SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலைஞர் என்றொரு இலக்கியவாதி: கவிஞர் வைரமுத்து

2018-08-13@ 02:01:37

திராவிட இயக்கத்திற்கு வித்து விதைத்தவர்கள் பலராயினும் விளைவித்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற மூன்று பேராளுமைகளே. இந்த மூவரும் இல்லாவிடில் திராவிட இயக்கத்திற்கு நீட்சி இருந்திருக்காது. நீண்டதோர் ஆட்சி இருந்திருக்காது. கருத்துக்களை மக்களிடம் முன்னெடுத்து செல்வதற்கு கலைஞர் பிறந்த காலத்தில் மூன்றே மூன்று ஊடகங்கள் மட்டுமே வாகனங்களாயின. ஒன்று மேடை, இன்னொன்று பத்திரிகை, அடுத்தொன்று திரைப்படம். பெரியார் முதலிரண்டு ஊடகங்களை வெற்றிகொண்டார். கலை, சினிமா என்ற மூன்றாம் ஊடகத்தை முற்றிலும் வெறுத்தார். பெரியார் வெறுத்த மூன்றாம் ஊடகத்தை அண்ணாவும் கலைஞரும் மிக கவனமாக கைப்பற்றினார்கள். அதில் அந்த இருவருக்கும் பொருளும் புகழும் கிடைத்தன. அதைவிட, யாருக்கு சென்று சேர வேண்டுமோ அந்த கடைக்கோடி மக்களுக்கும் இயக்கத்தின் நோக்கம் சென்று சேர்ந்தது. நல்லதம்பி, வேலைக்காரி, ஓர் இரவு போன்ற குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும்தான் அண்ணா தன் பங்களிப்பை ஆற்றினார். ஆனால் கலைஞரோ தன் அரசியல் வாழ்வின் இணைகோடாகக் கலை வாழ்வையும் கைவிடாமல் காப்பாற்றி வந்தார். 1950களில் தமிழ்நாட்டு மக்கள் தொகை மூன்று கோடிதான்.

கற்றோர் எண்ணிக்கை வெறும் 19 விழுக்காடுதான். எனவேதான் கருத்து என்ற கசப்பு மருந்தை ஊட்டுவதற்கு அவர்கள் கலைத்தேன் தடவ நேர்ந்தது.
அண்ணாவின் கலை எழுத்து ஆழமானது. கலைஞரின் கலை எழுத்து அழகானது. வசந்தத்தின் குளுமை, வாலிபத்தின் ஒய்யாரம், சந்தத்தின் சங்கீதம், உவமைகளின் ஊர்வலம், கிண்டலின் கித்தாப்பு, நகைச்சுவையின் மத்தாப்பு, கழுத்தில் கத்திவைக்கும் கருத்து. காதுவழி பதிந்துபோகும் எழுத்து. இதனால் இளைஞர் கூட்டம் தேனுக்குள் கால்புதைந்த வண்டாய் சிக்கிப்போனது. தமிழ் இலக்கியத்தை வீதிக்கு கொண்டுவந்தது திராவிட இயக்கம். அப்படி கொண்டுவந்த முதல் மனிதர் பேச்சால், எழுத்தால், திரையுலகில் அண்ணா. இதைத் தொடர்ந்து முழுமை செய்தவர் கலைஞர். ‘புறநானூற்றை மறைக்க வந்த புழுதிக்காற்றே! புறமுதுகிட்டு ஓடும் கலிங்கத்துப்பரணியை மறைக்க வந்த காரிருளே! கால்பிடரியில் இடிபட ஓடும்’ என்று ‘மனோகரா’வில் தமிழின் ஆதி இலக்கியங்களை அவர் அடையாளங்காட்டியபோது பாமரனும் கூட அந்த தொல் இலக்கியங்களை தொட்டுப்பார்த்தான். இப்படியெல்லாம் தமிழின் இனமொழி மாட்சிக்கும் நீட்சிக்கும் கலைஞரின் இளையதமிழ் இயங்கியிருக்கிறது.

தமிழ், இனமொழி அடையாளங்களை மீட்டெடுத்ததில் அவருடைய பங்கு அளப்பரியது. சிலப்பதிகாரத்தை அவர் நவீனப்படுத்திய பிறகுதான் தமிழனுக்கென்று ஒரு மகாகாவியம் உண்டு என்பதை தமிழினம் உணர்ந்தது. தமிழினத்திற்கு வௌியேயும் அது உணரப்பட்டது. சங்க இலக்கியத்தை எளிமை செய்தல், பழைய மரபுகளை மீட்டெடுத்தல் என அவரது தேர் ராஜபாட்டையில் நகர்ந்தது. தொல்காப்பியத்திற்கு உரையாக தொல்காப்பிய பூங்கா என கவிதை வடிவில் அவர் எழுதியதையும் நான் பெரிதும் வியக்கிறேன். ஏனென்றால் தொல்காப்பியம் என்பது புலவர்களால் கூட தொடமுடியாத உயரத்தில் இருப்பது. இலக்கணம் போல் ஓர் இலக்கியம் என்று சொல்ல வேண்டும் தொல்காப்பியத்தை. இலக்கியம்போல் ஓர் இலக்கணம் என்று சொல்ல வேண்டும் திருக்குறளை. இந்த இரண்டுக்கும் அவர் எழுதிய உரைகள் பொதுமக்கள் மத்தியில் அவைகளை கொண்டு சென்றன. இப்படி பழைய இலக்கியங்கள் மட்டும் அல்ல, படைப்பிலக்கியத்திலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார். தென்பாண்டிச் சிங்கம், ரோமாபுரிப் பாண்டியன், பாயும்புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர் போன்ற உரைநடை காவியங்கள் அவரது படைப்பாற்றலை காலமெல்லாம் பறைசாற்றும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்