SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியல் நெருக்கடி பற்றி புலம்பி தள்ளிய கலெக்டரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2018-08-16@ 00:26:51

‘‘அரசியல் நெருக்கடியால அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப முடியலைன்னு, ஒரு கலெக்டர் புலம்பி தள்ளியிருக்காங்க தெரியுமா...’’ என வாக்மேனில் வந்தே மாதரம் கேட்டபடியே வந்தார் விக்கியானந்தா. ‘‘அட கஷ்ட காலமே... யாருப்பா அந்த கலெக்டர். இப்பிடி உக்காந்து நிதானமா சொல்லு..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சிவகங்கை கலெக்டர்தாம்பா... மாவட்டத்துல மொத்தம் 855 அங்கன்வாடி பணியிடங்கள் காலியாக கிடக்காம்... இப்பணியிடங்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இன்டர்வியூ எல்லாம் நடத்திட்டு, இறுதிப்பட்டியலையும் ரெடி செஞ்சுட்டாங்களாம்... ரெடி பண்ணதோடு சரி... யாரையும் பணிக்கு நியமிக்கலை... இதுவரை பணியிடங்கள் காலியாகவே இருக்கு... இதனால் பெரும்பாலான அங்கன்வாடி மையங்களை ஒரு பணியாளரே கவனிச்சிட்டு வர்றாங்களாம்... பொறுத்து பார்த்த அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்துனாங்களாம்... இறுதியாக நீதி கேட்கும் போராட்டமும் நடத்துனப்பதான், கலெக்டர் நிர்வாகிகளை அழைச்சு பேசுனாங்காளாம்... அப்போது கலெக்டர், ‘‘எனக்கு இதுல எந்த பிரச்னையும் இல்லை. அரசியல் நெருக்கடிகளால்தான் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை’னு புலம்பி தள்ளியிருக்காங்க...’’ - என்றபடியே மூச்சு வாங்கினார் விக்கியானந்தா.

‘‘பொறுமை.. இந்தாங்க தண்ணியை குடிங்க... தண்ணியை குடிங்க... என்றார் பீட்டர் மாமா’’‘‘நன்றிப்பா.. ஆங்... கலெக்டரோட இந்த ஸ்டேட்மென்ட்டை கேட்ட அதிமுக நிர்வாகிகள் கடுமையாக டென்ஷனாயிட்டாங்களாம்... ‘‘அதெப்படி கலெக்டர் இப்படி நம்மை வெளிப்படையாக கூறலாம்...’’ என கொந்தளிச்சிட்டாங்களாம்... இதுல மேட்டர் என்னான்னா, ஒரே பணியிடத்துக்கு பல பேர்க்கிட்டே வசூல் பண்ணதாலதான் நியமன மேட்டர் ஜவ்வாய் இழுக்குதுன்னு பேசிக்கிறாங்கப்பா... இதனால பணம் கொடுத்தவர்கள் என்ன செய்றதுன்னு முழிச்சுக்கிட்டு இருக்காங்களாம்...’’ என்று முடித்தார் விக்கியானந்தா.‘‘அடப்பாவமே... அங்கன்வாடி பணியாளர்கள் அங்கம் வாடி இருக்காங்கன்னு சொல்லு...’’ என்று தன் பங்குக்கு வாடிப் போனார் பீட்டர் மாமா. பிறகு ஞாபகம் வந்தவராக, ‘நெல்லை மாவட்டத்துல டெங்கு தொடர்பா ஏதோ பிரச்னையாமே..’’ என்று கேட்டார். ‘‘நெல்லை மாவட்டத்தில் கொசு உற்பத்தியால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பல குழந்தைகள் உயிரிழந்தனர். இதனால் டெங்கு காய்ச்சலை தடுக்க கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மானூர் அருகே உக்கிரன்கோட்டையில் கொசு ஒழிப்பு பணிக்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கொசு ஒழிப்பு மருந்து வழங்கப்பட்டது. இந்த மருந்தை கொசு ஒழிப்பு பணிக்கு பயன்படுத்தாமல் அங்குள்ள ஆஸ்பத்திரியிலேயே பல மாதங்களாக ஸ்டாக் வைத்து விட்டனர்.

