கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படும்
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் அரசு மருத்துவமனைகள்
1கருத்துகள்
சென்னை: தமிழகத்தில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதோடு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக எய்ட்ஸ் நோய் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனலாம். விழிப்புணர்வு காரணமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற தயங்கிய காலம் மாறி மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுவதை போல மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்னும் ரகசியமாக ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் எய்ட்ஸ் நோயாளிகளைப்பற்றிய சரியான புள்ளி விபரங்கள் இல்லை. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு மரணத்தை தள்ளி போட்டு வருகிறார்கள். ஏற்கனவே எச்.ஐ.வியுடன் வாழும் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக கர்ப்பப்பை புற்று நோய் தாக்குதல் அதிகளவில் உள்ளது. இந்த நோய் குறித்த விபரம் தெரியாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது, 100 பெண்களில் 5 முதல் 10 பேருக்கு கர்ப்பப்பை புற்று நோய் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த, விழிப்புணர்வு நோயாளிகளிடம் இல்லை என்பது வேதனைக்குரியது.
கர்ப்பப்பை புற்று நோயை தொடக்க காலத்திலேயே கண்டறிந்தால் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு மரணத்தை தள்ளி போடலாம். 10 வருடம் ஆரம்ப கட்ட நிலையில் இருக்கும் இந்த கர்ப்பப்பை புற்று நோயை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டால் அதை குணப்படுத்த முடியாது. ஆனால் அதற்கான சிகிச்சை வசதிகள் தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இல்லை. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் கர்ப்பப்பை புற்று நோயை கண்டறியும் ‘வயாவிழி’ மற்றும் ‘பாப்ஸ்மியர்‘ சோதனை வசதி உள்ளது. இந்த சோதனையை எச்.ஐ.வியுடன் வாழும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் மேற்கொள்வதில்லை. இதற்கு எய்ட்ஸ் நோயாளிகளை தொட்டு சிகிச்சை அளிக்க தயக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் எச்.ஐ.வியுடன் வாழும் பெண்களில் பலருக்கு இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை. இதனால் என்ன காரணத்திற்காக இறக்கிறோம் என்ற விபரம் தெரியாமல் பலர் இறக்கின்றனர். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்.ஐ.வியுடன் வாழும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், கர்ப்பப்பை புற்று நோய் கண்டறியும் வசதியை தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்பது இவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு எச்.ஐ.வி யுடன் வாழும் பெண்கள் கூட்டமைப்பு தலைவர் பத்மாவதி கூறியதாவது: கர்ப்பப்பை புற்று நோய் பாதிப்பு பெரும்பாலும் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதுண்டு.
இதில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு புற்று நோய் கண்டறியும் வாய்ப்பு, வசதி மிக குறைவாகவே உள்ளது. இதனால் எய்ட்ஸ் நோய் பாதிப்பை விட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு விரைவில் இறக்கும் நிலை ஏற்படுகிறது. தமிழகத்தில் 9,000 பெண்கள் எங்கள் அமைப்பின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புள்ளது. ஆனால் இந்த நோயை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வதற்குள் பலர் இறந்து விடுகின்றனர். மாதந்தோறும் ஏஆர்டி மருந்தினையும், 6 மாதங்களுக்கு ஒரு முறை சிடி4 பரிசோதனை செய்ய மருத்துவமனைகளுக்கு செல்கிறார்கள். அப்போது, கர்ப்பப்பை புற்று நோய் கண்டறிய பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வசதி பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இல்லாததால் மாவட்ட, தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அலைக்கழிப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி வாழ வழிகாட்டும் தமிழக அரசு, மருத்துவ சேவை பெறுவதில் உள்ள சிக்கல்களையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
5 மடங்கு வாய்ப்பு டாக்டர் விளக்கம்
அடையாறு புற்று நோய் மையத்தின் துணை பேராசிரியர் மல்லிகா கூறுகையில், ‘ஒரு லட்சம் பெண்களில் 25 முதல் 30 பேருக்கு கர்ப்பப்பை புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் எச்.ஐ.வியுடன் வாழும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் தாக்குதல் 5 மடங்கு அதிகம். எச்பி என்ற வைரசால் கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படுகிறது. இதை தொடக்க காலத்திலேயே கண்டறிந்து விட்டால் மரணத்தை தடுக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கலாம். அல்லது க்ரையோதெரபி என்ற சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட பகுதியில் சிகிச்சை அளிக்கலாம். இதற்கான மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளது‘ என்றார்.
