SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

தமிழ்நாடும் நூலகங்களும்!

2018-08-06@ 17:31:10

உலகில் அரியது எது? என்று அவ்வையிடம், முருகக் கடவுள் கேட்க, ‘‘அரியது கேட்கின் வரிவடி வேலோய், அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்  அரிது’’ என்று அவ்வைப் பாட்டி பாடிய பாடல் நமக்கு தெரிந்த ஒன்றுதான். அதில் ‘‘ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது, ஞானமும் கல்வியும்  நயந்த காலை வானவர் வீடு வழி திறந்திடுமே..’’என்று அவ்வைப் பாட்டி அரியது பற்றி கூறியிருப்பார். கல்விக்கு வித்தான புத்தகங்களில் அரிய புத்தகம் என்று நாம் சிலவற்றைக் குறிப்பிடுவோம். அந்த வகையில் அரிய நூலகங்களும் உள்ளன. தமிழகத்தில் அரிய நூலகங்கள் என்று பார்த்தால், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள டாக்டர். உ.வே.சாமிநாதய்யர் நூலகம், மறைமலை அடிகள் நூலகம், அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம், அரசு சிறுபான்மை மொழிச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், புதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகம், ஈரோடு மகாகவி பாரதி நினைவு நூலகம், கும்பகோணம் சிவகுருநாதன் தமிழ் நூலகம், விருத்தாசலம் தமிழ்நூல் காப்பகம் ஆகியவை அரிய நூலகங்களாகச் செயல்பட்டு வருகின்றன.  இதற்கெல்லாம் மேலாகவும், முக்கியமானதாகவும் இருப்பது தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்தான்.

1869ம் ஆண்டில் இந்த நூலகம் தொடங்கப்பட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது. இந்தியாவில் மன்னர்கள் ஆட்சிமுறை மறைந்து ஆங்கிலேயர்கள் ஆட்சி தொடங்கியபோது இந்தியாவின் முதல் சர்வேயராக ஜெனரலாக இருந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த காலின் மெக்கன்சி, முனைவர் லேடன், இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயரான சி.பி.பிரவுன் ஆகிய 3 நபர்களும் தங்கள் சொந்த முயற்சியில் ஊர்ஊராகச் சென்று சேகரித்த ஓலைச் சுவடிகள், தாளில்(paper) எழுதிய சுவடிகள்தான் கீழ்ததிசைச் சுவடிகள் நூலகம் உருவாகக் காரணமாக இருந்தன. மேற்கண்ட 3 பேரும் சேகரித்த சுவடிகளில் எந்த வகையான சுவடிகள் இருந்தன என்று பார்த்தால் இலக்கியம், வரலாறு, தத்துவம், அறிவியல், வட்டார வரலாறுகள், கல்வெட்டுகள் தொடர்பான சுவடிகள் இருந்தன. இவை எல்லாம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில்
எழுதப்பட்டு இருந்தன. இந்த 3 நபர்கள் சுவடிகள் சேகரித்த வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.  காலின் மெக்கன்சி கிபி 1753ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு பொறியியல் பிரிவில் தொழிலாளியாக வேலை பார்த்தார். பழங்கணக்குகள், இந்திய வரலாறுகள், கீழ்த்திசை மொழிகள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்த மெக்கன்சி ஏராளமான சுவடிகள், வரைபடங்கள், நாணயங்கள் போன்றவற்றை சேகரிக்கத் தொடங்கினார். தமிழகம் தொடர்பான பொருட்கள் அல்லாமல் இலங்கை, ஜாவா போன்ற பகுதிகளில் இருந்தும் சேகரிக்கத் தொடங்கினார். அதற்கு பிறகு 1818ம் ஆண்டில் மெக்கன்சிக்கு பதவி உயர்வு கிடைத்து சர்வேயர் தலைவராக கல்கத்தாவுக்குச் சென்றார். அங்கும் பல சுவடிகளை சேகரித்தார். இறுதியில் அதுவே ஒரு பழக்கமாகவே மாறி எங்கு சென்றாலும் சுவடிகளை சேகரித்தார். இறக்கும் வரை இதை அவர் கடைப்பிடித்தார். 

மெக்கன்சி சேகரித்த மொத்த சுவடிகளையும், மற்ற பொருட்களையும் கிழக்கிந்திய கம்பெனி 10 ஆயிரம் பவுண்டுக்கு விலைக்கு வாங்கியது. பின்னர்  மெக்கன்சியின் தொகுப்புகளை 3 பிரிவுகளாகப் பிரித்து ஒரு பகுதியைச் சென்னைக்கும், மற்றொரு பகுதியை கல்கத்தாவுக்கும், மூன்றாவது பகுதியை லண்டனுக்கும் கிழக்கிந்திய கம்பெனியார் அனுப்பினர். முனைவர் லேடன். மொழியியல் அறிஞரான இவர் பேராசிரியராக இருந்தவர். 1803ம் ஆண்டு முதல் 1811ம் ஆண்டு வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போதுதான் அவர் பல சுவடிகள் புத்தகங்களை சேகரித்தார். அந்த சேகரிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழியில் எழுதப்பட்ட சுவடிகள் அதிகம் இருந்தன. அவையெல்லாம் லண்டனுக்குச் சென்றது. அங்குள்ள இந்தியா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்ததை சி.பி.பிரவுன் 1837ம் வருடம் கண்டுபிடித்தார். பிரவுன் எடுத்த முயற்சி காரணமாக கிழக்கிந்திய கம்பெனியார் அந்தச் சுவடிகளை விலைக்கு வாங்கி இந்தியாவுக்குக் கொண்டுவந்தது.  

