SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எட்டாக்கனியான விருது

2018-08-27@ 00:14:10

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நூற்றுக்கணக்கானோர் தேர்வு செய்யப்படுவர். இவ்வாண்டு நல்லாசிரியர் விருது எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்த மத்திய அரசு அதை அரங்கேற்றமும் செய்துள்ளது. சுமார் 300 பேருக்கு வழங்கப்பட்ட தேசிய நல்லாசிரியர் விருது இவ்வாண்டு வெறும் 45 பேருக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு பலர் விண்ணப்பித்த சூழலில், கோவையை சேர்ந்த தலைமை ஆசிரியை ஸதி(46) என்பவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வரும் 3ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் அவருக்கு 50 ஆயிரம் ரொக்கமும், வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட உள்ளது.

இம்முறை மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது சில கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. நாடு முழுவதும் பல ஆசிரியர்கள் சிறப்பாக சேவையாற்றி வரும் சூழலில், விருது  எண்ணிக்கையை குறைத்திருப்பது ஆசிரியர்களின் ஆர்வத்தை குறைக்கும். தேசிய நல்லாசிரியர் விருது தேர்வுக்கு பல்வேறு விதிமுறைகள் உண்டு. அதில் ஒன்று அவர்கள் ஏற்கனவே மாநிலத்தில் நல்லாசிரியர் விருது பெற்றிருக்க வேண்டும் என்பதாகும்.தமிழகம் மாதிரியான மாநிலங்களில் ஆசிரியர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப மாநில நல்லாசிரியர் விருதுகள் கல்வி மாவட்டத்திற்கு 5 என மாநிலம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இவர்கள் அடுத்தகட்டமாக தேசிய நல்லாசிரியர் விருது பெற முயல்வர்.

ஆசிரியர்கள் பிரதிநிதித்துவம் அடிப்படையில் இதுநாள் வரை தமிழகம் 22 தேசிய நல்லாசிரியர் விருதுகளை பெற்று வந்தது. அதாவது தொடக்க கல்வியில் 15 பேரும், உயர், மேல்நிலை கல்வியில் 7 பேரும் இவ்விருதினை பெறுவது வழக்கம். இப்போது தேசிய நல்லாசிரியர் விருது ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற நூற்றுக்கணக்கானோருக்கு தேசியவிருது பெருங்கனவாக மாறியுள்ளது. தேசிய நல்லாசிரியர் விருதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என கூறுவதற்கு இடமில்லை. ஏனெனில் தமிழகத்தை விட பெரிய மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் கூட ஒருவர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதை பெற்றுள்ளார். நாடு முழுவதும் 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் சிக்கிம், தெலுங்கானா, கர்நாடக மாநிலங்கள் மட்டுமே 3 விருதுகளை பெற்றுள்ளன.

மகாராஷ்டிரா, பீகார், ஒரிசா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இவ்வாண்டு ஒருவருக்கே தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதினை பெறுகின்றனர். ஆனால் ஒரு மாநிலத்திற்கு ஒரு தேசிய நல்லாசிரியர் விருது மட்டுமே வழங்கப்பட்டால், பள்ளி கல்வித்துறையின் வளர்ச்சி பாதிக்கப்படும். விருது பெற உழைக்கும் பல ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது என்பது எட்டாக்கனியாக மாறக்கூடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்