SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ள அரசியல்

2018-08-25@ 01:03:37

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறில் இருந்து தமிழகம் திறந்துவிட்ட உபரிநீரே காரணம் என்று யாரும் ஏற்கமுடியாத ஒரு வாதத்தை கேரள மாநில அரசியல் தலைவர்கள் முன்வைத்துள்ளனர். 80 அணைகளை திறந்து விட்டதை அறிவித்த கேரள அரசு அதை சுலபமாக மறந்து விட்டு, தமிழகம் மீது திட்டமிட்டு குற்றம்சாட்டியிருப்பது வெள்ள அரசியல் தானே தவிர, உண்மை துளியும் இல்லை என்பது பலருக்கும் புரியும்.  ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய வளைவு அணை என்று பெயர் பெற்ற இடுக்கி அணையின் மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 403 அடி. இந்த அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறக்க கேரள அரசு ஆலோசனை நடத்தி முடிவு செய்தது. அதன்படி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து தண்ணீரை திறந்தது.

தண்ணீரை திறக்கும் நேரத்திலும் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது. உண்மை நிலவரம் இப்படி இருக்க, இடுக்கியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையின் உபரி நீரை திறந்துவிட்டதே காரணம் என்று கேரள மாநில அரசியல் தலைவர்கள் ஒட்டு மொத்தமாக குற்றம்சாட்டுவது ஏற்கக்கூடியதல்ல. முல்லைபெரியாறின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து 142 அடிவரை தண்ணீரை தேக்கிவைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதை கேரள அரசு அப்போதே ஏற்கவில்லை. அதனால் தங்கள் மாநிலத்துக்கு ஆபத்து என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 ஆனால் நீதிமன்றம் தனது உத்தரவில் உறுதியாக இருந்துவிட்டதால் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் முல்லைப்பெரியாறின் நீர்மட்டத்தை உயர்த்தியதை கேரளாவால் ஜீரணிக்கமுடியவில்லை. சரியான காரணம் கிடைத்தால் மீண்டும் போர்க்கொடி தூக்க காத்திருந்தனர். தற்போது இடுக்கி அணை நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்புகளை ஒருபுறம் சந்தித்து கொண்டே அண்டை மாநிலத்தின் மீது பழி போடும் அரசியல் தந்திரத்தை கையில் எடுத்துள்ளனர். முல்லைபெரியாறின் 13 மதகுகளையும் திறந்துவிட்டதே கேரள அரசு தான் என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. முல்லைபெரியாறின் நீர்மட்டத்தை 139.9 அடியாக பராமரித்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை வெளியேற்றியிருந்தால் கேரளாவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று ஒரு வாதத்தை கேரள அரசு முன்வைத்துள்ளது.

வெள்ளத்தை காரணம் காட்டி முல்லைப்பெரியாறின் நீர்மட்டத்தை பழையபடி 136 அடிக்கே நிலைநிறுத்திவிட வேண்டும் என்று அங்குள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒருங்கிணைந்து ஆலோசித்து தமிழகத்தின் மீது பழியை தூக்கி போட்டுள்ளது தார்மீக அரசியலின் முரண்பாடாகவே நன்கு புலப்படுகிறது. இடுக்கி அணை திடீரென திறந்துவிட்டதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து குடகு மாவட்டத்தில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று கர்நாடக மாநிலம் குற்றம்சாட்டினால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இயற்கை சேதங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்குரிய நிவாரணத்தையும், புனரமைப்பையும் மேற்கொள்வதை தவிர சிறந்த தீர்வு என்னவாக இருக்கமுடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 13-11-2018

  13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • HodeidahYemen

  ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

 • PizzaGuinnessArgentina

  அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

 • JordanFloodPetra12

  ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

 • EbolaCongoAfrica200

  தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்