SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தொடக்கப் பள்ளியைப் பதக்கங்கள் வெல்லும் பள்ளியாக்கியவர்!

2018-09-03@ 17:15:59

மலையடிவாரத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாமல் இருந்த ஒரு தொடக்கப் பள்ளியை, அதன் தலைமை ஆசிரியர் தனது சொந்தச் செலவில் நவீன பள்ளியாக மாற்றியிருப்பதோடு அல்லாமல் கற்பித்தல் முறையில் மாற்றம் செய்திருப்பது பாராட்டுக்குரியது. மேலும் மாணவர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, அறிவுத்திறன் போட்டி என விருதுகளையும், பதக்கங்களையும் வாங்கிக் குவிக்கும் வண்ணம் செய்துள்ளார். அப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறனைக் கண்டு தமிழகத்தின் முன்மாதிரிப் பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது

வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் உள்ள ராஜாவூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இது எப்படிச் சாத்தியமானது என்பதைத் தலைமையாசிரியர் இந்திரா நம்மோடு பகிர்ந்துகொண்டவற்றைப் பார்ப்போம்… ‘‘இந்த உலகத்தையும் அதன் செயல்பாடுகளையும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடமும் அவர்களின் ஆசிரியர்களிடமுமிருந்துதான் கற்றுக்ெகாள்கிறார்கள். எனவே, மற்றவர்களுக்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்விப் பணியில் என்னை முழுவதுமாக அர்ப்பணித்துச்செயலாற்றி வருகிறேன். பள்ளியும் அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரமும் உயர வேண்டுமென்றால் ஆசிரியரின் பங்களிப்பு நிச்சயம் வேண்டும்.

இடைநிலை ஆசிரியராக இருந்தபோது பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களுக்கு மாதம் தலா ரூ.20 வீதம் என் சொந்தப் பணத்தில் கொடுத்து 5 ஆண்டுகள் தொடர் வைப்புநிதியில் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்து மாதந்தோறும் ரூ.500 சேமித்துச் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தினேன்.முதன்முதலாகத் தலைமையேற்றபோது எங்கள் பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 17 மட்டுமே. இது ஈராசிரியர் பள்ளி. பொறுப்பேற்றவுடன் இந்தப் பள்ளியின் நிலைமை எனக்கு மிகுந்த வேதனையும், மனஉளைச்சலும் ஏற்படுத்திவிட்டது. ஏனெனில், இதற்குமுன் நான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 600. இங்கு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே 17 தான். அது மட்டுமில்லாமல் இது S.S.A. திட்டத்தின் பள்ளி

(சர்வசிக்‌ஷ அபியான்). இந்த ஊருக்குப் பேருந்து வசதிகூட இல்லை. படிப்பறிவில்லாத மிகவும் ஏழ்மையான மக்கள் வசிக்கும் பகுதி. மனஉளைச்சலில் இருந்த எனக்குத் தைரியம் கொடுத்தவர்கள் என் கணவரும் (காவல் துறை ஆய்வாளர்) உடன் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் நண்பர்களும்தான்’’ என்று மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.‘‘கல்லும் மேடும், குண்டும் குழியுமான இடத்துக்கு நடுவில் பள்ளி. ஒருபுறம் மட்டும் சுற்றுச்சுவர் இருந்தது. அப்போதுதான் என் மனதில் என்னுடைய ரோல் மாடல் (Role Model) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறிய ‘கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்று விடும். கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்’ என்ற வார்த்தை உறைத்தது. இதை மனதில்கொண்டு செயல்படத் தொடங்கினேன். முதலில் ஜே.சி.பி. கொண்டு குண்டும் குழியுமான இடத்தை என் சொந்தப் பணத்தில் சரிசெய்து மரக்கன்றுகள் நடவு செய்தேன். இதைப் பார்த்த ஊர் மக்கள் என்னைப் பாராட்டியதோடு உதவி செய்ய முன்வந்தனர். ராணுவ வீரர்கள் இருவர் பள்ளிக்கு கேட் (Gate) அமைத்துக் கொடுத்தனர்.

