SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பகுத்தறிவுக்காக சினிமாவில் கலைஞர்: நடிகர் சிவகுமார்

2018-08-13@ 02:04:13

1988ல் ஜூலை 17ம் தேதி கலைஞரை சந்தித்தேன். அப்போது அவர் மனம்விட்டு பேசிய விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். திருவாரூரில்தான் கலைஞர் முதன்முறையாக சினிமா பார்த்துள்ளார். அவரது பெற்றோர், சகோதரிகளுடன் மகாபாரத அர்ஜுனனை பற்றிய பேசாத படம்தான் அது. பிறகு ‘கண்ணகி’, ‘மகாமாயா’ படங்கள் அவரை வெகுவாக கவர்ந்தன. அந்த படங்களுக்கு வசனம் எழுதிய இளங்கோவனின் எழுத்து நடையும் கலைஞரை ஈர்த்தது. 12 வயதாக இருக்கும்போதே ‘செல்வச் சந்திரா’ என்ற நாவலை கலைஞர் எழுதியிருக்கிறார். கலைஞரின் தந்தை, வீட்டுக்கு வருவோரிடம் எல்லாம் அந்த நாவலை காட்டி, ‘என் மகன் எழுதி இருக்கிறான் கேளுங்க’ என படித்து காட்டுவாராம். எம்.ஆர்.ராதா நாகையில் ஒரு நாடகம் நடத்தினார். அப்போது அவர் திராவிடர் கழகத்தில் இணைந்திருந்தார். நாகைக்கு சென்று நாடகம் பார்த்துள்ளார் கலைஞர். அப்போது அவருக்கும் திராவிட கொள்ைககளை வைத்து நாடகம் எழுத வேண்டும் என எண்ணம் தோன்றியது. ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ இதுதான் கலைஞர் எழுதிய முதல் நாடகம்.

எம்.ஆர்.ராதா உதவியுடன் அந்த நாடகத்தை திருவாரூரில் கலைஞர் நடத்தினார். அந்த நாடகத்தில் கலைஞரும் நடித்தார். நாடகம் நடத்தியதில் கலைஞருக்கு 100 ரூபாய் கடன் ஆகிவிட்டது. அப்போது நாகப்பட்டினத்தில் பண வசதி படைத்த ஆர்.வி.கோபால் என்பவரிடம் கடன் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ‘இந்த நாடகத்தை என் பெயருக்கு எழுதி கொடுத்துவிடு’ என கூறியுள்ளார். அதேபோல் நாடகத்தை அவருக்கு எழுதி கொடுத்து கடனை அடைத்தார் கலைஞர். பராசக்திக்கு முன்பு பல படங்களுக்கு வசனம் எழுதினாலும் பராசக்தி பெருமளவில் பரபரப்பாக பேசப்பட என்ன காரணம் என கலைஞரிடம் நான் கேட்டேன். அதற்கு, ‘அந்த சமயத்தில் புராண படங்களே வௌிவந்தன. தேசபக்தி படங்கள் வந்தாலும் அவை நன்றாக இருந்தாலும் அதில் கருத்து சொன்ன விதம் சரியில்லை. பராசக்தி வௌிவந்த பிறகு அதனால் உண்டான திருப்பத்தை விட அதற்கு ஏற்பட்ட எதிர்ப்பே அந்த படத்துக்கு புகழ் சேர்த்தது’ என்றார். எம்ஜிஆர், சிவாஜிக்காக பல படங்களுக்கு அவர் வசனம் எழுதினார்.

அவர்களுடனான நட்பில் கலைஞரால் மறக்க முடியாத தருணங்கள் இருந்துள்ளது. ஒருமுறை அண்ணாவை பார்க்க காஞ்சிபுரத்துக்கு கலைஞர், சிவாஜி மற்றும் நண்பர்கள் காரில் சென்றுள்ளனர். திடீரென பெரும் மழை. சாலையெங்கும் வௌ்ளம். ஓரிடத்தில் கார் கவிழ்ந்தது. அசம்பாவிதம் நடக்ககூடிய சூழல். ஆனால் நல்ல வேளையாக அனைவரும் உயிர் தப்பினர். பின்னர் காரை சரி செய்து அதில் கலைஞரை அமர வைத்து சிவாஜி உள்ளிட்டோர் நெடுந்தூரம் காரை தள்ளிகொண்டே சென்றனர். அதேபோல் ஒரு சம்பவம். 1953ல் கல்லக்குடி போராட்டத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து விட்டு கலைஞர் விடுதலையாகி ரயிலில் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது, ‘கருணாநிதி ரயில் வருகிறது’ என்று ரயில் அதிகாரிகளே அறிவிக்க, கலைஞரால் ரயிலில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம். கீழே இறங்கினால் நெரிசலில் சிக்கும் சூழல்.

அப்போது அங்கு கலைஞரை வரவேற்க வந்த எம்ஜிஆர், அவரை அப்படியே தன் கைகளால் தூக்கிக் கொண்டே வந்துள்ளார். அப்போது அந்த காலத்திலேயே ரூ4 ஆயிரம் மதிப்புள்ள எம்ஜிஆரின் கைகடிகாரம் திருட்டு போய்விட்டது. இந்த இரண்டு நிகழ்வையும் கலைஞர் நெகிழ்வாக சொன்னார்.
அவர் வருமானத்துக்காக எழுத்தை  வடிக்காமல் அதில் பகுத்தறிவு பிரசாரம் செய்தார். ராஜகுமாரி, மருதநாட்டு  இளவரசி, மந்திரிகுமாரி, பராசக்தி, திரும்பிப் பார், மனோகரா, மலைக்கள்ளன்,  ராஜா ராணி, அரசிளங்குமாரி, பூம்புகார் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் அவரது  வார்த்தைகள் நர்த்தனமாடி ரசிகர்களை ஈர்த்தன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்