SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் ஒரு சிங்கூர் அபாயம்

2013-03-10@ 06:04:08

கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்ட விவசாயிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சகட்ட கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். மழையில்லாமல் விவசாயம் பொய்த்து போனது என்பதற்காக இல்லை. மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டுள்ள நயவஞ்சக திட்டத்திற்கு மாநில அரசு அதிகாரிகளும், போலீசும் துணை போனது தான். கடந்த இரு வாரங்களுக்கு முன் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி என பல்வேறு இடங்களில் தடாலடியாக விவசாயிகள் நிலத்தில் பொக்லைன் இயந்திரங்களுடன் சென்ற ஒரு குழுவினர், கண்ணிமைக்கும் நேரத்தில் தென்னை, வாழை மரங்களை அடியோடு சாய்த்தனர். தட்டி கேட்ட நிலத்தின் உரிமையாளர்களை தரதரவென இழுத்து போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். நியாயம் கேட்ட உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை பார்த்த மேற்கு மாவட்ட விவசாயிகள் ஆங்காங்கே திரள ஆரம்பித்தனர். அதன் உச்சகட்டமாக சேலத்தில் மத்திய அரசின் காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா(கெயில்) நிறுவனத்தின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. விவசாயிகள் ஒரு பகுதியினர் நீதிமன்றத்திலும் முறையிட்டனர். இதையடுத்து நிலத்தை கையகப்படுத்துவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நல்லவேளையாக தமிழக அரசு வேகமாக விழித்துக்கொண்டு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று உடனடியாக கருத்து கேட்பு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தது. கருத்து கேட்ட பின்னர் எங்கள் நிலத்தை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்படுமானால் மேற்கு வங்க மாநிலம் சிங்கூரிலும், நந்திகிராமிலும் ஏற்பட்ட சூழ்நிலை தான் உருவாகும் என விவசாயிகள் வெளிப்படையாகவே குமுற தொடங்கி விட்டனர். மத்திய அரசின் கெயில் நிறுவனம் செயல்படுத்தவுள்ள கொச்சியில் இருந்து பெங்களூருக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் தான் தற்போது புயலை கிளப்பியிருப்பதற்கு காரணம்.

எரிவாயு கொண்டு செல்வதை எந்த விவசாயிகளும் எதிர்க்கவில்லை. மாறாக 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமே அடிமாட்டு விலைக்கு அபகரிக்க நினைப்பது தான் முக்கிய காரணம்.  கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பெங்களூர் வரை 871 கிலோ மீட்டருக்கு குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லும் திட் டத்தை செயல்படுத்த  கெயில்(காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்) முடிவு செய்துள்ளது. குழாய் பதிப்பதற்கான வழித்தடத்தில் கேரள மாநிலத்தில் 501 கிலோ மீட்டருக்கும், தமிழகத்தில் 310 கிலோ மீட்டருக்கும், கர்நாடக மாநிலத்தில் 60 கிலோ மீட்டருக்கும் விவசாயிகளிடமிருந்து நில அனுபவ உரிமையை ‘கெயில்‘ நிறுவனம் எடுத்துக்கொள்ளும். அதாவது, நிலம் விவசாயிகள் பொறுப்பிலேயே இருக்கும். ஆனால் குழாய் மட்டும் நிலத்தின் வழியாக எடுத்து செல்லப்படும். இதற்கு நிலத்தின் மதிப்பில் 10 சதவீதம் இழப்பீடாக வழங்கப்படும். ஆனால் கையகப்படுத்தப்படும் நிலத்தின் பரப்பை சுற்றிலும் தென்னை, வாழை, கரும்பு என எந்த சாகுபடியும் செய்யக்கூடாது. எரிவாயு குழாயில் உடைப்பு அல்லது சேதம் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட விவசாயி தான் பொறுப்பேற்கவேண்டும். அடிமாட்டு விலைக்கு நிலத்தையும் கொடுத்து விட்டு குழாயையும் பாதுகாக்கவேண்டும். குழாய்க்கு பாதிப்பு ஏற்பட்டால் ஜெயிலுக்கு போவதும் நிலத் தின் உரிமையாளர் தான். குழாய் பதிப்பதற்கு 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தான் கெயில் நிர்வாகம் பயன்படுத்தப்போகிறது. ஆனால் கெயில் நிர்வாகத்தின் நிபந்தனைகள், 27 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாதிக்கும். அதோடு கோவை உட்பட 7 மாவட்டங்களில் 135 கிராமங்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்படும்.

