SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரள அரசுக்கு தேவையான நிவாரணம், நிதி உதவிகளை தாராளமாக வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

2018-08-19@ 00:27:03

சென்னை: “ கேரள அரசுக்கு தேவையான நிவாரணம், நிதி உதவிகளை தாராளமாக வழங்கிட முன் வர வேண்டும்” என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரிடரில் 324 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற துயரச் செய்தி இதயத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. இந்நிலையில் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி வைத்து விட்டு, பெருந்துயரத்தில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு நேசக்கரம் நீட்டி அவர்களை இந்த பேராபத்திலிருந்து உடனடியாக மீட்பதற்கும், வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கவும் மத்திய அரசு உடனடியாக உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு மாநில மக்கள் துன்பத்தின் உச்சியில் துடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டியது அண்டை மாநிலங்களின் கடமை மட்டுமல்ல-தமிழர்களுக்கே உள்ள இயற்கையான குணம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, கேரள அரசுக்கு தேவையான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் தாராளமாக வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.இது தவிர உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி தங்களின் வீடுகளையும் இழந்த மக்களை கேரள மாநில அரசு முகாம்களில் தங்க வைத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது. மனித நேயமிக்க இந்தப் பணியில் திமுகவும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆகவே திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் திமுகவினரிடமும், தாமாக மனமுவந்து உதவி செய்ய முன் வரும் பொதுமக்களிடமும் போதிய உணவுப் பொருட்கள், துணி மணிகள், போர்வைகள், நேப்கின்கள் உள்ளிட்ட அன்றாட தேவைக்குப் பயன்படும் பொருட்களைச் சேகரித்து கேரள மாநிலத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் மூலம் அம்மாநில மக்களுக்கு அளித்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு வழங்கப்படும் பொருட்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோபி அன்னான் மறைவுக்கு இரங்கல்

திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளரும், நோபல் பரிசு  பெற்றவருமான கோபி அன்னான் மறைவுச் செய்தியறிந்து  வேதனையடைந்தேன். ஐ.நா.வின் மறுசீரமைப்புக்கும், உலகளவில் அமைதியை ஏற்படுத்தி  புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகளை உருவாக்குவதற்கும் அவர் மேற்கொண்ட  முயற்சிகள் என்றைக்கும் நினைவில் நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு என்ன ஆனது?

திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கும், அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அறிக்கையின் விவரங்களையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக வெளியிட வேண்டும்.கடந்த காலத்தில் குட்கா பற்றிய வருமான வரித்துறை அறிக்கை தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் காணாமல் போனது போன்ற அவலநிலை இதிலும் ஏற்பட்டு விடாமல், இந்த அறிக்கை என்ன ஆயிற்று என்பதை தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும், தலைமை செயலாளரும் உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-01-2019

  12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்