அதன்பிறகு மாணவர்களுக்குப் பாடப் புத்தகத்தை மட்டும் கற்பிப்பதை விடுத்து வேறுவிதமாக (நாடகம், பாட்டு, விளையாட்டு) பொதுஅறிவுச் செய்திகளையும், திருக்குறளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கோடு சொல்லிக் கொடுத்தேன். இதில் 4ஆம் வகுப்பு மாணவி ஒருவர் 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் போட்டியில் வென்று தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.10,000 மாவட்ட ஆட்சியர் கையால் பெற்றார். இதன் விளைவாக என்னைப் பாராட்டி தமிழக அரசு 2013ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கியது. ஆனால், இதைப் பார்க்க, ரசிக்க என் கணவர் இல்லாமல் போய்விட்டார். மாரடைப்பில் (Heart attact) இறந்துவிட்டார். இதனால், நான் மிகவும் துவண்டுபோனேன். கல்வி அதிகாரிகள் என்னை அழைத்து நீ சாதிக்கப் பிறந்தவள், மனக்கஷ்டத்தை விட்டு வெளியில் வரவேண்டும் என ஊக்கமளித்து அழைத்து வந்தனர்’’ என்றவர், கவலையோடு அமைதியானார்.

மீண்டும் தொடர்ந்த தலைமையாசிரியர் ‘‘எனது கஷ்டங்களை மறப்பதற்காகவே கல்விப் பணியை மீண்டும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மாணவர்களின் நலனே என் நலன் எனக் கருதி கல்வித்தரத்திலும், பொருளாதாரத்திலும் முன்னுக்குக் கொண்டுவந்து இந்தப் பள்ளியை ஒரு சாதனைப் பள்ளியாக்கிட  முடிவெடுத்தேன். சென்னைத் தலைமைச் செயலகத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் K.C. வீரமணி, பள்ளிக் கல்விச் செயலர் சபீதா ஆகியோர் முன்னிலையில் 4 மாணவர்களைக்கொண்டு கின்னஸ், ஜெட்லி, இந்தியா, லிம்கா போன்றவற்றில் மாணவர்களின் திறமைகளை வெளியே கொண்டுவந்தேன். இதற்கான பதிவுச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

மாணவர்கள் அமர்ந்து படிக்கப் பள்ளி வளாகத்தில் திண்ணைகள் அமைத்தேன். பள்ளிக்கு வண்ணம் பூசி, வண்ணப் பள்ளியாக மாற்றினேன். என் கல்விச் சேவையைப் பாராட்டி 2014-ல் சிறந்த பள்ளிக்கான அரசு விருதும் (மாவட்ட அளவில்), 2015-ல் தேசிய விருதான
அம்பேத்கர் விருதும், அன்னை தெரசா விருதும், மனித உரிமை ஆணையம் எனக்கு International Award ‘சிறந்த ஆசிரியர்’ விருதும் வழங்கியது. அது மட்டுமல்லாமல் கல்விச் சேவையைப் பாராட்டி இலங்கைப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
மாணவர்கள் அமரும் இடம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக வகுப்பறையில் டைல்ஸ் ஒட்டினேன்.  மாணவர்களுக்கு டை, பெல்ட், பேட்ச், ID கார்டு மற்றும் சாப்பிடத் தட்டு, டம்ளர் என எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்துள்ளேன். என்னுடைய ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருப்பவர்கள் உடன் பணிபுரியும் ஆசிரியர் மகேந்திரன், ஊர்ப் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்.

இப்பள்ளியால் எனக்குப் பெருமையா அல்லது என்னால் இப்பள்ளிக்குப் பெருமையா எனக் கேட்டால் என் மாணவர்களால்தான்
எனக்குப் பெருமை என முழுமனதோடு கூறுவேன். எங்கு, எந்த இடத்தில், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம் எனப் போட்டி நடந்தாலும் அப்போட்டிகளில் கலந்துகொண்டு எல்லா இடத்திலும் எங்கள் பள்ளி மாணவர்கள் முதல் பரிசு வாங்கிவருகின்றனர்.
தற்போது தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் எங்கள் பள்ளி மாணவர்கள் உள்ளதால் 17 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை 380 மட்டுமே உள்ள இடத்தில் இத்தகைய பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் பல திறமைகளை முன்னுக்குக் கொண்டுவந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளேன்.
என்னுடைய எண்ணம் விருது வாங்குவது அல்ல. என்னிடம் படித்த மாணவர்கள் வருங்காலத்தில் நல்ல குடிமக்களாகவும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஆசிரியர் போன்ற துறைகளில் சாதிப்பவர்களாகவும் ஆகவேண்டும் என்பதே’’ என்று தன் லட்சியத்தை ஆழ்மனதிலிருந்து வெளிப்படுத்தினார் தலைமையாசிரியர் இந்திரா. இதுபோன்ற பள்ளிகளுக்கு அரசு தேவையான உதவிகளைச் செய்தால், பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை குறையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.

- தோ.திருத்துவராஜ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2018

  24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்