இந்நிலையில் கடந்த வாரம் கொசு ஒழிப்பு பணி குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு நடத்த சென்றாராம். இந்த தகவலை முன்பே அறிந்து கொண்ட சுகாதார பணியாளர்களும், கொசு ஒழிப்பு பணியாளர்களும், 100க்கும் மேற்பட்ட கேன்களில் இருந்த டெமிபாஸ் கொசு ஒழிப்பு மருந்தை அப்புறப்படுத்துவதற்காக ஆஸ்பத்திரியின் பின்புறம் உள்ள கிணற்றில் அவசர, அவசரமாக கொட்டி விட்டார்களாம். இந்த கொசு ஒழிப்பு மருந்து அருகில் உள்ள ஆழ்குழாய்கள் மூலம் வீடுகளுக்கு செல்லும் தண்ணீரிலும் கலக்க அந்த பகுதி மக்களுக்கு தடுப்புகள், கொப்புளங்கள் உருவாகி விட்டதாம்.  இப்படி வருமுன் காக்க வேண்டிய சுகாதார பணியாளர்களே பொதுமக்களுக்கு நோய் பரப்பி வருகின்றனராம். இது தொடர்பாக கலெக்டரிடம் அந்த பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் யார் தலை உருளப் போகிறதோ என சுகாதாரப் பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வேலூர் சிறை காவலர்களுக்கான குடியிருப்பு வழங்குவதில் முறைகேடு நடக்குதாமே..’’

‘‘ஆமா.. வேலூர் பெண்கள் தனிச்சிறை பின்புறத்தில் சிறை காவலர்களுக்காக கட்டப்பட்ட புதிய குடியிருப்பு வளாகத்தில் 36 வீடுகள் உள்ளன. இதில் வேலூர், திருவண்ணாமலை மற்றும் அதிகளவு தென் மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு வீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் சிறை காவலர்களுக்கான வீடு ஒதுக்கீடு செய்யும் சிறைத்துறை அதிகாரிகள் சிலர், தென் மாவட்டங்களை சேர்ந்த காவலர்களிடம் பணத்தையும் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு மட்டும் வீடு ஒதுக்கீடு செய்துள்ளார்களாம். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் வீடு கோரி வழங்கிய மனுக்களை அதிகாரிகள் நிராகரிப்பதாக சிறை காவலர்கள் புலம்பி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘மத்தபடி என்ன விவகாரமான சமாச்சாரம் இருக்கு..’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றவர்களில் 13 பேரை போலீஸ் சுட்டுக் கொன்றது. இந்த துப்பாக்கி சூடு விவகாரத்திலும், போலீசின் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளும் ஐகோர்ட்டில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. துப்பாக்கி சூடு நடந்த அன்று கலெக்டர் கோவில்பட்டியில் ஜமாபந்தி நடத்திய நிலையில், துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது துணை தாசில்தார்கள் என்று துப்பாக்கி சூடு நடந்த பிறகு புகாரை வாங்கி போலீஸ் செட் அப் செய்தது. ஆனால் அந்த துணை தாசில்தார்களுக்கு துப்பாக்கி சூடு நடந்த அன்று வேறு இடத்தில் கலெக்டர் பணி ஒதுக்கியது அம்பலமானது. இதையெல்லாம் பார்த்த ஐகோர்ட் நீதிபதிகள் தற்போது சிபிசிஐடி வசம் இருக்கும் துப்பாக்கி சூடு குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். இதனால் துப்பாக்கி சூடு புகார் அளித்த அதிகாரிகள், புகாரை பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் மிரண்டு போயுள்ளனர். சிபிஐ விசாரணையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என அவர்களது வயிற்றில் புளி கரைத்துள்ளது’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-11-2018

  18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்