ஆனால் இதையெல்லாம் அறியாத சில அப்பாவி விவசாயிகளிடம் சத்தம் இல்லாமல் நிலத்தை பயன்படுத்துவதற்கு ஒப்பந்தம் செய்தனர். ஆனால் இழப்பீட்டுக்கான காசோலை வந்தபோது தான் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர். அரசு தரப்பில் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட கருத்தாய்வு கூட்டத்திலும் 7 மாவட்டங்களை சேர்ந்த ஒட்டு மொத்த விவசாயிகளும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் விவசாய உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், மாநில அரசின் சாலை விரிவாக்கங்கள், விமான நிலையம், கல்வி நிறுவனங்கள் என பல்வேறு தேவைகளுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது மாற்று வழி இருந்தபோதிலும் விவசாய நிலத்தை கைப்பற்ற நினைப்பதும் ஒரு வகையில் நில அபகரிப்பு தான். மேற்கு வங்க மாநிலத்தில் டாடா கார் தொழிற்சாலை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு சிங்கூர், நந்திகிராமில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது. ஒட்டு மொத்த விவசாயிகளும் கிளர்ந்து போராடினர். தமிழகத்தில் விவசாயிகள் கோபத்தை உணர்ந்து கொண்ட அரசு, உடனடியாக கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியுள்ளது. நிலத்தை பறிப்பதற்கு காரணமாக இருந்ததாக உயர் பொறுப்பில் இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியையும் உடனடியாக விடுவித்தது. எனவே விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் மாற்றுப்பாதை குறித்து அரசும் யோசிக்கும் என்றே விவசாயிகள் நம்புகின்றனர்.

கெயில் அதிகாரிகள் சொல்வது என்ன?


கெயில் அதிகாரிகள் கூறியதாவது: சமீபகாலமாக இதுபோன்ற திட்டங்கள் பாதுகாப்பில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் குழாய்களை கெயில் நிர்வாகம் நேரடியாக பாதுகாக்க முடியாது. ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா,கோதாவரி இடையே ஏற்படுத்தப்பட்ட குழாய் வழி எரிவாயு திட்டத்திற்கு நக்சலைட்டுகளால் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் குழாய்கள் உடைக்கப்பட்டன. இதேபோல் அசாம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டத்திலும் குழாய்கள் உடைக்கப்பட்டன. சில இடங்களில் அருகாமை கிராம மக்களே நேரடியாக ஈடுபட்டு பலர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவங்களின் தொடர்ச்சியாக தான் தனியார் நிலங்கள் வழியே கொண்டு செல்லும் முறை கையாளப்படுகிறது. தனியார் நிலத்தில் குழாய் பதிக்கும் போது பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. தொழில்நுட்ப காரணங்களால் குழாய் உடைந்தால் அதை நிர்வாகமே கவனித்துக்கொள்ளும். நிலத்தின் உரிமையாளர் மூலம் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படும். இதை விவசாயிகள் தவறாக புரிந்துள்ளனர்

விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?

குழாய் பதிக்கப்படும் பகுதியில் நிலத்தின் இரண்டு புறமும் தலா 10 மீட்டருக்கு இடம் தேவை. எரிவாயு குழாய் விட்டம் 24 அங்குலம்(2அடி). 5 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு அதில் எரிவாயு குழாய் பதித்த பிறகு நிலத்தின் மேற்பரப்பில் இருந்து 3 அடி ஆழத்தில் குழாய் செல்லும். குழாய் செல்லும் பாதையில் வீடு, கட்டடம், மரம், ஆழ்குழாய் கிணறு, போன்ற ஏதும் இருக்கக்கூடாது. எந்த சாகுபடியும் செய்யக்கூடாது என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று. இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகள்  துணையுடன் நிலத்திற்கான அனுபவ உரிமைகளை பெறுவதற்கான முயற்சிகளை ‘கெயில்‘ தீவிரமாக மேற்கொண்டது. கேரளாவில் முதல் கட்டமாக கஞ்சிக்கோடு வரை குழாய் பதிப்பதற்கான பூர்வாங்க பணி தீவிரப்படுத்தப்பட்டது.  இந்த பணி துவங்கியவுடன் குழாய்  வழி எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்திற்கான நில உரிமை சட்டத்தில் மேலும் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. புதிய நிபந்தனையின் படி, நிலத்தை ஒப்படைக்கும் விவசாயிகள் தான் குழாய்களுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும். எரிவாயு குழாயில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் வால்வு அமைக்கப்படும். இரு வால்வுகளுக்கிடையில் குழாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்ளவேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட விவசாயிகளை சார்ந்தது. குழாயில் செயற்கையாக ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயி மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

watching my girlfriend cheat did my girlfriend cheat my girlfriend cheated

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-06-2018

  20-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

 • sushmafrancepm

  பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

 • coolingtowersflorida

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

 • taiwaneseminimodels

  தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

 • tentsforchildrenstexas

  அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்