SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் முதல் பொது நூலகம்!

2018-08-06@ 17:41:19

‘‘நம்முடைய மாணவர்கள் இலக்கியத்திலோ, கலை, அறிவியலிலோ உயர்கல்வி படிக்க முன்வருவதில்லை. காரணம், அவர்களிடம் தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கான வசதிகள் இல்லை. இந்த இலவச பொதுநூலகத்தில் இலக்கியம் மற்றும் அறிவியல் தவிர்த்து, கிடைக்கப்பெறும் பல்வேறு வகையான புத்தகங்கள் அவர்களுக்கு நிச்சயம் உதவும்.’’ - 1890ம் வருடம் மெட்ராஸ் கவர்னராக இருந்த லார்டு கன்னிமாரா பொது நூலகத்திற்கஅடிக்கல் நாட்டி ஆற்றிய உரையின் சாராம்சம் இது.ஆனால், 1896ல் இந்த நூலகம் திறக்கப்பட்டபோதுஅவர் லண்டன் திரும்பிவிட்டார். இருந்தும், அன்றைய கவர்னராக இருந்த சர் ஆர்தர் எலிபங்க், கன்னிமாராவின் எண்ணத்திற்கு மரியாதை செய்து அவரது பெயரையே நூலகத்திற்குச் சூட்டினார்.

எழும்பூர் பாந்தியன் சாலையில் சுற்றிலுமிருக்கும் பழைமை வாய்ந்த மியூசியக் கட்டடங்களின் நடுவில் புதுபொலிவுடன் வீற்றிருக்கிறது கன்னிமாரா நூலகம். மூன்று தளங்கள் கொண்ட நூலகத்தின் முதல் தளத்தில் நாளிதழ் பிரிவு அமைதியாகச் செயல்படுகிறது. இங்கே தினசரிகள் தவிர்த்து வாரம், வாரம் இருமுறை, மாதம், மாதம் இருமுறை என இந்தியாவிலிருந்து வெளியாகும் பல்வேறு இதழ்கள் வரிசை கட்டுகின்றன. அதைக் கடந்து கடைசிப் பகுதிக்குப் போனால் way to old building என பழைய கட்டடத்திற்கான பாதை வழிகாட்டுகிறது. புது கட்டடத்துடன் பழைய கட்டடத்தை இணைக்கும் அந்தப் பாதை வழியே பயணித்தால் வருகிறது லார்டு கன்னிமாராவின் கனவு லைப்ரரி! ஆம். ஆரம்பத்தில் கட்டப்பட்ட கன்னிமாரா லைப்ரரி அதுதான். தற்போது பழமையைப் பாதுகாக்கும் பொருட்டு இந்தக் கட்டடத்தின்உள்ளே வாசகர்கள் எவரையும் அனுமதிப்பதில்லை. ஆனால், கட்டடத்தின் வட்டவடிவிலான வெளி அறையில் உட்கார்ந்து புத்தகங்களை வாசிக்கலாம். தேவையெனில் நகல் எடுத்துக் கொள்ளலாம். என்ன புத்தகம், யார் எழுதியது என்பதை சொன்னால் அங்கிருக்கும் நூற்றொகை உதவியாளர் (Bibliography Assistant) எடுத்து வந்து தருவார்.

பழைய கட்டடம்

இரண்டு பக்கமும் மரத்திலான ரேக்குகள். தவிர, இரும்பு ரேக்குகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தலைப்புகள் வாரியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. நடுவில் மார்பு அளவிலான மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை வரவேற்கிறது. இந்தச் சிலையை அப்போது சென்னை அரசு கவின் கல்லூரி முதல்வராக இருந்த டி.பி.ராய் சவுத்ரி உருவாக்கியிருக்கிறார். இதன் எதிரே நூல்களை என்ட்ரி போடும் நூலகரின் மேஜையும், அதன் இருபுறமும் இரண்டு வழிப்பாதைகளும் உள்ளன. வழிகள் சிறிய மரத்தடுப்புகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மேஜைக்கு அடியில் ஒரு லாக்கும் இருக்கிறது. ஸ்கூட்டரில் இருக்கும் பிரேக் போல இரும்பிலான பெரிய சைஸ் லாக் அது. நூல்களை எடுப்பவர்கள் என்ட்ரி போடாமல் வெளியேறினால், நூலகர் இந்த லாக்கை மிதித்தால் போதும். வெளியேறும் பாதையிலுள்ள மரத்தடுப்பு சட்டென மூடிவிடும். மாடிப் பகுதியில் இப்போது முக்கியமான நூல்கள் சில மேஜைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்திற்கு கன்னிமாரா அடிக்கல் நாட்டியதும் இதுக்கான டிசைனை அன்று ஆர்க்கிடெக்டாக இருந்த ஹென்றி இர்வின் பண்ணினார். இந்த இர்வினும் ‘ஜங்கிள் புக்’ எழுதிய கிப்ளிங்கும்நண்பர்கள். அதனால், இந்த பில்டிங்கின் மர டிசைன்களில் எல்லாம் ‘ஜங்கிள் புக்’கதாபாத்திரங்களைச்செதுக்கினார்.கட்டடம்இந்தோசாராசெனிக் பாணியில் கட்டப்பட்டது. இதை அன்றைய முன்னணி காண்டிராக்டர் நம்பெருமாள் செட்டி கட்டினார்.

