SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டதால் சுற்றுலா தலமாகிறது ‘தாம் லுவாங்’ குகை

2018-07-13@ 01:24:34

மே சாய்: தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட ‘தாம் லுவாங்’ குகை, கடந்த 20 நாட்களில் உலகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டதால், அதை சுற்றுலா தலமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள ‘தாம் லுவாங்’ குகைக்குள், கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், ஒரு பயிற்சியாளரும் தங்கள் பெயரை எழுதுவதற்காக கடந்த மாதம் 23ம் தேதி நுழைந்தனர்.  கனமழை பெய்து வெள்ளநீர் புகுந்ததால், உயிர் தப்புவதற்காக அவர்கள் குகைக்குள் 4 கி.மீ தூரம் சென்று விட்டனர். சர்வதேச குழுவினரும், தாய்லாந்து கடற்படை வீரர்களும் 18 நாட்களாக போராடி அவர்களை மீட்டனர். இது பற்றி தாய்லாந்தின் தேசிய செய்தி தாளின் முதல் பக்கத்தில் ‘‘சர்வதேச ஒத்துழைப்புக்கு கிடைத்த வெற்றி’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மீட்பு பணி வீரர்களின் படங்களை ஒன்றாக தொகுத்து ‘நீங்கள்தான் ஹீரோ’ என்ற தலைப்பில் பாங்காக் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 20 நாட்களாக செய்தியில் பரபரப்பாக இடம் பிடித்ததால், தாய்லாந்தின் தாம் லுவாங் குகை உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டது. இது பற்றி தாய்லாந்து குகை மீட்பு குழுவினர் தலைவர் நராங்சக் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்த குகை முழுவதும் மியூசியமாக மாற்றப்படும். சிறுவர்களை மீட்பதற்கு பயன்படுத்திய உடைகள் சாதனங்கள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த இடம் தாய்லாந்தின் மற்றொரு முக்கியமான சுற்றுலா தலமாக மாறும் என நம்புகிறேன்.  மீட்பு பணிக்கு பயன்படுத்திய உபகரணங்கள் இன்னும் அங்கு உள்ளன. குகைக்குள் வெள்ள நீர் அளவு உயர்ந்து வருவதால் அவை அகற்றப்படவில்லை. அதனால், குகை பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை’’ என்றார்.

ஹாலிவுட் படமாகிறது

தாய்லாந்து குகை மீட்பு பணி உலகின் கவனத்தை கவர்ந்துவிட்டதால், அதை ஹாலிவுட் திரைப்படமாக்க ‘காட்ஸ் நாட் டெட்’ திரைப்படத்தை எடுத்த ப்யூர் பிளிக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரி மைக்கேல் ஸ்காட் பெரும்பாலான நாட்கள் தாய்லாந்தில் வசிப்பவர். இவர் சிறுவர்கள் மீட்பு பணியை பல நாட்களாக நேரடியாக பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நான் நேரில் பார்த்த மீட்பு குழுவினரின் தைரியம், வீரசெயல் ஆகியவை வியக்கவைத்தது. இதை நாங்கள் திரைப்படமாக எடுக்க போகிறோம். இதற்காக மீட்பு பணியில் ஈடுபட்ட 90 நீர்மூழ்கி வீரர்கள், சிறுவர்களின் பெற்றோர்கள் ஆகியோரிடம் பேசியுள்ளேன்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 129JawaharlalNehru

  நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

 • 2018TiruvannamalaiDeepam

  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

 • israelfire

  காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

 • singaporeasianmodi

  சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

 • crowd_thiruchendhuru11

  சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்