SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவல்துறையில் கறுப்பு ஆடு

2018-08-21@ 00:27:11

வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதைத் தவிர்க்க 2013ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. பல ஆண்டுகளாக  தமிழக காவல்துறையில் இந்த குழு அமைக்கப்படவில்லை என்ற புகார் இருந்தது. தற்போது கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் இந்த குழு  அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் கூடுதல் டிஜிபி அருணாசலம், டிஐஜி தேன்மொழி,  ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்ட் சரஸ்வதி, டிஜிபி அலுவலக  சீனியர் நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த குழு விசாரிக்கும் முதல் புகாரே மிகவும்  பரபரப்புக்குள்ளாகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக இருக்கும் ஒருவர், தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை  கொடுத்தார் என்ற புகார் தான் அது.

தனது அறையில் வைத்து ஆபாச படங்களைக் காட்டியதுடன், அறையை தாழிட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஐஜி மீது பெண் எஸ்பி  பரபரப்பு புகார் கூறியுள்ளார். அத்துடன் வேலைநேரத்தில் தனக்கு ஆபாசமான எஸ்எம்எஸ்கள் அனுப்புவது, ஆபாச படங்கள் அனுப்புவது என ஐஜியின்  தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பலமுறை அவருடைய அறையில் வைத்து ஆபாச படங்களைக் காட்டி பாலியல் ரீதியாக  தன்னிடம் தவறாக நடக்க முயன்றுள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த 7 மாதங்களாக இதுபோன்ற தொல்லை தந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி,  இதுகுறித்து வெளியில் சொன்னாலோ, புகார் அளித்தாலோ ஆண்டுதோறும் வழங்கப்படும் நன்னடத்தை அறிக்கையில் மோசமான வார்த்தைகளைச்  சேர்த்து எதிர்காலத்தை நாசமாக்கி விடுவேன் என மிரட்டியதாகவும், அந்த பெண் எஸ்பி புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து தான் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது. 90 நாட்களுக்குள்  விசாரணையை  மேற்கொண்டு, அறிக்கையை ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது.பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையில்  பணியாற்றும் பெண் உயர் அதிகாரிக்கே, அவருடைய மேலதிகாரியால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால், பொதுமக்களின்  பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது. எனவே, காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக  முதல்வரின்  கடமையாகும். பணியாற்றும் இடங்கள் தான் கோயில்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், பயிரை மேய முயன்ற  வேலி  மீது உடனடியாக வழக்குத் தொடுக்க வேண்டும்.

ஏனெனில், புகாருக்குள்ளான நபர், மிகப்பெரிய உயர்பதவியில் உள்ளவர். அவர் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், டிஜிபி, உள்துறை  செயலாளரிடமும், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் முதல்வரின்  செயலாளரிடம் அளித்த புகாரின் பேரில் இந்த பிரச்னை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துணிச்சலுடன் புகார் அளித்த அந்த பெண்ணுக்கு உரிய  பாதுகாப்பு அளிப்பதுடன், தமிழக முதல்வர் நேரடியாக இப்பிரச்னையில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின்  வலியுறுத்தலாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்