இங்குள்ள சேர்கள் எல்லாம் ஒரிஜினல் தேக்கினால் ஆனவை. பக்கிங்ஹாம் பேலஸில் இருந்து வரவழைக்கப்பட்டவை. இங்கு லோக்சபா, ராஜ்யசபா, தமிழ்நாடு சட்டசபையில் நடந்த விவாதங்கள் 1937ல் இருந்து உள்ளன. தவிர, 1871ல் இருந்து இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பும், அரிதான புத்தகங்களும் உள்ளன. 1689ல் சார்லஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘voyage of surat’, 1919ல் ரங்காசாரி எழுதிய ‘A Topographical list of inscriptions of the madras presidency’, வில்சன் எழுதிய ‘History of The Madras Army’ எனப் பல  அரிய நூல்களும் இருக்கின்றன. மிக மிக அரிய நூல்களான 1578ல் ஹென்றிக்ஸ் அடிகளார் எழுதி அச்சில் ஏறிய முதல் தமிழ் நூலான, ‘தம்பிரான் வணக்கம்’, 1560ல் வெளியான பைபிள் போன்றவை கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொது நூலகச் சிந்தனை 1890ல் ஏற்பட்டாலும் அதற்கு முன்பே மியூசியத்தின் உள்ளே ஒரு சின்ன லைப்ரரியை அமைத்திருந்தார் மியூசிய காப்பாளராக இருந்த கேப்டன் ஜீன் மிட்செல். 1861ல் லண்டன் ஹெய்லிபெர்ரி யுனிவர்சிட்டியிலிருந்து கொண்டுவந்த புத்தகங்களை வைத்துதான் இந்த குட்டி நூலகம் உருவானது. அதன் தொடர்ச்சியாக உருவானதே கன்னிமாரா நூலகம்.இந்தியாவில் பொது மக்கள் பயன்பாட்டுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட முதல் பொது நூலகம் இதுதான். 1930ம் ஆண்டு வரை குறிப்புகள் மட்டும் எடுக்கும் ரெஃபரன்ஸ் நூலகமாகத்தான் கன்னிமாரா இருந்து வந்தது. அன்று வாசகர்கள் நூலகம் வந்து சீட்டெழுதி கொடுத்து புத்தகத்தை எடுக்க வேண்டும். பிறகு அதை அங்கேயே படித்துமுடித்துவிட்டு கொடுத்துவிட வேண்டும்.

இதுவே நடைமுறையாக இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்கு எடுத்துச் சென்று படிப்பதற்கானக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனால், உறுப்பினராக வேண்டும் என்ற முறை கொண்டுவரப்பட்டது. இதன்பின் பொதுமக்கள் நூல்கள் இருக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிறகு ஹோம் டெலிவரியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லைப்ரரிக்கு வரமுடியாதவர்களுக்காக வீடுகளுக்கே போய் நூல்களைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவரை பிரிட்டிஷ்காரர்கள் தான் மியூசியத்துடன் சேர்த்து லைப்ரரி பொறுப்பையும் பார்த்துள்ளளனர். 1929ல் முதல் முதலாக ஜனார்த்தனம் நாயுடு என்கிற இந்தியர் ஒருவர் கன்னிமாரா நூலகத்தின் நூலகராக பொறுப்பேற்றார். அதன்பிறகே பல்வேறு மாற்றங்கள் வந்துசேர்ந்தன.

