SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் முறையாக பைனலில் குரோஷியா

2018-07-13@ 01:20:36

மாஸ்கோ: பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் அரை இறுதிப் போட்டியில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 109வது நிமிடத்தில்  குரோஷியாவின் மான்ட்ஜூகிக் அடித்த கோலால் இங்கிலாந்து ரசிகர்கள் நொறுங்கிப் போயினர். மாஸ்கோவின் லஸ்னிகி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில் துவக்கத்திலேயே அனல் பறந்தது. 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு ப்ரீ-கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில், கோல் போஸ்ட்டை மறைத்து குரோஷியா  வீரர்கள் அணிவகுத்து நிற்க, கெய்ரன் டிரிப்பியர் பந்தை உதைத்தார். அசுர வேகத்தில் காற்றில் சிட்டாக பறந்த பந்து, குரோஷியா வீரர்களை கடந்து கோல்கீப்பர் சுபாசிக்காலும் தடுக்க முடியாமல் வலைக்குள் புகுந்தது. இது, டிரிப்பியரின் முதல் சர்வதேச கோல். 5வது நிமிடத்திலேயே முன்னிலை பெற்றதால் இங்கிலாந்து வீரர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

இதற்கு பதிலடி தர குரோஷியா வீரர்கள் பலமுறை முயன்றும் பலன் கிடைக்கவில்லை. 31வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ரெபிக் உதைத்த அபார ஷாட்டை, இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்போர்ட் லாவகமாக தடுத்தார். முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதியில் இங்கிலாந்து முழுமையாக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த குரோஷியா வீரர்கள் அதிரடியை கையில் எடுத்தனர்.
இதற்கு 68வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. குரோஷியாவின் சிமி சாதுர்யமாக பந்தை ‘பாஸ்’ செய்ய, அதை பெர்சிக் எகிறி குதித்து உதைத்து வலைக்குள் புகுத்தினார். இதன் மூலம் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன் அடைந்தது. முன்னிலை பெற இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் முயற்சிகள் செய்தும் பலன் தரவில்லை. 90 நிமிட ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமனில் இருந்தன.
இதனால் 15 நிமிட கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்போர்ட் 105+2வது நிமிடத்தில் குரோஷியாவின் கோல் வாய்ப்பை தடுத்தார்.  முதல் கூடுதல் நேரத்தில் கோல் அடிக்கப்படாததால், 2வது 15 நிமிட கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதில் இங்கிலாந்து வீரர்கள் சற்று கவனக்குறைவாக இருந்ததை குரோஷியா நன்கு பயன்படுத்திக் கொண்டது. 109வது நிமிடத்தில் பெர்சிக் தந்த பாசை பயன்படுத்தி, மரியோ மான்ட்ஜூகிக் எதிர்பாராத கோல் அடிக்க இங்கிலாந்து வீரர்கள் தடுமாற்றமடைந்தனர். எஞ்சியிருந்த 11 நிமிடத்தில் இங்கிலாந்தால் எதுவும் செய்ய முடியவில்லை. அதே நேரத்தில், 116வது நிமிடத்தில் குரோஷியா அடிக்க வேண்டிய மற்றொரு கோல் வாய்ப்பை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்போர்ட் தடுத்தார். இறுதியில், 2வது கூடுதல் நேர முடிவில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்த்த அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். வரும் 15ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள், சாம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளை நடக்கும் 3ம் இடத்திற்கான போட்டியில் பெல்ஜியம்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

சாதித்த குட்டி நாடு

* குரோஷியாவின் மக்கள் தொகை வெறும் 40 லட்சம் மட்டுமே. உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குட்டி நாடுகள் பட்டியலில் தற்போது குரோஷியாவும் இணைந்துள்ளது. இதற்கு முன், 1930, 1950ல் உருகுவே அணி இரு முறை உலக சாம்பியனான போது அந்நாட்டின் மக்கள் தொகை வெறும் 17 லட்சம் மட்டுமே. அதுவே தற்போதும் சாதனையாக உள்ளது.
* முக்கிய தொடர்களில் விளையாடிய 5 அரை இறுதியில் 4ல் இங்கிலாந்து தோல்வி அடைந்துள்ளது. அந்த அணி 1968ல் யூரோ அரை இறுதியில் யூகோஸ்லோவியாவிடமும், 1990 உலக கோப்பை, 1996 யூரோ தொடர்களில் ஜெர்மனியிடமும், தற்போது குரோஷியாவிடமும் தோற்றுள்ளது.
* 5வது முறையாக உலக கோப்பை தொடரில் விளையாடும் குரோஷியா முதல் முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.
* அதிக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படும் தங்க காலணி விருதுக்கான பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி கேன் 6 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பெல்ஜியத்தின் லுகாகு 4, பிரான்சின் கிரைஸ்மன், பாப்பே தலா 3 கோலுடன் உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்