SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகத்தான மக்கள் சேவகர்

2018-08-17@ 01:56:40

3 முறை பிரதமர் பதவி வகித்தவர், 47 ஆண்டுகள் எம்பியாக இருந்தவர், அனைத்து கட்சிகளாலும் மதிக்கப்பட்ட, நாட்டின் முதுபெரும் தலைவர் வாஜ்பாய் காலமானார். ஆர்எஸ்எஸ் சார்பாக வந்த முழுநேர மக்கள் சேவகர். அனைவரையும் அரவணைத்து செல்லும் மிகச்சிறந்த பண்பாளர். அனைத்து தலைவர்களையும் மதிப்பவர். அவர்களது கருத்துக்கு செவிகொடுக்கக்கூடியவர். அதனால்தான்  காங்கிரஸ் அல்லாத பிரதமரில் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த முதல் பிரதமர் என்ற பெயரை அவரால் ெபற முடிந்தது.
அனைவரையும் இணைக்கும் தலைமை பண்பு அவருக்கு இருந்தது. சிறந்த படிப்பாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், மிகச்சிறந்த கவிஞர். பல்வேறு குண நலன்கள் அவருக்கு. 1957ல் முதல்முறை எம்பியாக தேர்வான அவரது முதல் நாடாளுமன்ற பேச்சைக்கேட்டு, அப்போதைய பிரதமர் நேரு அசந்துவிட்டார். தட்டிக்கொடுத்த அவர் ஒருநாள் நிச்சயம் இந்திய பிரதமராக வாஜ்பாய் வருவார் என்று அப்போதே கூறினார். அவர் கணிப்பு 1996ல் நிஜமானது.

அரசியல் வாழ்வில் அத்வானி போர்க்குணத்தை கடைபிடித்து கட்சியை வளர்த்தார். வாஜ்பாய் மென்மையான அணுகுமுறையால் மக்களை ஈர்த்தார். கட்சியை கட்டமைத்தார். அதனால்தான் முதல் தேர்தலில் 2 எம்பிக்களை பெற்ற பா.ஜனதா இன்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.யாரையும் கடிந்து பேசாதவர். எதிர்கருத்து கொண்டோரையும் மதிக்க கூடியவர். அவர்களது கருத்துக்கு செவி கொடுக்க கூடியவர். எதிலும் கலங்காதவர். கொள்கை மாறாதவர். 1996ல் முதல் முறை பிரதமரான போது ஆட்சி 13 நாளில் கலைந்த போதும், இரண்டாம் முறை 13 மாதங்களில் கவிழ்ந்த போதும் அசரவில்லை. அதனால்தான் 1998ல் தனிப்பெரும் கட்சியாக வந்து, மாநில கட்சிகளின் ஆதரவுடன் 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமர் பதவியில் நீடிக்க முடிந்தது.

பொக்ரான் அணு குண்டு சோதனை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்கநாற்கர சாலை, பாகிஸ்தானுடன் நல்லுறவு முயற்சி, அதற்காக லாகூர் வரை பேருந்து சேவை தொடங்கியது, அந்த பஸ்சில் தானே சென்று பேச்சுவார்த்தை நடத்தியது, அதன்பின்னும் திருந்தாமல் கார்க்கிலை கைப்பற்ற முயன்ற பாகிஸ்தான் மீது நேரடி போர் தொடங்கி கதற வைத்தது என அவரது 6 ஆண்டுகள் 80 நாள் ஆட்சிகாலம் இந்தியாவின் வளர்ச்சி பாதையை முழுமையாக மாற்றி அமைத்தது. மாநிலங்களின் மதிப்பு மத்தியில் உயர்ந்த காலம் அது.காபூல் விமான கடத்தல், நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கோத்ரா ரயில் எரிப்பும் அதை தொடர்ந்த கலவரம் ஆகியவை 2004ல் வாஜ்பாய் ஆட்சியை வீழ்த்தினாலும், இந்தியாவை வளர்ச்சி நோக்கி பயணிக்க வைத்த மக்கள் சேவகர் வாஜ்பாய். 2005ல் அரசியலில் இருந்து முழு ஓய்வு பெற்றார். தற்போது உலக வாழ்வில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது கவிதை வரிகள் தான் நெஞ்சில் வந்து நிற்கிறது..

‘‘பச்சைப் பசும்புல்லில் பனித்துளிகள், இதோ இருந்தன இப்போது இல்லை, எப்போதும் நம்முடன்வரும் இனிமைச் சுகங்கள் என்றும் இருந்ததில்லை எங்கும் இல்லை...!’’


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-01-2019

  12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்