SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் பல ஆயிரம் கோடி சேதம் மத்திய அரசு ரூ100 கோடி உடனடி உதவி

2018-08-13@ 00:05:23

* உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு அதிர்ச்சி * பலி எண்ணிக்கை 37 ஆனது: 15ம் தேதி வரை மழை நீடிக்கும்

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பார்வையிட்டார். வெள்ள பாதிப்புகள் மிகக் கடுமையாக இருப்பதாக அதிர்ச்சி தெரிவித்த அவர், நிவாரண நிதியாக ரூ100 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்கும் என உறுதி அளித்தார். ஒருவாரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் இதுவரை ரூ5,000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, நாளை மறுதினம் வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின. இந்த மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 4 நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 32 பேர் வெள்ளத்தில் அடித்து சென்றும் நிலச்சரிவில் சிக்கியும் காணாமல் போயுள்ளனர்.

கன மழையால் வயநாடு, இடுக்கி, மலப்புரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன. ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவத்தினர் ஹெலிகாப்டர், படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் மாவட்டங்களில் 1023 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 13,857 குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 1213 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, மலப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் மட்டும் சுமார் ரூ5 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 500 கி.மீ. தூரத்திற்கு சாலைகள் நாசமாகியுள்ளன. இடுக்கியில் மட்டுமே 250 கி.மீ.க்கு மேல் சாலைகள் உருக்குலைந்துள்ளன. 15 பாலங்கள் இடியும் அபாயத்தில் உள்ளன. 243 வீடுகள் முழுவதும் இடிந்து போயுள்ளன. மேலும் 4392 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதற்கிடையே, வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய  உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று பகல் 1 மணியளவில் விமானம் மூலம்  கொச்சி வந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ெவள்ளத்தால் பாதிக்கப்பட்ட  இடுக்கி, எர்ணாகுளம் மாவட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். அவருடன் முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

பின்னர்  கொச்சியில் முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை  நடத்தினார்.  இதையடுத்து, அவர் அளித்த பேட்டியில், ‘‘கனமழையால் கேரளா கடும் சேதங்களை  சந்தித்துள்ளது. சேத பாதிப்புகள் மிகக் கடுமையாக உள்ளன. கேரளாவின் தற்போதைய நிலை மிகவும் கவலையளிக்கிறது. மழை  வெள்ள சேதம் ஏற்பட்ட உடனேயே கேரள அரசு சிறப்பான முறையில் நிவாரண பணிகளை  மேற்கொண்டுள்ளது. கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு  ெசய்யும். மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசும் நிவாரண பணிகளில்  ஈடுபடுகிறது. நிவாரண பணிக்காக உடனடியாக ரூ100 கோடி வழங்கப்படும்’’ என்றார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் அவர் விமானம் மூலம் டெல்லி  புறப்பட்டு சென்றார். பின்னர் அதிகாரிகள் அளித்த பேட்டியில், ‘‘இடுக்கி, இடமலையார் அணைகளில் நீரின் அளவு குறைந்திருக்கிறது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதி அடைய வேண்டாம். இதுவரை வெள்ளத்தால் 37 பேர் பலியாகி உள்ளனர்’’ என்றார். இதற்கிடையே, கேரளாவில் நாளை மறுதினம் வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணைகளில் நீர்மட்டம் குறைந்தது
இடுக்கி அணை நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 2398.60 அடியாக குறைந்தது. இருப்பினும் 5 மதகுகள் வழியாக நேற்றும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 135.20 அடியாக இருந்தது. தென்மலையில் உள்ள வரப்பாறு, பத்தனம்திட்டாவில் உள்ள பம்பை, ஆனைத்தோடு, மூழியாறு, திருச்சூரில் உள்ள பீச்சி, சிம்மினி உட்பட 20க்கு மேற்பட்ட அணைகளில் இருந்து தற்போதும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ரூ1220 கோடி நிதி பினராய் கேட்கிறார்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் கேரள முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், ‘‘1924ம் ஆண்டுக்கு பின்னர் கேரளாவில் ஏற்பட்ட மிகப் பெரிய இயற்கை அழிவாகும். மழை வெள்ளம் காரணமாக கேரளாவில் ரூ8,316 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடியாக 1,220 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்