SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரல்வாய்மொழி அருகே தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி இளம்பெண் பலி

2018-08-12@ 20:06:16

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழியில் இன்று சாலையில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி இளம் பெண் பலியானார். இந்த விபத்தில் 40 பயணிகள் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு தாழக்குடி-திருப்பதிசாரம் சாலை வழியாக தடம் எண் 33டி/வி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த சாலையின் ஒருபுறம் தேரேகால்புதூர் கால்வாய் செல்கிறது. மறுபுறம் சுமார் 10 அடி பள்ளமான பகுதியில் தென்னந்தோப்புகள் உள்ளன. ஆபத்தான இந்த சாலையில் செல்லும் டூ-வீலர்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் பயணம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கண்டன்மேட்டு காலனி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தாறுமாறாக ஓடி கால்வாயில் பாயும் நிலை ஏற்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட டிரைவர் பஸ்சை மறுபக்கமாக திருப்பினார். அப்போது தேரேகால்புதூரை சேர்ந்த குமாரவேல் மகள் இந்து (24) என்பவர் பைக்கில் தாழக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பஸ் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பைக்குடன் இந்து பஸ்சின் அடியில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக் மீது மோதிய வேகத்தில் பஸ் மறுபக்கம் பள்ளமான தென்னம்தோப்பு நோக்கி பாய்ந்தது. ஆனால் உயர்ந்து வளர்ந்த தென்னை மரங்களின் மீது சாய்ந்ததால் பள்ளத்தில் கவிழாமல் தப்பியது. இதனால் பஸ்சில் இருந்த சுமார் 40 பயணிகள் நூலிழையில் உயிர் பிழைத்தனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இந்துவின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் உடல் பஸ்சின் அடியில் சிக்கி இருந்ததால் மீட்க முடியவில்லை. உடனடியாக கிரேன் வரவழைக்கப் பட்டு பஸ்சை உயர்த்தி இந்துவின் உடலை மீட்டனர். மேலும் சம்பவ இடம் வந்த ஆரல்வாய்மொழி போலீசார் சடலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த இந்து முதியோர் பென்ஷன் உட்பட அரசு உதவிகளை பெற்றுத்தரும் நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். கண்டன்மேட்டு காலனியில் ஒருவருக்கு முதியோர் பென்ஷன் வழங்க சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவரது தந்தை குமாரவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தாழக்குடி-திருப்பதிசாரம் சாலை ஒருபுறம் தேரேகால்புதூர் கால்வாய்,  மறுபுறம் சுமார் 10 அடி பள்ளமான பகுதியில் தென்னம்தோப்புகள் என உள்ள ஆபத்தான சாலை. இந்த சாலை வழியாக செல்லும் டூ-வீலர் வாகனங்கள் நூலில் நடப்பது போல ஆபத்தின் விளிம்பில் பயணம் செய்கின்றன. சாலையை பாதுகாப்பான முறையில் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுெகாள்ளவில்லை. இதனால் இன்று இளம்பெண்ணின் வாழ்வை காவு கொண்டுள்ளது. இந்த நிலை தொடராமல் சாலையில் பாதுகாப்புடன் பயணம் செய்யும் வகையில் மாற்றிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய டிரைவர்

தடம் எண் 33டி/வி அரசு பஸ்சில் வழக்கமாக வரும் டிரைவர்கள் இந்த சாலையில் பஸ்சை ஓட்டிய அனுபவம் உள்ளவர்கள். அதில் இன்று பணியாற்ற வேண்டிய டிரைவர் விடுப்பில் சென்றுள்ளார். இதனால் இந்த தடத்துக்கு புதிய டிரைவர் இன்று பஸ்சை ஓட்டியுள்ளார். அவருக்கு இந்த சாலையில் பஸ்சை செலுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இந்த விபத்து நடந்துள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • finaldesti000

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

 • kannirpeoplvaj

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

 • bjpvajpai123

  டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

 • dangerrrkerala123

  கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

 • armyyyyyy122233

  கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்