SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவை நம்பகத்தன்மை

2018-08-29@ 00:42:54

இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2019ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் நடந்தது. தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பெரும்பாலான கட்சிகள்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடப்பதாகவும், ஒப்புகை  சீட்டு (விவிபிஏடி) இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்ப குறைபாடு  தொடர்பாகவும் புகார் தெரிவித்தன. மீண்டும் வாக்குச்சீட்டு முறையை  அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக., பாமக., தேமுதிக  உள்ளிட்ட 70 சதவீத கட்சிகள் இக்கோரிக்கையை முன்வைத்தன. அத்துடன், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை எனவும்  தெரிவித்தன.

கட்சிகளின் ஆலோசனைகளை பதிவு செய்த தேர்தல் ஆணையம்,  உறுதியான முடிவு எதையும் உடனடியாக அறிவிக்கவில்லை. பரிசீலித்து முடிவு  எடுக்கப்படும் என அறிவித்தது. வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவதே  நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்தும் என இக்கூட்டத்தின் வாயிலாக தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு முறையோ, மின்னணு  இயந்திரமோ, எதுவானாலும் தவறு நேரக்கூடாது என்பதுதான் அனைத்து கட்சிகளின்  விருப்பம். சாதாரண கடைக்கோடி குடிமகனின் விருப்பமும் இதுதான். நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப, தேர்தல் பணிகளை எளிதாக்க வாக்குப்பதிவு  இயந்திரம் தேவை என தேர்தல் ஆணையம் கருதினாலும், பெரும்பாலான கட்சிகள் அதை ஏற்காதபட்சத்தில், மறுபரிசீலனை செய்வதே நல்லது.

வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதால் பணிச்சுமை குறைகிறது, விரைவாக ஓட்டு எண்ண முடிகிறது என பல  காரணங்கள் கூறப்பட்டாலும், எவ்வித மோசடிக்கும் இடம்கொடுக்காமல் ஜனநாயக  முறையில், 100 சதவீதம் நம்பகத்தன்மையுடன் தேர்தல் நடத்தினோம் என்பதே  பெருமை. ஒரு நாட்டின் தேர்தல் எப்படி நடக்கிறதோ, அதற்கு ஏற்பவே அந்நாட்டின் ஸ்திரத்தன்மை,  வளர்ச்சி, அமைதி இருக்கும். எனவே, பெரும்பாலான அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைக்கு மதிப்பளித்து, மக்கள் விரும்பும் வகையில் தேர்தல் நடத்துவதே நல்லது. இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல், கள்ளஓட்டு போடுவதை தடுத்தல், தேர்தலில் பணப்பட்டுவாடாவை ஒழித்தல், குற்றத்துக்கு துணை போகும் அதிகாரிகளை தண்டித்தல் போன்ற தீர்க்கமான முடிவுகளையும் தேர்தல் ஆணையம் அமல்படுத்தினால் நல்லது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்