SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சியில் 8 வழிச்சாலைக்கு 3வதுநாளாக நிலம் அளவீடு வீடுகளை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை : கூடுதல் நிவாரணம் தரப்படும் என கோட்டாட்சியர் உறுதி

2018-07-13@ 02:33:45

காஞ்சிபுரம் : சேலம் - சென்னை இடையே அமைக்கப்படும் 8 வழி பசுமை சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 59.1 கி.மீ தூரம் அமைய உள்ளது. இதற்கு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அருகில் உள்ள 10 கிராமங்களில் ஜூலை 10ம் தேதி காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் ராஜூ தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் துண்டல் கழனியில் தொடங்கி கரசங்கால், படப்பை, கொற்கைதாங்கல், ஒரத்தூர், நாட்டரசன்பட்டு வரை 10ம் தேதி அளவீடு செய்யும் பணி நடந்தது. நேற்று முன்தினம் காலை பெரும்புதூர் தாலுகா  வடக்குப்பட்டு தொடங்கி செங்கல்பட்டு தாலுகா  குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், சீத்தனஞ்சேரி ஆகிய 5 கிராமங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து மூன்றாம் நாளாக நேற்று இரண்டு குழுக்களாக அளவீடு செய்யும் பணியை செய்தனர்.

ஒரு குழுவினர் புத்தளி, புலிவாய், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளிலும், இரண்டாவது குழுவினர் குருவன்சேரி, அரும்புலியூர், ஆனம்பாக்கம், பினாயூர், சிறுமயிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அளவீடு செய்தனர். இந்தப் பகுதிகளில் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் வருவதால் பொதுமக்கள் எதிர்ப்பு அதிகமாக இருக்கும் என்பதன் அடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யும் பணி நடக்கிறது. உத்திரமேரூர் பகுதியில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜூ தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை குருவன்சேரி, சீத்தனஞ்சேரி, அரும்புலியூர், சீத்தாவரம் ஆகிய கிராமங்களில் நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டனர். சீத்தாவரத்தில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் 25 வீடுகள் இடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புக்கு வந்த போலீசார் கிராம மக்களை சமாதானப்படுத்தினர். வீடுகளை இழப்பவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்கப்படும் என கோட்டாட்சியர் ராஜூ கூறினார்.

எவ்வளவு இழப்பீடு தந்தாலும் ஈடாகுமா?
மணல்மேடு பகுதி மூதாட்டி கனகம்மாள்: 35 வருடமாக கணவர் இல்லாமல் இந்த இடத்தில் பயிர் செய்து வசித்து வருகிறோம். எனது கணவர் இல்லாமல் குழந்தையைப் போல இந்த இடத்தில் பயிர் செய்து வரும் வருமானத்தில்தான் பேரக்குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன். 35 வருடமாக பயிர் செய்து பிழைப்பு நடத்திவரும் எங்களுக்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் அது ஈடாகுமா.. குழந்தை மாதிரி என்னோட வளர்ந்த, வாழ்ந்த இடத்தை எப்படி விட்டுக் கொடுப்பது என வரப்பில் கதறிக் கதறி அழுது ஒப்பாரி வைத்தது பார்ப்பவர்களை கலங்கச் செய்தது. இருமரம் கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் : இங்கு 2.80 ஏக்கர் நிலம் உள்ளது. காலம்காலமாக நெல் பயிரிட்டு வாழ்ந்து வருகிறேன். இப்போது திடீரென நிலம் கையகப்படுத்தப்படுவதாக அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. சுமார் 35 வருடங்களுக்கு முன்பு தலையில் மண் சுமந்து பார்த்து பார்த்து கிணறு வெட்டினோம். அப்படி கிணறு வெட்டும்போது வேலை முடித்துவிட்டு மறுநாள் காலை மறுபடியும் சரிந்து போயிருக்கும். எனவே, மறுபடியும் சரிசெய்து கிணறு வெட்டினோம். இந்த நிலத்துக்கு பாசனத்துக்கு பயன்பட்ட கிணறை எடுப்பதுதான் எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது என்றார்.

சுடுகாடும் தப்பவில்லை
கன்னிக்குளம் பகுதியில் அளவீடு செய்யும்போது எரிமேடையின் நடுப்பகுதியில் அளவீட்டுக் கல்லை பணியாளர்கள் நட்டனர். இதனைப் பார்த்து வாயடைத்துப்போன அப்பகுதி மக்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தினார்கள். இது போதாதென்று இறந்த பிறகு எரிக்கும் எரிமேடையையும் விட்டு வைக்காமல் நில அளவீடு செய்து கல் நட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் சுடுகாடு கூட இல்லாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். ஆனால் எங்கள் பகுதியில் இருந்த சுடுகாடும் பறிபோகிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கவலையுடன் தெரிவித்தனர். இருமரம் கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. நெல் விளைந்து இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் நெல் வயலிலும் அளவீடு செய்து கல் நட்டனர்.

அறுவடை செய்யும் நேரத்தில் நிலத்தின் நடுவில் கல் நடுகிறீர்களே.. எப்படி அறுவடை செய்வது... இந்த நெல்லை விளைவிக்க நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பது ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாதா.. மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்கிறார்களே என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். சட்டம் ஒழுங்கு பிரச்னையின்போது குறைந்த அளவில் பாதுகாப்புக்கு வரும் போலீசார், இந்த எட்டு வழிச்சாலைக்கு சிறிய கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்துவதாக உள்ளது. ஆட்சியாளர்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை மறைமுகமாக மிரட்டி அச்சுறுத்தி  பணியவைக்கும் முயற்சியாகவே இந்த போலீஸ் குவிப்பு உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குண்டு வைத்து விட்டு நிலத்தை எடுங்கள் முதியவர் ஆவேசம்
உத்திரமேரூர் அடுத்த சீத்தாவரத்தில் அதிகாரிகள் நில அளவீடு செய்ய சென்றனர். விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என்ற தகவலால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் கூடுதலான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அந்தப் பகுதியே பதற்றமாக காணப்பட்டது. அப்போது அங்கு வந்த முதியவர், என் காலம் போயிடுச்சி, இனிமே என் சந்ததிதான் வாழணும், எனவே, இங்க குண்டு போட்டு அழிச்சிட்டு அப்புறம் நிலத்தை அளவீடு செய்யுங்க என ஆவேசமாகக் கூறியது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்