SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேண்டாம் பாலின பேதம்

2018-08-14@ 06:13:35

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும் அமைக்கப்பட்டது தான் காவல்துறை. தமிழக காவல்துறை இந்தியாவின் 5வது மிகப்பெரிய காவல்துறை என்று கூறப்படுகிறது.உள்துறையின் கீழ் செயல்படும் தமிழக காவல்துறையில் 32 காவல் மாவட்டங்களில் சுமார் 1,21,215 பேர் பணியாற்றுகின்றனர். 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு  சென்னை, சென்னை புறநகர், மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை ஆணையாளர் தலைமையில் தமிழக காவல்துறை  செயல்பட்டு வருகிறது.இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். முதன்முதலாக சோதனை அடிப்படையில் 1972ம் ஆண்டு தமிழகத்தில் பெண் போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டது. சென்னை சிந்தாதிரிபேட்டையில்  இந்த பிரிவு துவங்கியது. இதன் பின்பு தான் தமிழகம் முழுவதும் இப்பிரிவு விரிவுபடுத்தப்பட்டது.இதன் பின் 1991ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும்  தொடங்கப்பட்டன. அதன் பின் பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள்  ஆயுதப்படையும் தொடங்கப்பட்டது. இதில் டிஜிபி முதல் கான்ஸ்டபிள் பதவி வரை  பெண்கள் பணியாற்றுகின்றனர்.

காவல்துறையில் பெண்களின் சேவை மிக முக்கியமானது. குற்றமிழைத்த பெண்களைக் கைது செய்தல், அவர்கள் ஆயுதங்களோ, தடை செய்யப்பட்ட பொருட்களோ வைத்திருக்கிறார்களா என சோதனையிடுவது, பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெறுவது போன்ற பணிகளை பெண் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் பெண் போலீசாரின் பணி இரட்டிப்பாகி உள்ளது.இந்த நிலையில் ஆண்களுக்கு இணையாக பெண்காவலர்களுக்கும் பணிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, பிரதமர், முதல்வர், கவர்னர் உள்ளிட்ட தலைவர்கள் வருகைக்கான பந்தோபஸ்து, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவற்றிற்கு பாதுகாப்பு, கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் பணி செய்ய அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.இதனால் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் பெண் போலீசாரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இதனால் பெண் போலீசார் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது ஒருபுறம் என்றால், ஆண்களோடு, இணைந்து பணியாற்றும் இத்துறையில் பெண்களுக்கு எதிராக  நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகமாய் வெளியே வருவதில்லை. பட்டப்படிப்பு படித்து நிறைய கனவுகளுடன் காவல்துறைக்கு பணிக்கு வரும் பெண்கள் பலர், உரிய சுயமரியாதை கிடைக்காததுடன், பாலியல் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதால் வெளியேறி வேறு பணிகளுக்குச் செல்வதை மறுக்க முடியாது.

இதற்குக் காரணம், இத்துறையில் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட விசாகா குழு இதுவரை அமைக்கப்படவில்லை என்பது தான்.பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக விசாகா குழு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 1997ம் ஆண்டு உத்தரவிட்டது. மத்திய அரசு, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை 2013ம் ஆண்டு செயல்படுத்தியது. ஆனாலும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையிலேயே இக்குழு அமைக்கப்படாமல் இருக்கிறது. பாலின பேதம் பார்க்காமல் உடனடியாக இக்குழுவை அமைக்க தமிழக அரசு முன் வரவேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்