சி.பி.பிரவுன் என்பவர் கடந்த 1843ம் ஆண்டு ஆந்திர மாவட்ட ஆட்சித் தலைவராகவும், சென்னைப் பல்கலைக்கழக மன்றச் செயலாளராகவும் இருந்தார். அதற்குப் பிறகு 1848ம் ஆண்டு சென்னைக் கல்லூரியின் நூலகக் காப்பு ஆட்சியராகவும் இருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, வடமொழிச் சுவடிகளைத் தொகுத்தார். அவற்றைக் கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கி 1855ம் ஆண்டு இந்தியாவுக்குக் கொடுத்தது. இதற்கிடையே 1869ம் ஆண்டு சென்னையில் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் தொடங்கப்பட்டது. மெக்கன்சியின் தொகுப்பு, கிழக்கிந்தியக் கம்பெனியில் தொகுப்பு, பிரவுன் தொகுப்பு ஆகியவற்றை 1870ம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் ஒரே தொகுப்பாக வைத்தனர். அப்போது மாநிலக் கல்லூரியில் வடமொழிப் பேராசிரியராக இருந்த பிக்போர்டு என்பவர் அந்தச் சுவடிகளுக்கு அட்டவணை தயாரித்தார். அத்துடன் அந்தத் தொகுப்புகளில் இருந்த இலக்கிய வரலாற்றுச் சுவடிகளை அச்சிட வேண்டும் என்றும் அவருக்கு கட்டளையிடப்பட்டது. இது தவிர, மேலும் பல புதிய சுவடிகளை சேகரிக்க வேண்டும் என்றும், கிடைக்காதவற்றை படியெடுக்க வேண்டும் என்றும் 1876ம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு சுவடிகள் காலகாலமாக சேகரிக்கப்பட்டன.   சென்னை மாநிலக் கல்லூரியில் செயல்பட்டு வந்த கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் இந்திய சுதந்திரத்துக்கு பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்பட்டு அங்கு இயங்கிவந்தது. பின்னர் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகக் கட்டடத்தில் தற்போது இயங்கி வருகிறது. அங்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் 72314 சுவடிகள் இருக்கின்றன. மொழிச்சுவடிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளச் சுவடிகள் 7 ஆயிரம் உள்ளன. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது இவை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தற்போது அந்த நூலகத்தில் அச்சு நூல்கள் 25373 உள்ளன.

அதில் தமிழ் 5442, வடமொழி 7320, தெலுங்கு1875, கன்னடம் 700, அடங்கும். ஓலைச் சுவடிகள் மட்டும் 50180 உள்ளன. மொத்தமுள்ள சேகரிப்பில் 419 நூல்கள் அச்சிட்டு வெளிவந்துள்ளன. இங்குள்ள ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதற்கென ஒரு தனிப்பிரிவே செயல்படுகிறது. ஓலைச் சுவடிகள் வழக்கமான வடிவங்களில் இல்லாமல் லிங்க வடிவில், சதுர வடிவில், வட்ட வடிவில் என்று பலவடிவங்களில் இருப்பதைப் பார்க்கும்போது நமது முன்னோர் அவற்றை எப்படி பக்குவப்படுத்தியுள்ளனர் என்பது தெரிகிறது. மேலும், இங்குள்ள சுவடிகள் பெரும்பாலும் பிற்காலத்தில் எழுதப்பட்ட சுவடிகளாகவே இருக்கின்றன. வடமொழிச் சுவடிகள் அதிகம் உள்ளன. தமிழர்கள் பண்டைய காலத்தில் கைமுறையாக செய்துவந்த கப்பல் கட்டும் தொழில்நுட்பம் தொடர்பாக சுவடி இங்கு இருக்கிறது. இதை வேறு எங்கும் பார்க்க முடியாத அரிய வாய்ப்பு என்றே கூறலாம். மற்றும் மருத்துவம், சோதிடம் தொடர்பான சுவடிகள் அதிகம் உள்ளன. மருத்துவத்தில் நாடி பார்க்கும் முறை பண்டைக்காலத்தில் இருந்தது. அது தொடர்பான சுவடிகள் 20க்கும் மேல் இந்த நூலகத்தில் இருக்கிறது. தவிர மனித உடற்கூறு தொடர்பான அகத்திய உடற்கூறு இயல், வான்மீகி உறுப்பு சூத்திரம் போன்ற அரிய மற்றும் மருத்துவ மாணவர்களுக்குத் தேவையான சுவடிகளும் இங்கு இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. இவற்றை எல்லாம் அரசு முயற்சி செய்து அச்சிட்டு வெளியிட்டால் மருத்துவத்துறைக்கு உதவியாக இருக்கும்.                                              


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்