SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஜி மீது பாலியல் புகார் தந்த பெண் எஸ்பி இடமாற்றம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2018-08-22@ 03:46:03

‘‘என்ன புள்ளிவிவரத்தை படிக்கிறீங்க விக்கி...’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்தவர்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுதியும் வெறும் 4 பேர் மட்டுமே மருத்துவ படிப்புக்கு தேர்வாகி இருக்காங்க... இந்த கல்வியாண்டில் அந்த நிலை 2 ஆக குறைந்தால் கூட அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்காதாம்... இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருத்தரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, கல்வித்துறையில் குழப்பம் இல்லாத நிலையிலேயே வெறும் 4 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்காங்க... இந்தாண்டு மேல்நிலை தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டதில் ஏகப்பட்ட குளறுபடிகள்... மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வை புரிந்து, தேர்வு எழுதியும் 80 சதவீத மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண்கள் கூட வாங்கலையாம்...

‘‘அடப்பாவமே, அப்புறம் என்ன?’’‘‘ இன்னும் கேளுங்க, அப்படியே பிளஸ்2 தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்றாலும் அவர்களுக்கு கட்ஆப் மார்க் குறைவாகவே வருமாம்... அப்புறம் நீட் எக்ஸாம்... இதையெல்லாம் மீறி ஆசிரியர்கள் இடமாறுதால் பல பள்ளிகளில் இன்னும் கணக்கு, இயற்பியல், வேதியியல் உள்பட முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையே நீடிக்கிறதாம்... இதற்கு காரணம் அந்தப் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் இடமாறுதலில் வேறு பள்ளிகளுக்கு போய்ட்டாங்களாம்... இதனால் ஆசிரியர்கள் இல்லாமலேயே வட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தடுமாறுகிறார்கள்... கல்வித்துறையில் மிகவும் பின் தங்கி இருப்பது வட மாவட்டங்கள்தான்... இது இல்லாமல் ஆசிரியர்களும் பயிற்சிக்கு சென்றுவிடுவதால் சில பள்ளிகளில் மாணவர்களே ஆசிரியர்களாக மாறி பாடம் நடத்தும் நிலையும் இருக்காம்... இவ்வளவு குழப்பங்களுக்கு இடையில் அரசு பள்ளி மாணவர்கள் இந்த கல்வியாண்டில் மருத்துவ படிப்பு என்பது பெரும் குழப்பமாகவே இருக்கும்னு பெற்றோர்கள் மட்டும்  சொல்லவில்லை... கல்வித்துறையில் உள்ள உயரதிகாரிகளே பேசிக்கிறாங்க...

நானும் அது உண்மையான்னு சில ஆசிரியர்களிடம் விசாரித்தேன்... அவர்களும் அதை உறுதி செய்து இருக்காங்க... மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் வீழ்ச்சி என்பது தமிழக சுகாதாரத்துறையில் எதிர்காலத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் மட்டுமல்ல தற்போது மருத்துவம் படித்து வரும் மாணவர்களும் சொல்றாங்க...’’ என்று தன் வேதனையை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார் விக்கியானந்தா.‘‘அந்த இரண்டு பேரை மறந்துட்டீங்களே, எப்டி...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லைனு சொன்னாரே தெர்மோகோல் மினிஸ்டர் அவரைப் பற்றியா... எத்தனையோ பேர் இப்படி சொன்னதை பார்த்து இருக்கோம்... அப்டியும் இவர்  பேசுவதை நினைத்து சிரிப்பதா அழுவதான்னு தெரியல... ஏன்னா இடைத்தேர்தல் எப்போது நடக்கும்னு அறிவிக்கல... ஆர்கேநகர் தேர்தல் தோல்வியை மக்கள் மறக்கலை என்பதை தெர்மோகோல் மினிஸ்டர் மறந்துட்டார் போலிருக்கே...