மருத்துவ வசதியில்லை
எச்.ஐ.வியுடன் வாழும் பெண்களில் கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செயல்படும் ‘கோஷிஸ்‘ என்ற திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தர்சிங் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள எச்.ஐ.வியுடன் வாழும் பெண்களில் பலருக்கு கர்ப்பப்பை புற்று நோய் அறிகுறி உள்ளது. ஆனால் அதை கண்டறிய போதிய மருத்துவ வசதிகள் பெரும்பாலான மாவட்டங்களில் இல்லை. குறிப்பாக நெல்லை, விருதுநகர், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் எச்.ஐ.வியுடன் வாழும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் பலருக்கு கர்ப்பப்பை புற்று நோய்க்கான பாதிப்புகள் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு எச்.ஐ.வியுடன் வாழும் பல பெண்கள் இறந்துள்ளனர். மேலும், நெல்லையை தவிர மற்ற மாவட்டங்களில் கர்ப்பப்பை புற்று நோய்க்கான சிகிச்சை பெண் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மறுக்கப்படுகிறது. விருதுநகரில் 6 பேருக்கு கர்ப்பப்பை புற்று நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்த மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் வசதியில்லை. ஈரோடு மாவட்டத்தில் தன்னார்வ நிறுவனம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






















piragalaathan
chennai
3/14/2013 9:3:23
ஐய்யா.. நான் சென்னை வடபழனியில் குடியிருக்கிறேன்.. கங்கையம்மன் கோவில் முதல் தெருவில் ஒரு பிரியாணி தயாரிக்கும் இடம்.. காலை ஐந்து மணிமுதல் மாலை ஏழு மணி வரை பிரியாணி செய்து பல ஏரியாக்களில் உள்ள கடைகளுக்கு இங்கிருந்து தான் அனுப்பப்படுகிறது. அவர்கள் நன்றாக இருப்பதைப் பற்றி சொல்ல வரவில்லை. இன்றைய மாசுக் கட்டுப்பாடு என்று ஒரு விஷயம் இருக்கிறதல்லவா.. கிட்டத்தட்ட நெரிசலாக இருக்கும் எங்கள் பகுதியில் காலை முதல் மாலை வரை சுவாசிக்கும் காற்று புகைமண்டலக் காற்று தான். கொடுமை என்னவென்றால், பலமுறை இத்தகவலை பல இடங்களிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்திலும் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடைந்த மரக்கட்டைகளை வைத்து அடுப்பு எரிக்கிறார்கள். பல சமையங்களில் துர்வாடையும் வீசிக்கொண்டு இருக்கிறது.. ஒரு மயானத்தின் அருகில் குடியிருந்தாலும் எப்போதாவது தான் உடல் எரிக்கும் சந்தர்ப்பங்களில் புகை வரும்.. ஆனால், எங்கள் பகுதி மக்கள் தினமும் நச்சுக்காற்றை சுவாசித்தபடி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் எங்கள் பகுதியில் புகையால் ஏற்படும் டி.பி. நோய்க்கான தகுதி எல்லாருக்கும் உண்டாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண யாரை அணுகவேண்டும் என்று தெரியாமல் இருக்கும் சுற்று வட்டார நண்பர்களுடன் நானும் ஒருவன்.. ( கங்கையம்மன் கோவில் மீன் மார்கெட் அருகில் இருக்கும் பிரியாணி தயாரிக்கும் இடம்..) எவ்வளவு சுகாதாரக் கேடான இடம்.. இந்த பிரியாணியை எவ்வளவு பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை வேதனையோடு தான் எழுதுகிறேன்..