SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆம்பூர் அருகே சுற்றுலா தலமாக்க கோரிக்கை அரண்கள் சூழ்ந்த அரங்கல்துருகம் மலைக்கோட்டை

2018-08-21@ 19:23:29

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் வட்டத்தில்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ளது அரங்கல்துருகம் ஊராட்சி. இங்கு 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஆந்திர மாநிலம் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காடுகளை ஒட்டியுள்ள ஆம்பூர் வனச்சரக காப்புக்காடுகளின் அருகே இந்த ஊராட்சி அமைந்துள்ளது.  இங்கு பொன்னப்பல்லி இடையன் கல், சுட்டக்குண்டா ராணுவ சாலை, மலையாம்பட்டு  ஆர்மா மலை, மத்தூர் கொல்லை நந்திசுனை போன்ற பழங்கால சின்னங்கள் இந்த பகுதிகளில் காணப்படுகிறது.  ஆம்பூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவிலும், சாரங்கல் மலைக்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலும் அரங்கல்துருகம் ஊராட்சியின் மையத்தில் துருகம் மலைக்கோட்டை உள்ளது.  

பொதுவாக மலைமீது கோட்டை அமைந்துள்ள பகுதியை ‘துருகம்’ என்பார்கள். இந்த ஊரில் உள்ள மலைக்கோட்டை கற்களால் அரண்கள் சூழ் கோட்டையாய் இருப்பதால் ‘அரண்கல் துருகம்’ என அழைக்கப்பட்டு, அதுவே நாளடைவில் மருவி ‘அரங்கல்துருகம்’ எனப்பெயர் பெற்றிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அரங்கல்துருகம் மலைக்கோட்டைக்கு எந்த பக்கமும் வழியே கிடையாது. கோட்டையின் வடமேற்கு திசையில், மலையின் அடிவாரத்தில் ஹஜ்ரத் சையத் மீரான் ஷஹீத் அவுலியா சாஹெப் தர்கா அமைந்துள்ளது. இந்த புகழ்பெற்ற தர்காவில் உரூஸ் விழா கொண்டாடப்படுகிறது. இந்த தர்கா வரை மட்டும் முறையாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. தர்காவை கடந்து,  மலைமேல் உள்ள கோட்டைக்கு கயிற்றின் மூலம் மட்டுமே செல்ல முடியும். அதனருகே கோட்டையின் தென்மேற்கு பகுதியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கிணறு பாழடைந்த நிலையில் சுற்றுச்சுவருடன் காணப்படுகிறது.

அடுத்து மலை மேலே ஏறி சென்றால் ‘மகாராணி நீச்சல் குளம்’ என அழைக்கப்படும் நீச்சல் குளம் காணப்படுகிறது.  இந்த குளம் பாறைப்பகுதியால் இணைக்கப்பட்டு மேற்கு, கிழக்கு, வடக்கு பகுதிகள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. சுமார் 5 அடி முதல் 7 அடி ஆழம் வரை இந்த குளத்தின் நீளம் 20 அடி, அகலம் 15 அடி ஆகும். இந்த மகாராணி நீச்சல் குளத்தை ஒட்டி மேற்கு பகுதியில் ‘மகாராஜா நீச்சல் குளம்’ என அழைக்கப்படும் குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 20 அடி ஆழம் வரை அமைந்து உள்ளது. அந்த குளத்தின் உள்ளே இறங்குவதற்கு முறையாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குளம் முட்புதர்களால் சூழ்ந்துள்ளது. மலைக்கோட்டையின் கிழக்கு பகுதியில் பாதாள கிணறு ஒன்று பாறையில் நீளமாய் அமைந்துள்ளது. அந்த பாதாள கிணற்றில் எக்காலத்திலும் நீர் வற்றுவது இல்லையாம்.  கோட்டையின் தெற்கு பகுதியில் ரகசிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

பாறையிடுக்குகளின் வழியே செல்லும் இந்த சுரங்கப்பாதை, மேற்கு பகுதியில் மலையடிவாரத்தில் முடிவடைவதாக கூறப்படுகிறது. அந்த சுரங்கப்பாதை செல்லும் வழிக்கு மேற்கே பாறையில் குடையப்பட்ட படுக்கையறை போன்ற அமைப்பு உள்ளது. அதில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில்  படுத்து தூங்கும் வசதி உள்ளது. மேலும், இந்த மலைக்கோட்டைக்குள் உணவு சமைப்பதற்கான வசதிகள், உரல்கள் காணப்படுகின்றன. இந்த அரங்கல்துருகம் மலைக்கோட்டைக்குள் எந்த காலத்திலும், எந்த பக்கத்திலும் மேலே உள்ள கோட்டைக்குள் செல்ல முடியாதவாறு அமைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும் இந்த அரிய பொக்கிஷத்தை சம்பந்தப்பட்ட வரலாறு மற்றும் தொல்லியல் துறையினர் சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆம்பூர் அருகே உள்ள இத்தகைய கோட்டைகள் பராமரிக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்ற ஆம்பூர் ஒரு மிகப்பெரிய சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PuyalGaja2

  புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

 • EidEMIladunNabi

  மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

 • SidhaindaVazhkaiGaja

  கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

 • NabiBdaykabulBlast

  ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

 • TurkeyThanksGvingTrump

  வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்