SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயில் குளங்கள் தூர்வாருவதில் பல கோடி மோசடி

2018-08-13@ 01:27:11

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் குளங்களை தூர்வாருவதில் லட்சக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல இடங்களில் கோயில் குளங்களே மாயமாகி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 38,645 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்களும் அடக்கம். இவற்றில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் என பிரசித்தி பெற்ற 2,359 முக்கிய கோயில்களில் குளங்கள் உள்ளன. மேற்கண்ட கோயில்களின் திருவிழா, மாசி மகம், ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு விழாக்களின் போது கோயில் குளங்களில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோயில் குளங்களை ஆண்டுதோறும் மழைக்காலம் துவங்குவதற்கு முன், தூர்வார வேண்டும். இதை அந்தந்த கோயில் வருமானத்தில் இருந்து தான் எடுத்து மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்று அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட இந்த குளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த குளங்களை தூர்வாரியதாக கோயில் வரவு செலவு கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சில கோயில்களின் குளங்கள் தூர்க்கப்பட்டு பூங்கா, வீட்டுமனை, வணிக வளாகமாக மாற்றப்பட்டு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மாயமான இந்த குளங்களுக்கு கோயில் பணத்தில், தூர்வாரியதாக கணக்கு காட்டிவிட்டு அதிகாரிகள் கோடிகணக்கில் சுருட்டி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த மோசடியை கண்டுகொள்ளாமல் இருக்க அறநிலையத் துறையின் மண்டல உயரதிகாரிகளுக்கு, சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாக அதிகாரிகள் கணிசமான தொகையை கமிஷனாக கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கோயில் குளங்களை இலவசமாக தூர்வாருவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தன்னார்வலர்கள் அனுமதி கேட்டாலும் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், கோயில் குளங்களை பராமரிக்காவிட்டாலும், அந்த குளங்களை வேலி போட்டு பாதுகாக்க தவறியதால் பல இடங்களில் கோயில் குளங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளது. குறிப்பாக, வடபழனி வேங்கீஸ்வரர் கோயில், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோயில் உள்பட 100க்கும் மேற்பட்ட கோயில் குளங்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் உதவியுடன், தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக 2 ஏக்கர் பரப்பளவு ெகாண்ட வடபழனி வேங்கீஸ்வரர் கோயில் குளம் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக இருந்த சுவடே இல்லாமல் போய் விட்டது. அறநிலையத்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த குளம் தற்போது வணிக நிறுவன கட்டிடங்களாக மாறியுள்ளன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த இடத்தை மீட்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவையே மதிக்காத அறநிலையத்துறை அதிகாரிகள், கண்காணிப்பு இல்லாத மற்ற கோயில்களில் வேறு என்னென்ன முறைகேட்டில் ஈடுபடுகிறார்களோ என பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, இனிமேலாவது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் குளங்களை முறையாக பராமரிக்கவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளங்களை மீட்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது பக்தர்கள் கோரிக்கையாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_gunmanr1

  பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

 • upnepalmarg

  நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

 • ebolaaa_viruss1

  காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

 • LuklaAirportNepal

  சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

 • ParliamentAttaCK17

  நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்