SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லண்டனில் இன்று 2வது ஒருநாள் போட்டி தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

2018-07-14@ 01:12:23

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து மோதும் 2வது ஒருநாள் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை வகிக்கும் இந்தியா, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. குல்தீப் யாதவின் ‘மணிக்கட்டு’ மந்திர சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து, 49.5 ஓவரில் 268 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

தொடக்க வீரர்கள் ராய், பேர்ஸ்டோ தலா 38, பென் ஸ்டோக்ஸ் 50, பட்லர் 53, மொயீன் அலி 24, ரஷித் 22, கேப்டன் மோர்கன் 19 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 10 ஓவரில் 25 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். உமேஷ் 2, சாஹல் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா, 40.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்து மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தியது.
ஷிகர் தவான் 40 ரன் (27 பந்து, 8 பவுண்டரி), கேப்டன் கோஹ்லி 75 ரன் (82 பந்து, 7 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். அபாரமாக விளையாடிய ரோகித் ஷர்மா 82 பந்தில் சதம் விளாசினார். ரோகித் 137 ரன் (114 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்), கே.எல்.ராகுல் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா வரிந்துகட்டுகிறது. ஏற்கனவே டி20 தொடரை வென்றதுடன், முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம், சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடும் இங்கிலாந்து அணி, இந்த போட்டியில் வென்று சமன் செய்வதன் மூலமாக தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்தியா: கோஹ்லி (கேப்டன்), தவான், ராகுல், ரோகித், ரெய்னா, கார்த்திக், டோனி, ஹர்திக், ஷ்ரேயாஸ் அய்யர், அக்சர் பட்டேல், குல்தீப், சாஹல், சித்தார்த், புவனேஷ்வர், உமேஷ், ஷர்துல் தாக்கூர்.
இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), மொயீன், ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜேக் பால், பட்லர், டாம் கரன், ஹேல்ஸ், பிளங்கெட், ஜோ ரூட், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்