SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்டர் மாமா wiki யானந்தா

2018-08-18@ 00:12:11

‘‘டிடிவி கட்சியின் நிலவரம் என்ன’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் பதவியில் இருந்து பல கோடி ரூபாய் சுருட்டிய, இப்போது டிடிவி தினகரன் கட்சியில் இருக்கும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னசாமி தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இவரது பார்ட் னராக ஒரு கோயம்புத்தூர்காரர் இருக்கிறார். பேலஸ் என்ற பெயரில் வணிக வளாகம் நடத்துகிறார். இவரும், அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர். இவர்கள் இருவரும் சேர்ந்து அவினாசி ரோடு நவஇந்தியா அருகே சட்ட விரோத சீட்டாட்ட கிளப் நடத்தி வருகிறார்கள். இங்கு சீட்டு விளையாட வரும் பல பெரிய புள்ளிகளிடமிருந்து இவர்கள் ரூபாய் நோட்டை உருவிக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது சின்னசாமி சிறை சென்றுவிட்டதால், பேலஸ் சாமிதான் எல்லா கணக்கு வழக்குகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். கோவையில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மொத்தமாக சரக்கு பெற்று, கோவையில் உள்ள பல நட்சத்திர ஓட்டல் பார்-களுக்கு இவர்தான் சரக்கு சப்ளை செய்கிறார். இதிலும், பல லட்சம் ரூபாய் அள்ளுகிறார். இதுபோன்று, இவர் மீது ஏராளமான மோசடி புகார் குவியுது. சின்னசாமியை தொடர்ந்து பேலஸ் சாமிக்கும் தமிழக போலீசார் வலைவிரித்துள்ளனர். ஆளும்கட்சி பிரஷர் காரணமாக இவரும் சிக்குவார் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. ஏதாவது ஒரு அரசியல் கட்சி பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே இவரும் டிடிவி அணியில் அடைக்கலம் புகுந்துள்ளார். எந்த கட்சியில் சேர்ந்தாலும் கவலையில்லை, உள்ளே போவது உறுதி என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சசிகலா உடல் நலத்திற்காவும் எதிரிகளை வீழ்த்தவும் சிறப்பு பூஜை நடந்ததாமே..’’ என ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தஞ்சை அடுத்த வெண்ணாற்றங்கரையிலுள்ள தஞ்சை புரீஸ்வரரை, குபேரன் வழிபட்டு பல்வேறு பேறு பெற்றதாக வரலாறு கூறுகிறது. இதனால் வாரந்தோறும் பக்தர்கள் வந்தாலும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கூட்டம் அதிகமாக வரும். இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் டிடிவி தினகரனின் மைத்துனர் வெங்கடேசன், இவரது மாமனார் பட்டுக்கோட்டை பாஸ்கர் மற்றும் சிலர் தஞ்சை புரீஸ்வரர் கோயிலுக்கு மூன்று கார்களில் வந்தனர். ஒரு சொகுசு கார் பெங்களூர் பதிவு எண்ணில் இருந்தது. பின்னர் கோயிலின் தெற்கு பக்கத்தில் இருக்கும் விநாயகரை வழிபட்டு, வடக்குபுறத்தில் உள்ள முருகனையும், தெற்கு திசையை நோக்கி இருக்கும் கேட்ட வரம் தரும் பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டு, பிரகாரம் சுற்றி வந்து மூலவரை தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூஜைக்கு பின்னர் விபூதி, மலர், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதனை பயபக்தியுடன் பெற்று கொண்டு பெங்களூரு பதிவெண் கொண்ட காரில் வைக்கப்பட்டது. சுமார் 1 மணி நேர தரிசனத்திற்கு பின் கார் புறப்பட்டு சென்றது.

கோயில் தரப்பில் கூறுகையில், சிறையில் உள்ள சசிகலா பெயரில் பூஜைகள் நடத்தப்பட்டதாகவும், சசிகலாவிற்கு சகல விதமான யோகங்களுடன் உடல் நலமுடன் இருப்பதற்காகவும் பல்வேறு பிரச்னைகளால் பிரிந்த குடும்பம் ஒன்று சேருவதற்காக பூஜைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதுபோல் டிடிவி தினகரன் ஆட்சி அதிகாரங்கள் பெறுவதற்கும், எதிரிகளை வீழ்த்துவதற்காக சிறப்பு பூஜைகள் தனியாக நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘அறிஞர் பேரு கொண்ட பல்கலைக்கழகத்துல இயற்பியல் துறைக்கு பயங்கர மதிப்புன்னு பேசிக்கிறாங்களே... அப்படியா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா..‘‘அது ஒன்னுமில்ல.. இதுக்கு முன்னால் இருந்த பதிவாளர் இயற்பியல் துறையை சேர்ந்தவர். முறைகேடு புகாரில் அவர் திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய பதிவாளராக நியமிக்கப்பட்டவரும், இயற்பியல் துறையை சேர்ந்தவர்தான். ஏற்கனவே இருந்த பதிவாளரும் அவரும் நண்பர்களாம். இயற்பியலுக்கும், தொழில்நுட்பத்துக்கும் இடையே தொடர்பு அதிகம் என்றாலும், பல்கலைக்கழகத்தில் இயற்பியலுக்கும் நிதி நிர்வாகத்துக்கும் அதைவிட தொடர்பு அதிகமா இருக்குதாம். அதனால் இயற்பியல் துறைக்குத்தான் மதிப்புன்னு சொன்ன பேராசிரியர்கள், இனி வரும் நாட்களில் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகளுக்கு பஞ்சமிருக்காதுனு பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புது விவகாரம் ஏதுமிருக்கா..’’ ‘‘விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பத்திர பதிவு அலுவலகத்தில் சோலார் மின் திட்ட நிறுவனத்துக்காக கிராம மக்கள் தங்கள் நிலங்களை விற்பனை செஞ்சுட்டு வர்றாங்க... இரவு, பகலாக பத்திரப்பதிவு கனஜோராக நடந்துக்கிட்டிருக்கு... ஒரு நாளைக்கு 20க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவுக்காக வருகிறதாம்... ஆனால் பத்திரப்பதிவு மிகவும் மந்தமாக நடக்கிறதாம். அந்த அலுவலகத்துல புதுசா ‘மலரின் பெயர் கொண்ட’ ஒரு சார்பதிவாளர் வந்திருக்காங்க... அவங்க ஏற்கனவே விருதுநகரில் வழிகாட்டி பதிவு பிரிவில் இருந்து பதவி உயர்வில் திருச்சுழிக்கு சார்பதிவாளரா வந்திருக்காங்க... அவங்களுக்கு சார்பதிவாளர் தொடர்பான பதிவு விபரங்கள் எதுவும் தெரியலையாம்... அதனால அலுவலக உதவியாளர் முதல் பதிவுக்கு வரும் எழுத்தர்கள் சொல்வதை வேதவாக்காக கொண்டு பதிவு செய்து வருகிறாராம்... ஆன்லைன் பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில், சார்பதிவாளருக்கோ கம்ப்யூட்டர் அறிவு ரொம்ப மந்தம்னு ஆபிஸ்ல பேசிக்கிறாங்க. ஆனா பதிவு விஷயம் மட்டும்தான் ஸ்லோவாக போகுதாம். வசூலும், புரோக்கர்கள் கமிஷனும் மட்டும் ரொம்ப வேகமாக நடக்கிறதாம்....’’ என்றார் விக்கியானந்தா.‘‘அதெல்லாம் இருந்தால்தானே அது அரசு ஆபீஸ்... நீர் வேற...’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்