SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2வது மாடியில் இருந்து மாணவியை தள்ளிவிட்டு கொன்ற போலி பயிற்சியாளர் கைது

2018-07-14@ 00:37:12

கோவை: கோவை கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விளக்கத்தின்போது, 2-வது மாடியில் இருந்து குதிக்க மறுத்த மாணவியை கீழே தள்ளிக் கொன்ற பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். இவர், போலி சான்றிதழ் தயாரித்து பயிற்சி அளித்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
கோவை நரசீபுரத்தில் கலைமகள் கலை அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் நேற்று முன்தினம், தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. இதில், 7 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆறுமுகம் என்பவர் பயிற்சி அளித்தார். 2-வது மாடியில் இருந்து பயிற்சியாளர் ஆறுமுகத்தின் ஆலோசனைப்படி மாணவர்கள் கீழே குதிக்க வேண்டும். அப்படி குதிக்கும் மாணவர்களை காப்பாற்ற 20 மாணவர்கள் கீழே வலையை  பிடித்துக்கொண்டு இருந்தனர். 4 மாணவர்கள் 2-வது மாடியில் இருந்து குதித்தனர். அவர்கள் வலையில் விழுந்து பத்திரமாக தப்பினர். 5-வதாக 2ம் ஆண்டு பி.பி.ஏ படிக்கும் லோகேஸ்வரி (19) குதிக்க வந்தார். ஆனால், திடீரென உயிருக்கு பயந்து மறுத்துவிட்டார். அவரிடம் பயிற்சியாளர் ஆறுமுகம், ‘‘தயங்கவேண்டாம், கீழே குதித்து விடு’’ என அறிவுறுத்தினார். லோகேஸ்வரி மறுக்கவே வலுக்கட்டாயமாக பயிற்சியாளர் கீழே தள்ளிவிட்டார். முதல் மாடி சன்சேடில் மோதி, வலையில் விழுந்தார். படுகாயமடைந்த அவரை உடனடியாக தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவர்கள் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மாணவி இறந்தார்.

இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, பயிற்சியாளரான சென்னை கேளம்பாக்கம் அடுத்த மாம்பாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் (31) என்பவரை கைது செய்தனர். இவர் மீது 304 (2) (மரணம் ஏற்படும் அபாயம் இருப்பது தெரிந்து தள்ளி விடுதல்) என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், கோவை ஜே.எம். எண்-5 கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக ஆறுமுகத்திடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது: கடந்த 2014ம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (என்.டி.எம்.ஏ.) டிப்ளமோ படிப்பு முடித்தேன். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆணையத்தில் பணியாற்றுவதாக போலியாக சான்று தயாரித்து கல்லூரிகளில் பயிற்சி அளித்து வந்தேன். கோவையில் பிரபலமாக உள்ள 10 கல்லூரிகளில் என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். தீ பிடித்தால் எப்படி தப்பி செல்வது, கட்டிடங்களில் இருந்து கயிறு மூலமாக இறங்குவது போன்ற பயிற்சி வழங்கி வந்தேன்.

ேநற்று முன்தினம் கலைமகள் கல்லூரியில் நான் தேர்வு செய்த மாணவ, மாணவிகள் 2வது மாடியில் இருந்து குதித்தார்கள். லோகேஸ்வரி குதிக்க முன் வந்தார். ஆனால் உயரத்தை பார்த்து மறுத்து விட்டார். அவர் நான் கூறியதை கேட்கவில்லை. இதனால் தள்ளிவிட்டேன். இதுபோன்ற விபரீதம் நடக்கும் என நினைக்கவில்லை.இவ்வாறு வாக்குமூலம் அளித்து இருந்தார். இதனிடையே, மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி படித்த கல்லூரிக்கும் மறுதேதி குறிப்பிடப்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி சான்றிதழ்: கைதான ஆறுமுகம் எம்.காம், எம்.எஸ்.சி சைக்காலஜி, பி.எட், எம்.பில், டி.டி.எம் பிஎச்டி முடித்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரது சான்றிதழை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அது போலி என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, இவர் மீது, போலி ஆவணங்களை காண்பித்து பயிற்சி நடத்தியதாக தனி வழக்கு பதிவு செய்தனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு:  இந்த சம்பவத்தில், பயிற்சியாளர் ஆறுமுகம் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், நிர்வாகம் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, `நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், `கல்வி நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும்’ என்று உறவினர்கள் கேட்டுக் கொண்டனர். 5 லட்சம் நிதி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், `கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளிமலைப்பட்டிணத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்த, ஆலாந்துறைரையை சேர்ந்த நல்லாக்கவுண்டர் என்பவரின் மகள் யோகேஸ்வரி, பயிற்சியின்போது, ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். உயிரிழந்த யோகேஸ்வரியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த யோகேஸ்வரி குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

