SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தலைவர்கள் வலியுறுத்தல்

2018-08-12@ 19:27:58

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படை அத்துமீறி அவர்களைக் கைது செய்திருப்பது மட்டுமின்றி, இலங்கை அரசு தற்போது கொண்டுவந்துள்ள புதிய மீன்பிடிச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. மத்திய பாஜ அரசின் அலட்சியத்தால் இலங்கை அரசு கடற்தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, தமிழக மீனவர்களுக்கு எதிராக பயன்படுத்த முனைந்துள்ளது. இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ள 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப்பெற இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 27 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதற்கு இலங்கை கடற்படை காரணம் என்றால் இப்பிரச்சனையில் இன்னும் சுமூகத் தீர்வு ஏற்படுத்திக்கொடுக்காத மத்திய அரசையும், தமிழக அரசையும் தமாகா சார்பில் கண்டிக்கிறேன். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும், அவர்களின் 4 நாட்டுப்படகுகளை மீனவர்களிடம் ஒப்படைக்கவும் மத்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி: இலங்கை அரசின் புதிய மீன்பிடித் தடை சட்டத்தின்படி 27 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தராது என்றும் கூறப்படுகிறது. தவறு செய்யாத மீனவர்களுக்கு வழங்கப்படும் இத்தண்டனை மிகவும் கொடூரமானதாகும்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடல்பகுதி மிகவும் குறைவாக உள்ள நிலையில், தமிழக மீனவர்களை இலங்கை படையினர் அடிக்கடி கைது செய்வதும், அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதுமான சித்திரவதை விளையாட்டு தொடர்வதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் நாட்டுப் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பான முறையில் மீன்பிடிப்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்