SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூரில் இருந்து 1.20 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு காவிரி கரையோர வீடுகளுக்குள் வெள்ளம்: போக்குவரத்து துண்டிக்கும் அபாயம்

2018-08-13@ 02:07:22

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து சரிந்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.20 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கர்நாடகாவில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து, பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து, விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல் வந்தடைந்தது. இதனால், ஒகேனக்கல்லில் ஐந்தருவி, மெயினருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்தபடி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல் மட்டுமின்றி, கோத்திக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாகமரை, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அரசு பள்ளிகள், தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள், போலீசார், பரிசல் ஓட்டிகள் ஒகேனக்கல் கரையோரத்தில், 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 35வது நாளாக மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. வெளிமாநில, வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் தற்போது ஒகேனக்கல்லுக்கு வரவேண்டாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் மழை சற்று குறைந்ததால், கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து, நேற்று மாலை 1.10 லட்சம் கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம், 1.35 லட்சம் கனஅடி நீர்வந்தது. இதனால், நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து, நடப்பாண்டில் 2வது முறையாக அணை முழுமையாக நிரம்பியது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக சரிந்தது. இதனால், அணையில் இருந்து நீர் திறப்பு 1.20 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அதில், 22,500 கனஅடி நீர் மின்நிலையங்கள் வழியாகவும், 96,500 கனஅடி நீர் 16 கண் மதகுகள் வழியாகவும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 1,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.20 அடியாகவும், நீர் இருப்பு 93.79 டிஎம்சியாகவும் உள்ளது.

அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர்-இடைப்பாடி சாலையை ஒட்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்திறப்பை மேலும் அதிகரித்தால், இந்த 2 சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து தர்மபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை உள்பட 12 மாவட்டங்களில், காவிரி கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீர்: மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட 1 லட்சம் கன அடி தண்ணீர் நேற்று முன்தினம் இரவு திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது. முக்கொம்பில் இருந்து வினாடிக்கு  64 ஆயிரத்து 126 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரத்து 67 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர, புள்ளம்பாடி, கட்டளைமேட்டு வாய்க்கால் உள்பட திருச்சியில் உள்ள 18 வாய்க்கால்களில் தலா 1,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பரிசல் மூலம் பொதுமக்கள் மீட்பு
மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி கந்தன் நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டிலிருந்த உடமைகளை மூட்டை கட்டிக்கொண்டு, குழந்தைகளுடன் பரிசல் மூலம் வெளியேறினர். இப்பகுதி தாழ்வாக உள்ளதால் இங்கு வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு வெளியேற, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கரையோர பகுதிகளான பசவேஸ்வரர் தெரு, பாலக்கரை பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்ததால், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு நகராட்சி பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், கரையோரப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்