SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவு கேட்கும் ஆறுகள்

2018-07-16@ 01:18:22

இயற்கை இடர்பாடுகளால் உலகில் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே போகின்றன. அதிலும் வெள்ளத்தால் நிகழும் விபத்துகள் பச்சாதாபத்தை உருவாக்கும். டைட்டானிக் கப்பல் விபத்து தொடங்கி நம்மூரின் படகு சவாரி வரை நீரில் நடக்கும் விபத்துகள், ஆற்றின் காவுகளை அவ்வப்போது படம் பிடிக்கின்றன. உலக அளவில் நடக்கும் படகு விபத்துகளில் அதிகளவில் அகதிகளே பலியாகி வருகின்றனர். வேறு நாட்டுக்கு சென்று குடியேற வேண்டும் என்ற எண்ணத்தில் படகுகளில் தப்பிச் செல்லும் அகதிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது வாடிக்கை. லிபியாவில் இருந்து இத்தாலிக்கு தஞ்சம் புக சென்ற அகதிகளும், இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகளும் நூற்றுக்கணக்கில் கொத்துக்கொத்தாக மடிந்தது கடந்தகால வரலாறு. இந்தியாவிலும் படகு விபத்துகள் ஏராளமானோரை பலிகொண்டு வருகிறது. இத்தகைய சம்பவங்கள் தென்மாநிலங்களில் அதிகளவில் ஆந்திராவிலும், கேரளாவிலுமே நடக்கின்றன.

கேரளாவில் நடக்கும் விபத்துகள் பெரும்பாலும் சுற்றுலாவை மையமாக கொண்டவை. ஆந்திராவில் நடக்கும் படகு விபத்துகள் மக்களுக்கான ஜீவாதாரத்தோடு தொடர்புடையதாகும். ஆந்திராவில் கோதாவரி ஆற்றை ஒட்டியுள்ள கிராம மக்கள், பக்கத்து கிராமங்களுக்கு செல்லக்கூட படகையே பயன்படுத்தியாக வேண்டும். கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரம் தேடி நகரம் செல்லவும், பள்ளி மாணவ, மாணவிகள் படிப்பதற்கு கல்வி நிலையங்கள் செல்லவும் ஆற்றை கடந்தாக வேண்டும். போதிய பாலங்களும், போக்குவரத்து வசதிகளும் இல்லாத கிராமங்களுக்கு படகுகளே வாழ்க்கைக்கு உதவும் வாகனமாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் கோதாவரி ஆற்றில் படகு விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும். நேற்று முன்தினம் கூட இந்த ஆற்றில் 40 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து பலர் மாயமாகிவிட்டனர்.

கடந்த மே மாதம் கிழக்கு கோதாவரி ஆற்றில் கொண்டமொதலு என்னும் இடத்தில் நடந்த படகு விபத்தில் 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. பசுவுலங்கா, தலாரி பாளையம், வலசதிப்பா என பல கிராமங்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு படகு போக்குவரத்தையே நம்பியுள்ளன. ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் நடக்கும் படகு விபத்துகள் பெரும்பாலும் பாலப்பணிகள் சார்ந்தே அமைகின்றன. பாலம், பாலத்திற்கு போடப்படும் தூண்கள், கம்பிகள் ஆகியவற்றின் மீது படகுகள் மோதியே விபத்துகள் நிகழ்கின்றன. கோதாவரி ஆற்றில் வெள்ளம் திரண்டு வரும்போது படகுகளுக்கான பாதைகள் சரியாக தெரிவதில்லை. ஆந்திராவில் அடிக்கடி நடக்கும் படகு விபத்துகளை தடுக்க அம்மாநில அரசு புதிய திட்டங்களை தீட்டி வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களில் படகு விபத்துகள் நடந்து வருகின்றன.

கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் மீனவர்களின் படகில் சுற்றுலா சென்ற 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் படகு விபத்துகள் ஒரு சம்பவமாக பார்க்கப்படுகிறதே தவிர, அதை தவிர்க்கும் வழிமுறைகள்  சரியாக பின்பற்றப்படுவதில்லை. படகு சவாரியின்போது உயிர் காக்கும் ஆடைகள் (லைப் ஜாக்கெட்) கண்டிப்பாக அணிய வேண்டும். சுற்றுலா செல்லும் படகுகளை முறையாக மராமத்து செய்து பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் படகுகளில் பயணிகளை ஏற்றக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் பெயரளவில் உள்ளன. படகு உரிமையாளர்களும், சுற்றுலாத்துறை அதிகாரிகளும் விபத்துக்கு பின்னரே இத்தகைய விதிமுறைகள் குறித்து விவாதிக்கின்றனர். சுற்றுலா மட்டுமின்றி படகில் பயணிக்கும் எந்த ஒரு நபரும் படகில் உயிர் காக்கும் சாதனங்கள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வதே நல்லது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்