SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நூலகங்களின் மாட்சியும்...வீழ்ச்சியும்..!

2018-08-06@ 15:49:20

மனிதனின் அறிவுக்கண்ணை திறந்துவைப்பது புத்தகம்தான். அதனால் தான் ‘‘அறிவு அற்றம் காக்கும் கருவி’’ என்றார் வள்ளுவர். இதை யாராலும் மறுக்கவே முடியாது.மரங்களை அறுத்து பலகை அல்லது மரச்சட்டம் தயாரிப்பதற்கு முன்னதாக மரத்தின் ஒழுங்கின்மையை அகற்ற நீள அகலங்களைக் குறிப்பிடுவார்கள். அதற்கு பண்டைய காலத்தில் ஸ்கேல் என்ற அளவுகோல்கள் இல்லை. அதனால் கயிறு ஒன்றில் கறுப்பு அல்லது நீலநிற சாயத்தை தோய்த்து, மரத்தின் அளவிட வேண்டிய பகுதியில் நீளமாக பிடித்து கோடு போட்டுக்கொள்வார்கள். அதற்கு பிறகு அந்தக் கோடுகளை வைத்து அறுத்து எடுப்பார்கள். இதை ‘‘உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமைப்புரத்தின் வளமுருக்கிப், பொல்லா மரத்தின் கனக்கோட்டம் தீர்க்கும் நூல், அஃதே போல் - மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு’’ என்று நன்னூல் கூறுகிறது.

சங்ககாலத்தில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து சொல்லாத புலவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு கல்வியே பிரதானமாக இருந்தது. ஆனால், எழுதி வைக்கப்பட்ட புத்தகங்கள் இல்லை. இருப்பினும் பல ரூபத்தில் புத்தகங்கள் அறிஞர்களின் வாழ்வில் முக்கிய இடம்பிடித்துள்ளன. அந்தக் காலத்தில் இருந்தே புத்தகங்களைச் சேகரிக்கும் வழக்கம் பலரிடம் இருந்தது. புத்தகங்களை சேகரிக்க பல இடங்கள் அந்தக் காலத்தில் பராமரிக்கப்பட்டன. பின்னாளில் அதை நூலகம் என்று அழைத்தார்கள். இப்படி, அந்தக் காலத்தில் இருந்தே பல்வேறு நூலகங்கள் உலகப்புகழ் பெற்றவையாக இருந்தன. கிமு 300ம் ஆண்டில் எகிப்தின் அருமை பெருமைகளைக் கேட்டு வியந்துபோன மாவீரன் அலெக்சாண்டர், எகிப்துக்கு புறப்பட்டான். எகிப்தியர்கள் அவனை இருகரம்கூப்பி வரவேற்றனர். அதற்குப் பிறகுதான் கிரேக்க-எகிப்திய காலம் என்னும் தோலமிக் காலம் எகிப்தின் வரலாற்றில் தொடங்கியது.

எகிப்தின் அழகில் மயங்கிய அலெக்சாண்டர், அலெக்சாண்டிரியா என்ற நகரையே உருவாக்கினான். அங்குதான் மிகப் பெரிய நூலகத்தை கட்டி எழுப்பினான். உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்–்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் சேகரித்து ஒரு மில்லியன் புத்தகங்களை அந்த நூலகத்தில் வைத்தான். அந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காகவே உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் அறிஞர்கள் அலெக்சாண்டிரியாவுக்கு வந்தனர். அங்கிருந்துதான் உலகின் அனைத்து மூலைக்கும் தத்துவங்கள், விஞ்ஞானம், ரசவாதம், பூகோளம், தெய்வீக தத்துவார்த்தங்கள் பரவத் தொடங்கியது. இப்படி சீரோடும் சிறப்போடும் வளர்ந்த அந்த நூலகம் கிமு 30ம் நூற்றாண்டில் ரோமானியர்களின் முறையற்ற ஆட்சிமுறையால் தீயில் கருகியது. அதிலிருந்து மீட்கப்பட்ட பல புத்தகங்கள் உலகின் பல நாடுகளுக்கு பயணப்பட்டு ஆங்காங்கே பரவத் தொடங்கின என்பது வரலாறு.

