SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அணைக்கு காய்ச்சல் வந்த விவகாரத்தை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2018-08-25@ 01:21:42

மொட்டை மாடியில் இருந்து சீரியசாக விவாதித்துக் கொண்டிருந்தனர் விக்கியானந்தாவும் பீட்டர் மாமாவும். ‘‘திருச்சி முக்கொம்பு மேலணை இடிஞ்சதுக்கு காரணமே மணல் கொள்ளைதான்னு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியிருக்காங்க. அரசு அதுபத்தி எதுவுமே சொல்லலையா’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘சொல்லியிருக்காங்க..ஆனா வித்தியாசமா..’’ என்று சிரித்தார் விக்கியானந்தா.
‘‘அப்படியா..விவரமாத்தான் சொல்லேன்...’’

‘‘முதல்வர் எடப்பாடிதான் இதுக்கு விளக்கம் கொடுத்திருக்கார். மணல் அள்ளுறதுக்கும் அணை உடைஞ்சதுக்கும் சம்பந்தமே இல்லை. விதிமுறைப்படிதான் அணைகளுக்கு அருகில் மண் எடுக்கப்படுது என்று சொல்லியிருக்கார். அதோடு கூட நின்னிருக்கலாம்.. அப்புறமா சொன்னதுதான் விசேஷம்..’’

‘‘சஸ்பென்ஸ் வைக்காத.. சொல்லு..’’

‘‘மனுசனுக்கே காய்ச்சல் வருது. அணைக்கு வராதா. நல்லாத்தான் இருப்போம். திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுறது இல்லியா.. அதுமாதிரிதான் அணை. தண்ணீர் அழுத்தத்தால திடீர்னு உடைஞ்சிருச்சுனு சொன்னார்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விளக்கம் சூப்பரா இருக்கே..’’ என்று சிரித்த பீட்டர் மாமா, ‘‘மார்பிங் மேட்டர்ல கல்வித்துறை அதிகாரிகள் மண்டை காயுறாங்களாமே... என்னப்பா அது...’’ என்று கேட்டார்.

‘‘எல்லாம் திண்டுக்கல் மாவட்டத்துல இருக்கிற ஆர்.கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரான பழைய ‘மைக் நடிகர்’ பெயர் கொண்டவர் மேட்டர்தான்... இதுல பல தலை உருளுமோன்னு அதிகாரிகள் அச்சத்தோடு இருக்காங்களாம்... என்றார் விக்கியானந்தா

‘‘அதான் தலைமையாசிரியரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களேப்பா...’’

‘‘உண்மைதான்... ஆனாலும் புயல் வீசிட்டுதான் இருக்கு... தலைமையாசிரியர் மேல ஏற்கனவே கல்வித்துறை ஆண் - பெண் அலுவலரை மார்பிங் செய்து போட்டோ போட்டது உட்பட சில புகார்கள் இருக்கு... மாணவர்களின் பெற்றோரும் போராட்டம் நடத்துனாங்க... புகார் அடிப்படையில எங்கே நம்மை கைது செஞ்சுருவாங்களோன்னு, தலைமையாசிரியர் பயப்படுறாராம்... அதுக்காக குஜிலியம்பாறை ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான ‘பூவை’ முன்பெயராக கொண்டவரை, திண்டுக்கல் சிஇஓ அலுவலகத்திற்கே அழைச்சுட்டு போய் பஞ்சாயத்து பேசினாரு... இதுல ஜாதி பிரச்னையையும் சைடாக இழுத்து விடுறாங்களாம்... தனிப்பட்ட ஒரு பிரச்னையை ஜாதி பிரச்னையாக விஸ்வரூபம் எடுக்க வைக்கிறாங்களேன்னு, கல்வித்துறை அதிகாரிகள் கலக்கத்துல இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெயிண்ட் கடையில போய் பைன் கட்டுனு ஒரு ஹெட்மாஸ்டர் சொல்றாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவை துடியலூர் பன்னிமடையில் ஒரு அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. ஆரம்பத்தில் 1,200 மாணவ-மாணவிகள் கல்வி பயின்றனர். தற்போது, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக வெறும் 400 பேர் மட்டுமே படிக்கின்றனர். இங்கு, 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் யாரேனும் ஒருவர் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால், இப்பள்ளிக்கு சென்டம் வாய்ப்பு நழுவிவிடும் என்பதால் இங்குள்ள தலைமை ஆசிரியர் கடும் ஸ்டிரிக்ட்டா இருக்காராம். இதனாலேயே பாதி பேர் டி.சி வாங்கிக்கொண்டு வேறு பள்ளிக்கு போய்விட்டனர். இப்படி நாளுக்கு நாள் இப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், தலைமை ஆசிரியர் தனது குணாதிசயங்களை மாற்றிக்கொள்ளவில்லை. அவர், ஸ்டிரிக்ட் ஆசிரியராக இருப்பதுபோல் நேர்மையான நபர் இல்லை என இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர். உதாரணமாக, மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது, வகுப்பறையில் சிறு தவறு செய்வது என குறை கண்டுபிடித்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கிறார். இந்த அபராத தொகையை துடியலூரில் இருக்கிற ஒரு பெயிண்ட் கடையில போய் கட்ட சொல்றாராம். ஒரு மாதம் ஆனவுடன் மொத்தமாக அந்த தொகையை அள்ளிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிடுகிறார். மோசடி, சுருட்டல், ஏமாற்றுதல் என பலவகையான அத்துமீறல்களை கேள்விப்பட்டு இருக்கிறோம்... ஆனால், மாணவ-மாணவிகளிடமே இப்படி நூதன முறையில் பணம் சுருட்டும் தலைமை ஆசிரியரை இங்குதான் பார்க்கிறோம்...என மாணவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குமரி மாவட்ட விவகாரம் இருக்குன்னு சொன்னியேப்பா..’’

 ‘‘சொல்றேனே.. குமரி மாவட்டத்தில் மட்டும் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இதுவரை நடத்தப்படவில்லை. பலமுறை தேதி குறிப்பிடப்பட்டும், இடம் பார்க்கப்பட்டும் அதிமுகவில் இருந்து வந்த கோஷ்டி பூசல் காரணமாக விழா தள்ளி வைக்கப்பட்டே வந்தது. இந்தநிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டு கிழக்கு, மேற்கு என்று இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மீண்டும் எம்.ஜிஆர். நூற்றாண்டுவிழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் கன்னியாகுமரியில் லெமூரியா உலகத்தமிழ் ஆய்வு மையம் சார்பில் உலக தமிழ் ஆய்வு மாநாடு செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்து 22ம் தேதி முதல்வர் மாநாட்டில் பங்கேற்கும் வகையில் ஏற்கனவே தேதி வாங்கினர். இந்தநிலையில் 22ம் தேதி முதல்வர் குமரி மாவட்டம் வருவதால் அன்றே எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவை நடத்தி முடித்திட திட்டமிட்டு முதல்வரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாம். இனியேனும் அறிவிக்காமல் முடங்கிய திட்டங்கள், கிடப்பில் போடப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது’’ என்றார் விக்கியானந்தா.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்