமிழக அளவில் 57 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது வழங்கிவருகிறது தமிழக அரசு. இந்த விருதுபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சமும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கமாகவும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த 57 பள்ளிகளில் ஒன்றுதான் க.பரமத்தி அரசுப் பள்ளி. மேனாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய நுழைவுவாயிலில் இருந்து வகுப்பறைகள், கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், நூலகம், கழிப்பறைகள் என அனைத்துமே டைல்ஸ் பதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பராமரிக்கப்பட்டுவருகிறது கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி தொடக்கப்பள்ளி.

பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணனிடம் கேட்டபோது, ‘‘நான் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று 13 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. வந்த புதிதில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. உடனடித் தேவை பள்ளிக்கு சுற்றுச்சுவர் என்பதனை முடிவு செய்து பள்ளி பெற்றோர். ஆசிரியர் கழகத்தின் உதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.50 லட்சம் பெற்று பள்ளிக்கு முழுமையான சுற்றுச்சுவர் கட்டி முடித்தோம். அதன் மூலம் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது.

2005ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் முறையினை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதன் விளைவாக செயல்வழிக்கற்றல் மாதிரிப்பள்ளி என்ற சிறப்புடன் மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து ரூ.25,000 சிறப்பு நிதியாக வழங்கப்பட்டது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக இரண்டு கணினிகள், நன்கொடையாளர்களை அணுகி 7 கணினிகள் பெற்று 9 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகத்தினை பள்ளியில் அமைத்தோம். அனைத்துக் கணினிகளும் நெட்வொர்க்கிங் செய்யப்பட்டு இணையதள வசதியுடன் செயல்படத் தொடங்கியது. 2006ல் அரசு தொடக்கப்பள்ளிகளில் முதன்முதலாக கணினி ஆய்வகம் அமைக்கப்பட்ட அரசுப் பள்ளி இதுதான். இதனுடைய சிறப்பான செயல்பாட்டினால் 2008ல் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து மாவட்ட அளவில் சிறந்த கணினி வழிக் கற்றல் மையத்திற்கான விருது கிடைக்கப்பெற்றது’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

‘‘ஓரளவு பொருளாதார வசதியுள்ளவர்கள் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுகின்றனர். காரணம், அவற்றின் தோற்றம் மற்றும் கட்டமைப்பு வசதிகள். இதைக் கருத்தில் கொண்டு பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஊர்ப் பொதுமக்கள், நண்பர்கள், நன்கொடையாளர்கள் இவர்களை அணுகி கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் வரை நன்கொடை பெற்று பள்ளியின் தோற்றத்தினை அடியோடு மாற்றிவிட்டோம். பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் தோற்றம் சிறப்பாக இருக்கும்போது மாணவர்கள் மனநிலை, ஆசிரியர்கள் மன
நிலையோடு கற்றல் சூழலும் சிறப்பாக அமையும் என்பது உறுதி.’’ என்கிறார்

செல்வக்கண்ணன்.‘‘அரசுப் பள்ளிகள் என்றாலே பொதுமக்களின் பார்வை இங்கு அடிப்படை வசதிகள் இருக்காது. இங்கு நமது குழந்தைகளைப் படிக்க வைப்பதைவிட கடனை வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் சிந்திப்பதால் இன்று படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைவுபட்டுக்கொண்டுவருகிறது. இந்த மனநிலையை மாற்ற வேண்டும், அரசுப் பள்ளிகளில் தரம் உண்டு என நிரூபிக்க சர்வதேச தரநிர்ணய சான்றிதழ் கடந்த 2016-ல் பெற்றோம். இதன் மூலம் அரசுப் பள்ளிகள் எதற்கும் சளைத்ததல்ல என்று நிரூபித்தோம். கடந்த பிப்ரவரி மாதம் அகில இந்திய அளவில் முதல் அரசுப் பள்ளியாக ஜப்பான் நாட்டின் வழிமுறைகளைப் பின்பற்றி வழங்கப்படும் 5 S விருதினைப் பெற்றுள்ளோம்.’’ என்று பெருமிதத்தோடு கூறுகிறார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘பள்ளியில் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கராத்தே, ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹிந்தி மொழிப்பயிற்சி,இசைப்பயிற்சி, நடனப் பயிற்சி, அபாகஸ், யோகா, கேரம், செஸ் ஆகியவை அதற்கென தனிப்பட்ட ஆசிரியர்களால் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்ட மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பலமுறை பரிசு பெற்றுள்ளனர்.க.பரமத்தி ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 20 பள்ளிகளுக்கும் மேல் மாணவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ள நிலையில் ஒன்றியத்திலேயே அதிக அளவாக இப்பள்ளியில் 215 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 10 கிமீ தொலைவுக்கு அப்பாலிருந்தும் வாகனங்களில்  100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளிக்கு வருகின்றனர்.

பள்ளியில் 2 ஸ்மார்ட் கிளாஸ் ரூம், கணினி ஆய்வகம் மட்டுமல்லாமல் அறிவியல் ஆய்வகம், டிஜிட்டல் மல்ட்டி மீடியா வகுப்பறை, பள்ளிக்கென்று இணையதள வசதி, குழந்தைகளுக்கான 2000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம், அனைத்து வகுப்பறைகளுக்கும் மையக் கட்டுப்பாட்டு அறையுடன் தனித்தனியே தொலைக்காட்சிப்பெட்டி, பள்ளி வளாகம் முழுமையும் கண்காணிக்க CCTV கேமிராக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆண்கள் பெண்களுக்கென்று தனித்தனியே நன்கு பராமரிக்கப்படும் கழிவறைகள், குழுவாகக் கை கழுவுதலுக்கென்று அமைக்கப்பட்ட பைப் லைன் வசதி, தேசத் தலைவர்களின் ஆளுயர படங்கள் பெரிய அளவு தேசப்படங்கள், குழந்தைகளைக் கவரக்கூடிய கார்ட்டூன் படங்கள் வரையப்பட்ட வகுப்பறைகள்.

இவை தவிர, பள்ளி நிகழ்வுகளைப் பெற்றோர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வாய்ஸ்கால் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி வரை பள்ளிக்கு வருகை தராத மாணவர்கள் பற்றிய அறிவிப்பு பெற்றோர்களைச் சென்றடைகிறது. மாணவர்களின் பிறந்த நாள், பெற்றோர்களின் பிறந்த நாள், திருமண நாள் இவற்றிற்குப் பள்ளியின் சார்பில் வாழ்த்துச் செய்தி குரல் பதிவுத் தகவல் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் நாளுக்குநாள் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டு செல்லும் இத்தருணத்தில் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.இதுபோன்ற சிறப்பம்சங்கள்தான் தமிழக அரசால் புதுமைப் பள்ளியாக தேர்ந்தெடுக்க காரணமாக அமைந்தது என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்’’ என்று ஆனந்தமாகத் தெரிவிக்கிறார் செல்வக்கண்ணன்.


தொகுப்பு : திருவரசு


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • delli_engottai11

  டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி : விழாக்கோலம் பூண்டது டெல்லி நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்