அதேபோல இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேகரிப்பட்ட பல்லாயிரம் புத்தகங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாக மெசபடோமியாவில் வாழ்ந்த மக்கள் தங்களுக்கான எழுத்துகளை களிமண்ணில் எழுதி அதை தீயில் சுட்டு கோயில் மற்றும் அரண்மனைகளில் பாதுகாத்தனர். இவை தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. இதுதான் முதல் நூலகம் தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தது. எகிப்தியர்கள் பாப்பிரஸ் (தருப்பை புல்) தயாரிக்கப்பட்ட ஏடுகளில் எழுதி அலெக்சாண்டிரியாவில் இருந்த நூலகத்தில் சேமித்து வைத்திருந்தனர்.

ரோமானியர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான ஜூலியஸ் சீசர், ரோம்நாட்டில் வாழ்ந்த வசதியானவர்களிடம் நன்கொடை வாங்கி பொது நூலகங்களை அமைத்துள்ளார். கிமு 4ம் நூற்றாண்டில் இப்படி 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்தன. தமிழகத்தில் புத்தகங்கள், நூல்கள் என்று அழைக்கப்பட்டன. பண்டைய காலத்தில் இருந்தே நமது முன்னோர்கள் பனை ஓலைகளைப் பதப்படுத்தி அதில் எழுதி கட்டுகளாக சேமித்து வைத்தனர். அவை ஓலைச்சுவடிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஓலைச் சுவடிகள் தமிழகத்தில் இன்றும் பாரம்பரிய பொருளாக பலரிடம் உள்ளன. அரசு சார்ந்த நிறுவனங்களான கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள ஓலைச்சுவடிகள் போக 70க்கும் மேற்பட்ட இடங்
களில் தமிழகத்தில் தனியாரிடத்தும், அரசு சார்ந்த நிறுவனங்களிலும் ஓலைச்சுவடிகள் இருக்கின்றன.

இந்நிலையில், கிபி 1400ம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய போட்லியின் என்ற பெயரில் அழைக்கப்பட்ட நூலகம் தான் உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகம். பின்னர் 1850ம் ஆண்டில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பொதுநூலகம் நிறுவும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகுதான் பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின. நூலகங்களுக்கும் மதிப்பும்
மரியாதையும் கூடியது. அச்சகத் தொழில் சூடுபிடிக்கத் தொடங்கியதும் புத்தகங்களின் தேவை அதிகரிக்கத் தொடங்கியது.
தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து பல்வேறு வகையான நுண் கருவிகள் வந்துவிட்டன. இப்போது நூலகங்களில் புத்தகங்களைப் பல்வேறு மென்பொருள் சாதனங்கள் மூலம் நாம் படிக்க முடியும்.

இன்றைய அளவில் பார்த்தால் வாஷிங்டனில் உள்ள சென்ட்ரல் நூலகம், அயர்லாந்தில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழக நூலகம், சென்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக நூலகம், நெதர்லாந்தில் உள்ள தி யு டெல்ப்ட் நூலகம், எகிப்தில் உள்ள பிப்லியோதிக எலெக்ஸண்டா, ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கர்ட் நகர நூலகம், சிங்கப்பூர் பீஷான் பொது நூலகம் ஆகியவை பிரசித்தி பெற்ற நூலகங்களாக உள்ளன.

தற்போது மென்பொருள் சாதனங்களின் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால் அச்சுப் பிரதிகளுக்கு மகிமை குறையத் தொடங்கிவிட்டது. உலகில் பல இடங்களில் அச்சுக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. புத்தகம் எழுதும் எழுத்தாளர்களும் எழுதுவதை நிறுத்தும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மென்பொருள் சாதனங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய புத்தகங்களை உருவாக்

கவும், பழைய புத்தகங்களைப் பாதுகாக்கவும் இப்போதும் நாம் தீவிரமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினருக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு. அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமக்கும் உள்ளது.      

                          

- கோவலூர் வி.புகழேந்தி


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • malar_modi12

  2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

 • peruearthqq1

  பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

 • Trump_japan11

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

 • kashmir_kola11

  தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

 • 20aacident_died11

  சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்