அப்புறம் ரெண்டாவதாக ஆர்கேநகர்காரர், இந்த ஆண்டுல நடக்காத தேர்தலுக்கு வேட்பாளரை தேர்வு செய்து அதை வெளியிடவும் தயாராக இருக்கார்... அந்த பட்டியலை கொடுத்து ஆசிர்வாதமும் வாங்கிட்டார்... சிறைப்பறவையிடம் அந்த பட்டியலை காட்டி ஒப்புதல் பெற்ற பிறகு, இடைத் தேர்தல் நடக்குமானு அவர் கேட்டதுதான் ஹைலைட்... இரண்டு பேரும் இந்த ஆண்டு நடக்காத இடைத்தேர்தலுக்கு தயாராகி வருவதுதான் மறக்க முடியாத விஷயங்களாக மாறி வருது...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாத விஷயம் திசை மாறிப்போனா எப்டி இருக்கும்...’’ என்று கேட்டர் பீட்டர் மாமா. ‘‘சில துறைகளில இது பெரிசா தாக்கத்தை ஏற்படுத்தாது... ஆனா முக்கியமான நபர்கள் இதுபோல இருந்தா ஒரு நோக்கத்தின் அடிப்படையே தகர்ந்துவிடும்... அப்படிதான் தூத்துக்குடியில நடந்த சம்பவத்தை நான் பார்க்கிறேன்... தூத்துக்குடியில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கடந்த வாரம்.. மாணவ, மாணவிகளுக்கு நடந்த ெபாது நிகழ்ச்சியில் பங்கேற்று, எந்த பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல என்ற தலைப்பில் விளக்கமளித்து சில மணிநேரம் பேசினார்... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், மாணவர்களும் அதை ஏற்று கைதட்டி பாராட்டி அவரது கருத்தை ஏற்றுக் கொண்டனர்...

ஆனால் துரதிருஷ்டவசமான சம்பவம் என்ன தெரியுமா... பிரச்னை தீர தற்கொலை தீர்வல்ல என்று சொன்ன அந்த பெண் அதிகாரியே ஒரு பிரச்னைக்காக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அமைச்சர்களுக்கு பேசதான் தெரியலைன்னு நினைச்சா... மோசடி நிறுவனம் எது... நல்ல நிறுவனம் எதுன்னு தெரியாத அமைச்சரை பற்றி என்ன நினைக்கிறீங்க...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நகைக்கடை பல இடங்களில் கிளைகளை தொடங்கி, பொதுமக்களிடம் டெபாசிட் தொகை வசூல் செய்தாங்களா... ₹1.5 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு மாதங்களில் ₹2.32 லட்சம் முதிர்வு தொகை திருப்பி தருவதாக முத்திரை தாளில் ஒப்பந்த பத்திரம் தயார்செய்து கொடுத்துள்ளனர். அந்த நிறுவனம் ஏமாற்று நிறுவனம் என்பது தெரியாமல் கோபியில் புதிய கிளையைதான் அமைச்சர் ஒருவர் திறந்து வைத்தாராம்... திறப்பு விழாவுக்கு போகும் முன்பு அந்த கடை பற்றிய பின்னணியை ஆராயமல் சென்றது தவறு என்று அமைச்சரின் அடிபொடிகளே பேசிக்கிறாங்க...’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.

‘‘என்ன விக்கி போலீஸ் துறையில ஓரவஞ்சனை...’’‘‘நீ என்ன கேட்க வர்றேன்னு புரியுது; பரபரப்பபாக செய்தியில வந்தாங்க; இன்னிக்கு மாத்திட்டாங்களேன்னு கேக்கறே. உண்மை தான். லஞ்ச ஒழிப்புத்துறையில பாலியல் புகார் கொடுத்த பெண் எஸ்பியை மாற்றிட்டாங்க... பொதுவாகவே ஒரு குறிப்பிட்ட நபர் மீது புகார் வந்தாலே, புகாருக்கு உள்ளானவரும் புகார் கொடுத்தவரையும் வேறு பிரிவுக்கு மாற்றிடுவாங்க... அப்போதுதான் புகார் குறித்து உண்மையான விசாரணை நடக்கும்போது எந்த அதிகாரிகளும், ஊழியர்களும் யாருக்கும் பயப்படாமல் சாட்சி சொல்வாங்க... இங்க புகார் கொடுத்த பெண் எஸ்பியை மாத்திட்டு, இவ்ளோ பிரச்னைக்கும் காரணமான ஐஜியை மட்டும் பணியில் தொடர அரசு அனுமதித்து இருப்பது சரியாக இருக்காதுன்னு காவல் துறையினர் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்