SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக ஆட்சியில் பாலியல் தாக்குதல் அதிகரிப்பு : ஸ்டாலின் கண்டனம்

2018-07-21@ 02:10:34

சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இதயமுள்ள எவரையும் நடுங்க வைக்கும் கொடூரம், சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமிக்கு நேர்ந்திருக்கிறது. ஏதுமறியா அந்தப் பிஞ்சு உடலையும், உள்ளத்தையும் 17 பேர் சீரழித்திருப்பது மன்னிக்க முடியாத மாபாதகச் செயல். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்ன நிலையில் இருக்கிறது என்ற கோபம் மக்கள் மனதில் வெடிக்கிறது. அதனால்தான், குற்றமிழைத்த 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் ஆவேசம் கொண்டு அவர்களை தாக்கியிருக்கிறார்கள்.

டெல்லியில் நிர்பயா, காஷ்மீரில் ஆசிபா என இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் இத்தகைய கொடூரங்கள் வகை தொகையின்றி தொடர்கின்றன. அதிலும் 2011ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், சிறுமியருக்கு நேரும் பாலியல் கொடூரங்கள், மூத்த குடிமக்களை நகை பணத்திற்காக கொலை செய்யும் கொடுமை ஆகியவை அதிகரித்து வருவதை தேசிய அளவிலான புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.

சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்முறை நிகழ்வுகளைத் தடுத்திடும் வகையில் உரிய முறையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டு, அவை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும்.  ஆனால், அந்த அக்கறை இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கான 13 அம்ச அறிவிப்பை 1.1.2013ல் அந்த ஆண்டின் முதல் அறிவிப்பாக ஜெயலலிதா வெளியிட்டார்.

அதில், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பெண் காவலர்களைக் கொண்ட சிறப்பு படை, பாலியல் கொடுமை செய்யும் ஆண்களுக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை, ஜாமீனில் வர முடியாத அளவுக்கு வலிமையான சட்டம் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. அத்தகைய குற்றம் புரிந்தோர் எவர் மீதும் நடவடிக்கையும் இல்லை. காரணம், 13 அம்சத் திட்டத்தை செயல்படுத்த ஜெயலலிதா தலைமையிலான அரசே அக்கறை காட்டவில்லை.

அயனாவரத்திலும், திருவண்ணாமலையிலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நேர்ந்த கொடூரத்தின் உண்மைப் பின்னணிகளை முழுமையாக விசாரித்து, குற்றமிழைத்த அனைவரையும் தண்டித்திட வேண்டும். அதற்கேற்ற வகையில், வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அவலமான சூழலில், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது தனி கவனம் செலுத்திட வேண்டியது அவசியமாகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம், பெருகி வரும் குற்றங்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் நடவடிக்கைகளையும் அவர்களிடம் ஏற்படும் மன மாற்றங்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து, நல்ல ஆலோசகர்களாக செயல்பட வேண்டிய கடமையும் தாய்மார்களுக்கு இருக்கிறது.அதில் தந்தையின் பங்கும் முக்கியமானது. அப்போதுதான், பாலியல் தொல்லைகளுக்கு வேலியிட்டு சிறுமிகளைப் பாதுகாத்திட முடியும். இன்னொரு முறை இந்த மாபாதகம் தமிழகத்தில் நடக்கக்கூடாது என வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்