SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குடிநீர் உள்பட அடிப்படை வசதியில்லை 200 மாணவர்களுக்கு இரண்டே ஆசிரியர்கள்

2018-07-14@ 12:26:57

சிதம்பரம்: சிதம்பரம் அருகே 200 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியில் இரு ஆசிரியர்கள் மட்டுமே பாடம் எடுக்கும் அவலம் நீடிக்கிறது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதால், பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்ற இருப்பதாக பெற்றோர் ஆவேசத்துடன் கூறினர். கடலூர் மா வட்டம், சிதம்பரம் அருகே 16 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமம். இக்கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் நஞ்சைமகத்து வாழ்க்கை, நெடுஞ்சி, வடக்குசாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 9 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இந்த பள்ளியில் தற்போது 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதில் ஒரு ஆசிரியை மகப்பேறு விடுப்பிலும் மற்றொரு ஆசிரியர் பயிற்சிக்காகவும் சென்றுவிட்டனர்.

தற்போது பள்ளி தலைமையாசிரியர் பரந்தாமன் மற்றும் ஆசிரியர் குணசேகரன் ஆகிய இருவர் மட்டுமே 200 மணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கின்றனர். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் குணசேகரனும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலைமையாசிரியர் பரந்தாமனும் வகுப்புகள் எடுக்கின்றனர்.

இவர்களே தமிழ், கணக்கு, ஆங்கிலம், அறிவியல், வரலாறு என அனைத்து பாடங்களும் நடத்துகின்றனர். பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியரும் கிடையாது. பாடம் நடத்த ஆசிரியர் இல்லாததால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் இளைஞர் ஒருவரை ஆசிரியராக நியமித்துள்ளனர். இப்பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். தண்ணீர் இல்லாததால் கழிவறைகள் பூட்டப்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் மட்டுமில்லை நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமம் முழுவதிலும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இப்பள்ளியில் ஆசிரியர்கள் பணம் போட்டு கிள்ளையில் இருந்து டேங்கரில் வரும் தண்ணீரை விலைக்கு வாங்குகின்றனர். இப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்திற்கு தினமும் ரூ.50க்கு தண்ணீர் காசு கொடுத்து வாங்கும் அவலம் உள்ளது. இப்பள்ளி 1990ல் கட்டப்பட்டுள்ளது. 28 வருடங்களை கடந்துவிட்ட இப்பள்ளியின் கட்டிடம் மிக மோசமான நிலையில் உள்ளது. கட்டிடம் ஆங்காங்கே பழுது ஏற்பட்டுள்ளதால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அவ்வப்போது பூச்சி வேலைகள் செய்து ஓட்டி வருகின்றனர். பள்ளியின் முன் பக்கம் வர்ணம் பூசப்பட்டுள்ளதால் பள்ளி கட்டிடம் சேதமடைந்துள்ளது தெரியவில்லை. பள்ளியின் பின்புறம் சென்று பார்த்தால் கட்டிடம் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை அறியலாம். மழைக்காலங்களில் வேகமாக ஒரு இடி இடித்தால் கூட கட்டிடம் இடிந்து விழும் நிலை உள்ளது. கும்பகோணம் பள்ளி விபத்து போல் பெரிய விபத்து ஏற்படுவற்குள் பள்ளி கட்டிடத்தை அரசு புதுப்பிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரி வருகின்றனர்.

இதுகுறித்து நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த ரவி கூறுகையில், இந்த பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களை இரு ஆசிரியர்கள் எப்படி கவனிக்க முடியும். கடந்த ஆண்டில் மாணவர் ஒருவரை இடைவேளை நேரத்தில் பள்ளி வளாகத்தில் பாம்பு கடித்ததால் இறந்து போனான். பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.

அதே ஊரை சேர்ந்த பரமேஸ்வரன் கூறுகையில், பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாத தால் இப்பள்ளிக்கு பெண் ஆசிரியர்கள் வரவே அச்சப்படுகின்றனர். ஆகையால் பள்ளிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.


இக்கிராமத்தை சேர்ந்த அருள் கூறுகையில், சேதமடைந்துள்ள இப்பள்ளிக்கு புது வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இக்கிராமம் மற்றும் பள்ளிக்கு நல்ல தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நஞ்சைமகத்து வாழ்க்கை கிராம பெண்கள் கூறுகையில், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் எங்கள் குழந்தைகளை அந்த பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது. மேலும் இக்கிராமத்திற்கு ஒரு சில பஸ்களே வருவதால் ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

நாங்கள் குடிதண்ணீர் மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தியும் எவ்வித பலனுமில்லை. மேலும் பள்ளியில் புதிய கட்டிடம், தண்ணீர் வசதி, கூடுதல் ஆசிரியர்கள் நியமித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாவிட்டால் விரைவில் நாங்கள் பள்ளிக்கு குழந்தைகள் அனுப்புவதை நிறுத்த போகிறோம் என்றார். ஆகையால் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் உடனடியாக இப்பள்ளியை ஆய்வு செய்து புதிய கட்டிடம், கூடுதல் ஆசிரியர்கள், தண்ணீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்