SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடனை திருப்பி கேட்டவர் மீது செல்போன் திருடியதாக புகார் விசாரணையில் போலீசார் அவதூறாக பேசியதால் 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி

2018-07-21@ 02:53:40

சென்னை: போலீசார் விசாரணைக்கு அழைத்து, அவதூறாக பேசி டார்ச்சர் கொடுத்ததால் 2 மகள்களுடன் பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர், ராஜாஜி நகரை சேர்ந்தவர் பரத்லால் (43). தேரடி தெருவில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராக்கி (38). இவர்களுக்கு ஜமுனா (21) மற்றும் ஷாலினி (17) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றும் அன்னசுந்தரி என்ற பெண், கடந்த சில மாதங்களுக்கு முன் பரத்லாலிடம் 1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அன்னசுந்தரி பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில், பரத்லால் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பரத்லால் மற்றும் அன்னசுந்தரிக்கு இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, அன்னசுந்தரி, சாத்தாங்காடு போலீசில் புகார் செய்தார். அதில், பரத்லாலின் 2வது மகள் ஷாலினி, தனது செல்போனை திருடியதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார், பர்தலால் வீட்டிற்கு சென்று ஷாலினி மட்டும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு தனியாக வரும்படி கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பரத்லால், மனைவி மற்றும் மகள்களுடன் காவல் நிலையம் சென்றார். அங்கு போலீசார், அன்னசுந்தரிக்கு ஆதரவாக பேசி, பரத்லால் மற்றும் அவரது மனைவி, 2 மகள்களையும் அவதூறாக திட்டி தீர்த்ததாக கூறப்படுகிறது. மேலும், விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், இரவு விசாரணை முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்றனர். அப்போது, போலீசார் அவதூறாக பேசியதை நினைத்து பர்தலால் மனமுடைந்துள்ளார். மேலும், மனைவி மற்றும் மகள்களிடம் கூறி கதறி உள்ளார். பின்னர், அவர் தூங்காமல் வீட்டிற்கு வெளியே சென்று தனியாக நின்று அழுதுள்ளார். சிறிது நேரத்திற்கு பின் பரத்லால், வீட்டிற்குள் உள்ளே வந்தபோது, மனைவி மற்றும் மகள் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். பின்னர், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார். அங்கு அவர்களுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், விசாரணை என்ற பெயரில் போலீசார் அழைத்து அவதூறாக பேசி டார்ச்சர் செய்ததால், அவர்கள் அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பரத்லால் கூறுகையில், ‘‘நான் கொடுத்த கடனை கேட்டபோது, ஊர்காவல் படையை சேர்ந்த அன்னசுந்தரி எனது மகள் மீது செல்போன் திருடியதாக புகார் கொடுத்துள்ளார். ஆனால், நான் கொடுத்த புகாருக்கு போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. விசாரணை என்ற பெயரில் போலீசார் அவதூறாக பேசியதால் மனமுடைந்த மனைவி மற்றும் மகள்கள் அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். அதே காவல்நிலையத்தில் அன்னசுந்தரி பணிபுரிவதால், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்’’. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்