புதிய கட்டடம்

நூல்கள் அதிகரிக்க 1973ல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இப்போது மூன்றாவது தளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கான பாடநூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. தவிர, இறங்கும் வழியில் ஆங்கில இலக்கியத்திற்கென்று தனிப்பிரிவும் ஓர்அறையில் செயல்படுகிறது. இரண்டாவது தளம் இந்திய மொழிகளால் நிரம்பி வழிகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராட்டி போன்ற மொழிகளில் வெளியான நாவல்கள், இலக்கியங்கள், கவிதைகள் எனப் பல்வேறு நூல்களை இங்கே வாசிக்கலாம். தவிர, ரெஃபரென்ஸ் பிரிவும் தனியாக உள்ளது. இன்று புதிய கட்டடத்தின் மிக முக்கிய அறையாக ஸ்கேனிங் ரூம் உள்ளது. இது முதல்தளத்திலுள்ள நாளிதழ் பிரிவின் உள்ளே இருக்கிறது. 2006ல் இந்த சர்வீஸ் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நாளிதழ்களை எல்லாம் ஸ்கேன் செய்தனர். ஆனால், ஆன்லைன் வந்தபிறகு அதைவிட்டுவிட்டு பழைய நூல்கள், அரிதான புத்தகங்களை ஸ்கேன் மூலம் டிஜிட்டல் ஆக்கினர். இதைத் தொடர்ந்து வரும் கீழ்த்தளத்தினுள் பொதுவான ஸ்டாக் நூல்களுடன் சிவில் சர்வீஸ் (ஐ.ஏ.எஸ்.,), டி.என்.பி.எஸ்.சி போன்ற தேர்வுகளுக்கான புத்தகங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

அங்கிருந்து வெளியேறும் வழியின் வலதுபக்கத்தில் சிறுவர் நூலகம் வைத்துள்ளனர். சிறிய அறைதான் என்றாலும் அதற்குள் நிறைய சிறுவர் நூல்கள் இருக்கின்றன. இதனருகே கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட kindle அறையைப் பார்க்க முடிகிறது. கிண்டிலில் படிப்பவர்
களின் வசதிக்காக இந்த டிஜிட்டல் லைப்ரரி. தவிர, உள்ளிருக்கும் இரண்டு கம்ப்யூட்டரில் ‘மேக்ஸ்டார்’, ‘டெல்நெட்’ போன்ற இணையச் சேவைகளின் வழியாக 4 ஆயிரம் இதழ்கள் வரை படிக்க முடியும். இதற்கடுத்த அறையில் ஜெராக்ஸ், இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகளையும் வைத்துள்ளனர்.மொத்தத்தில், புத்தகப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகக் காட்சியளிக்கிறது கன்னிமாரா நூலகம்! 

பொதுத் தகவல்கள்

பழைய நூலகக் கட்டடத் தளத்தின் மார்பிள்கள் அனைத்தும் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக படகில் கொண்டு வந்துள்ளனர்.

அப்போது நூலகத்தைக் கட்ட 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது.
   
‘Castes and Tribes of Southern India’ நூல் எழுதிய எட்கர் தர்ஸ்டன்தான் முதல் முதன்மை நூலகராகப் பொறுப்பேற்றார்.
    
1948ல் தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் கொண்டு வந்தார்கள். இந்தியாவிலேயே பொது நூலகச் சட்டம் முதன்முதலாகக் கொண்டுவந்தது தமிழகம்தான்.

1954ல் கன்னிமாரா தேசிய வைப்பு நூலகமாக மாறியது. தவிர, மாநில மைய நூலகமாகவும் செயல்பட்டுவருகிறது.

இந்தியாவிலுள்ள நான்கு தேசிய வைப்பு நூலகங்களில் ஒன்று என்பதால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து நூல்கள், தினசரிகள், வார, மாத பத்திரிகைகள் எல்லாமும் ஒரு இலவச காப்பியாக இங்கே வந்துவிடும்.

1955ல் ஐ.நா.வின் தேசிய வைப்பு நூலகமாக ஆனது. அதாவது, ஐ.நா. வெளியிடும் நூல்களும் இங்கே இருக்கும்.

1984 முதல் மாணவர்களின் தேவை கருதி பாடநூல் பிரிவு தொடங்கப்பட்டதோடு அடுத்தாண்டே ஜெராக்ஸ் வசதியும் கொண்டுவந்தனர்.

1994ம் ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் படிப்பவர்களுக்காகத் தனிப்
பிரிவு தொடங்கி அதற்குத் தேவையான நூல்களும் தொடர்ந்து வாங்கி வருகிறார்கள்.

ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 பேர் வந்து போகும் இந்த நூலகத்தில் குறைந்தபட்சம் 500 பேர்கள் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள்.

தற்போது, 8 லட்சத்து 21 ஆயிரத்து 784 நூல்கள் இங்கே இருக்கின்றன. தவிர, 3500 பருவ இதழ்கள், 160 தினசரி பத்திரிகைகள் வாங்கப்படுகின்றன.

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரிதான நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் இந்த நூலகத்தில் வைத்துள்ளனர்.

கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆன்லைனில் நூல்களின் அட்டவணையை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமும் காலை 9 மணியிலிருந்து இரவு 7.30 வரையும், ஞாயிற்றுக்
கிழமை காலை 9.30 முதல் மாலை 6 வரையும் நூலகம் செயல்படும்.

சென்னையைச் சேர்ந்த 17 வயது மற்றும் அதற்கு மேலுள்ளவர்கள் எவரும் இதில் உறுப்பினர் ஆகலாம்.

-பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்