SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தின் பிரக்ஸிட் ஒப்பந்தம்: அமெரிக்க வர்த்தகத்தை அழித்து விடும் அதிபர் டிரம்ப் நேரடி குற்றச்சாட்டு

2018-07-14@ 01:15:41

லண்டன்: ‘‘இங்கிலாந்தின் பிரக்ஸிட் ஒப்பந்தம் அமெரிக்க வர்த்தகத்தை அழித்து விடும்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து முடிவெடுத்து விட்டது. இதற்கான பிரக்ஸிட் ஒப்பந்த நடைமுறைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் 29ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறது இங்கிலாந்து. இதற்கான செயல் திட்டங்களை பிரிட்டன் பிரதமர் தெரசா மே உருவாக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், பிரக்ஸிட் அமைச்சர் டேவிட் டேவிஸ் உட்பட 2 அமைச்சர்கள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தனர்.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 4 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அவருக்கு ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள  பிளென்ஹீம் அரண்மனையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, டிரம்ப் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, ராபர்ட் முர்டோச் உரிமையாளராக உள்ள சன் பேப்பருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இங்கிலாந்து பிரதமரின் பிரக்ஸிட் செயல் திட்டமானது, அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் எந்தவித வர்த்தக ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு நம்பிக்கையை சீர்குலைக்கும். தற்போதைய திட்டப்படி அவர்கள் ஒப்பந்தம் செய்தால், நாங்களும் இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்வதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்வோம்.

இந்த புதிய திட்டம் அமெரிக்கா உடனான இங்கிலாந்தின் வர்த்தகத்தை அழித்து விடும். இதை இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயிடம் நான் தெளிவாக எடுத்துக் கூறினேன். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனது பேச்சை அவர் கேட்கக்கூட மறுத்துவிட்டார். இருப்பினும், இந்த பிரச்னையின் தாக்கம் குறித்து நான் தெளிவாக எடுத்துக் கூறினேன். ஆனால், அவர் வேறுபாதையில் செல்ல முடிவெடுத்து விட்டார். அமெரிக்காவை சரியான முறையில் நடத்தவில்லை என்றால் ,ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பை நான் உடைப்பேன். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த பேட்டி, இங்கிலாந்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த மேயர்
தனது பேட்டியில் டிரம்ப் கூறுகையில், ‘‘பாகிஸ்தானை சேர்ந்த சாதிக்கான் தற்போது லண்டன் மேயராக உள்ளார். அவர் என்னை சரியாக வரவேற்கவில்லை. என் வருகையை  எதிர்த்து ஏராளமானோர் போராடினார்கள். ஆனால், நான் லண்டனை நேசிக்கிறேன். மேயர் சாதிக்கான் லண்டன் நகரில் நடக்கும் குற்றத்தை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறார்’’ என்று கிண்டல் செய்த டிரம்ப் மேலும் கூறுகையில், ‘‘ என்னை பொறுத்தவரையில் லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மேயர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக அவர் மிகவும் மோசமான பணியைத்தான் செய்துள்ளார். குற்றங்களுக்கு எதிராகவும் பார்த்தால் அவரது பணி மிகவும் மோசம்’’ என்றார்.

இங்கிலாந்து எம்பிக்கள் டிரம்ப்புக்கு கண்டனம்
இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை விமர்சனம் செய்ததற்கு, அந்த நாட்டு எம்பி.க்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பழமைவாத கட்சி எம்பி சாரா வோலாஸ்டன் கூறுகையில், ‘‘டிரம்ப் திட்டமிட்டு பிரதமர் தெரசாவை அவமானப்படுத்தி விட்டார்’’ என்றார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்பி பென் பிராட்ஷா கூறுகையில், ‘‘நமது பிரதமர் மிகவும் பலவீனமாக  இருக்கிறார். இல்லாவிட்டால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்ட ஒருவர் அவரை அவமானப்படுத்துவாரா?’’ என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்