‘டிசாஸ்டர் ஆறுமுகம்’

கைதான ஆறுமுகம் ‘டிசாஸ்டர் ஆறுமுகம்’ என்ற பெயரில் கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கி வந்துள்ளார். கல்லூரிக்கு ஏற்ப கட்டணத்தை வசூலித்து இருக்கிறார். வெப்சைட்டில் இவரது பயிற்சி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தம்பிதுரை குடும்பத்துக்கு சொந்தமான கல்லூரி


கோவையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை கோவை கலைமகள் கல்வி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவராக இருப்பவர் டாக்டர் பானுமதி தம்பிதுரை. இவர், அ.தி.மு.க. மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையின் மனைவி ஆவார்.  2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற ேதர்தலில், கரூர் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரை, அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது மனைவி கல்லூரியின் அறக்கட்டளை தலைவராக இருக்கும் தகவலை குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அருகே ஆறுமுகம் தங்கியிருந்த வீட்டில் சோதனையிட முடிவு


போலீசார் விசாரணையில், ஆறுமுகம் திருநெல்வேலி மாவட்டம் கட்டளை கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் என்பதும், இவர் போலியாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதும், தெரியவந்தது.  மேலும் சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்த மாம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதும் அங்கிருந்து தான் பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக மீட்பது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்குவதும் தெரியவந்தது. மேலும் பல்வேறு கல்லூரிகளுக்கு மாம்பாக்கம் முகவரியில் இருந்து கடிதம் அனுப்பி இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கோவை போலீசார் காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் மாம்பாக்கம் சென்று பயிற்சியாளர் ஆறுமுகம் தங்கி இருந்த அறையில் பார்வையிட்டனர். அவரது அறை பூட்டப்பட்டிருந்ததால் வீட்டின் உரிமையாளர் சங்கர் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஆறுமுகம் இந்த வீட்டில் தங்கி இருப்பது உறுதி ஆனது. இருப்பினும் அறை பூட்டப்பட்டிருப்பதால் உயர் அதிகாரிகளின் உத்தரவு மற்றும் நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகு தான் அறையை திறந்து சோதனையிட முடியும் என்பதால் போலீசார் திரும்பிச் சென்றனர்.

உள்துறை அமைச்சகம் விளக்கம்

இச்சம்பவம் குறித்து உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,” கோவை சம்பவத்தில் பயிற்சியாளர் ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர் கிடையாது. உரிய பாதுகாப்பு முன்னேற்ப்பாடுகள் இல்லாமல் இதுபோன்ற பயிற்சியை பேரிடர் ஆணையம் கண்டிப்பாக நடத்தாது. அதனால் இந்த சம்பவத்திற்கும் பேரிடர் ஆணையத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது” என தெரிவித்துள்ளது. இதில் பேரிடர் மேலாண்மை வாரியம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது.

கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

கோவையில் நேற்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறும்ேபாது, ``கோவையில் பேரிடர் மீட்பு ஒத்திகையின்போது கல்லூரி மாணவி இறந்த சம்பவம் வருந்தத்தக்கது. ஒத்திகை பயிற்சியின்போது மாணவியே இறங்க தயங்கியபோது, பயிற்சியாளர் அவரை தள்ளிவிட்டது மோசமான செயலாகும். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் மீதும் போலீசாரால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசு, தனியார் கல்லூரிகளில் இதுபோன்று பயிற்சி அளிக்கும்போது சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விருப்பம் உள்ளதா என கேட்டறிந்து செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்