SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுவாரா இம்ரான்?

2018-08-20@ 00:07:17

ஒரு வழியாக 20 ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் பிரதமர் பதவி என்னும் பிரதான விக்கெட்டை இம்ரான் கான் வீழ்த்திவிட்டார். சர்வதேச அளவில் ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு நாட்டின் பிரதமர் ஆகியிருப்பது இதுவே முதல்  முறை. பிரதமர் சிம்மாசனம் கிடைத்திட ராணுவத்தின் பங்களிப்பும் அதிகம். முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு சிறைதண்டனை, முன்னாள் அதிபர் ஆசிப் அலி மீது பொருளாதார குற்ற வழக்குகள் என எதிரணிக்கு பாதகமான  விஷயங்களை ராணுவமே முன்னின்று நடத்தியது. இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் இம்ரானின் இமேஜ் ஆட்ட நாயகன் அந்தஸ்தோடு பளிச்சிட பிரதமர் கனவு அவருக்கு கைகூடியது. பாகிஸ்தான் 22வது பிரதமராக அவர் பதவி ஏற்று கொண்டாலும், இனிமேல் எதிர்கொள்ளும் சவால்களும், சச்சரவுகளுமே அவரது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும். பாகிஸ்தான் பிரதமர் பதவி என்பது பஞ்சு போர்த்திய  நெருப்பு இருக்கைக்கு சமமானது. பொருளாதார நெருக்கடியும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் நிறைந்த பாகிஸ்தானில் எப்போது என்ன நடக்கும் என்பதை அந்நாட்டு அரசாலே கணிக்க இயலாது. பவுன்சர்களும், வொய்டு பந்துகளும்  அடிக்கடி விழும் ஒரு ஆடுகளத்தில், தலைசிறந்த துடுப்பாட்டக்காரராக இம்ரான் சாதித்தாலே அது மிகப்பெரிய வெற்றி.   

ஊழலை ஒழிப்பேன். வளமுள்ள இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை மாற்றுவேன் என இம்ரான்கான் சூளுரைத்திருக்கிறார். பாகிஸ்தான் இன்றுள்ள பொருளாதார நெருக்கடியில் ஊழலை ஒழிக்க அவர் பல சவால்களை  எதிர்கொண்டாக வேண்டும். கடன் சுமையில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடியில் இருந்து தற்காலிக மீட்சி தேவை. பாகிஸ்தானை பொறுத்தவரையில் அண்டை நாடுகளுடன் நல்லுறவு என்பது தீராத தலைவலி.  ராணுவத்தின் கருத்திற்கு ஒத்திசைந்து அண்டை நாடுகளை அரவணைப்பது என்பது அசாத்திய கலை. இனிவரும் நாட்களில் இம்ரான் அதை கற்றாக வேண்டும்.பாகிஸ்தான் ஆட்சியையும், அரசியலையும் பெரும்பாலும் தீர்மானிப்பது ராணுவமும், ஐஎஸ்ஐ உளவு அமைப்புமே ஆகும். அவர்களோடு கைகோர்த்து கொண்டு, உள்நாட்டு பயங்கரவாதத்தையும் இம்ரான்கான் ஒழித்தாக வேண்டும்.  ஒரு கூட்டு கிளியாக வாழ்ந்த இந்தியாவும், பாகிஸ்தானும் எலியும், பூனையுமாக காஷ்மீர் விவகாரத்தில் நிற்கின்றன. இந்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க புதிய அரசியல்வாதி என்ற கணக்கிலே பாகிஸ்தானின்  அடிப்படைவாத குழுக்கள் இம்முறை இம்ரான்கானுக்கு ஆதரவை அளித்தன.

‘காஷ்மீர் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா ஒரு அடி வைத்தால், நாங்கள் இரு அடி முன்னே வைப்போம்’ என இம்ரான்கான் தற்போது தெரிவித்திருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் ராணுவமும், அங்குள்ள  மற்ற அமைப்புகளும் இதற்கு எப்படி அனுமதி வழங்கும் என தெரியவில்லை. பாம்பும், கீரியுமாக வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த வடகொரியாவும், தென்கொரியாவும் இப்போது நட்பு நாடாகிவிட்டன. இந்தியாவும், பாகிஸ்தானும்  நேர்கோட்டில் பயணிக்க பாகிஸ்தானின் புதிய ஆட்சி வழிகோல வேண்டும். பாகிஸ்தான் தேர்தல் களத்தில் இம்ரான்கான் அடிக்கடி உச்சரித்த வார்த்தை ‘மாற்றம்’. இந்திய - பாகிஸ்தான் உறவிலும் அம்மாற்றம் உருவானால்  வரவேற்கத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்