SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் எப்போது? 3 மாநில தேர்தலுடனா? மக்களவை தேர்தலுடனா?

2018-08-12@ 19:44:40

திருச்சி: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏ போஸ் கடந்த 2ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்ததால், அந்த தொகுதியும் காலியாக உள்ளது. பொதுவாக ஒரு எம்எல்ஏ இறந்தாலோ, அல்லது ராஜினாமா செய்தாலோ காலியாகும் தொகுதிக்கு 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி வரும் ஜனவரி மாதத்துக்குள் 2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தி புதிய எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலங்களுக்கு நடைபெறும் தேர்தலோடு, தமிழகத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது அடுத்தாண்டு மே மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலோடும் சேர்த்து நடத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தேர்தல் ஆணைய வட்டாரத்தில் விசாரித்த போது, திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள்  இடைத்தேர்தல் 3 மாநில சட்டமன்ற தேர்தலோடு, நடக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறினர்.

20 தொகுதிகள் காலி

திருவாரூர், திருப்பரங்குன்றம் தவிர தமிழகத்தில் மேலும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. தமிழக அரசை கலைக்க முற்பட்டதாக கூறி டிடிவி.தினகரனின் ஆதரவாளர்களான சென்னை பெரம்பூர் தொகுதி வெற்றிவேல், தஞ்சை தொகுதி ரெங்கசாமி, அரவக்குறிச்சி தொகுதி செந்தில் பாலாஜி, தேனி தொகுதி தங்க தமிழ் செல்வன் உள்பட 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து இந்த 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, 18 பேரும் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இதனால் இந்த 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட மாட்டாது.

கமல் கட்சி போட்டி?

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் கமல் கட்சி ஆரம்பித்த பின், இப்போது தான் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதுபற்றி திருவாரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் ஞானசம்மந்தத்திடம் கேட்ட போது,  இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி தலைவர் கமல் தான் முடிவெடுத்து அறிவிப்பார். இடைத்தேர்தலில் போட்டியிட கமல் முடிவெடுத்தால், களத்தில் இறங்கி தேர்தல் பணியாற்ற தயாராகவே இருக்கிறோம் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்