SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் சாலையில் வனவிலங்குகள் பலியாவதை தடுக்க சென்சார் சிக்னல் கருவி: யானை வந்தால் சிவப்பு விளக்கு எரியும்

2018-07-12@ 20:25:02

சத்தியமங்கலம்: வனவிலங்குகள் சாலையில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க பவானிசாகர்  வனப்பகுதியில் லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான்,  காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள்  வனப்பகுதியில் உள்ள சாலைகளை கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டு  உயிரிழக்கின்றன. இதை தடுக்க வனவிலங்குகள் சாலையை  கடக்கும் பகுதியை கண்டறிந்து அப்பகுதியில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகளை  சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியை சேர்ந்த 3  பேராசிரியர்கள் தயாரித்துள்ளனர். இதுகுறித்து  பேராசிரியர் சஞ்சய் கூறியதாவது: லண்டன் ரப்போர்டு பவுண்டேசன்  நிதிஉதவியுடன் நாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.  பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில்   சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள்  அடிக்கடி சாலையை கடப்பதை அறிந்தோம்.

சூரிய ஒளி சக்தியில் இயங்கும் சோலார் தகடு  மூலம் மின்கலனில் இணைத்து அதிலிருந்து லேசர் சென்சார் கருவி, ரிசீவர்  மற்றும் டிரான்ஸ்மிட்டர் பொருத்தினோம். வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள்  சாலைக்கு வரும் இடத்தை கண்டறிந்து அந்த இடத்தில் இருபக்கமும் இந்த கருவிகளை  பொருத்தினோம். பின்னர் சாலையில் வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் 2  இடங்களில் லேசர் சிக்னல் கருவிகளை பொருத்தினோம்.  மான் மற்றும் காட்டுப்பன்றி போன்ற சிறிய விலங்குகள் கருவிகளுக்கிடையே கடக்கும்போது  அவைகளை கண்டறிய அதன் உயரத்திற்கு ஒரு சென்சாரும், யானை போன்ற பெரிய  விலங்குகள் கடக்கும்போது அதன் உயரத்தில் ஒரு சென்சாரும்  பொருத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் விலங்குகள் வரும்போது சென்சார் சிக்னல்  கருவி கண்டறிந்து வனத்துறை அதிகாரிகளின் செல்போனிற்கு குறுந்தகவல்  செல்வதோடு சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள லேசர் சிக்னல் கருவிக்கு சமிக்ஞை  அனுப்பும்.

மான் உள்ளிட்ட சிறிய விலங்குகள் செல்லும்போது சிக்னல் கருவியில்  உள்ள மஞ்சள் நிற விளக்கு எரியும் வகையிலும், யானை போன்ற பெரிய விலங்குகள்  செல்லும்போது சிவப்புநிற விளக்கும் எரியும் வகையிலும் பொருத்தப்பட்டுள்ளது.  இதை வாகன ஓட்டிகள் கண்டறிந்து வாகனத்தை நிறுத்தியோ அல்லது மெதுவாக இயக்குவதன் மூலம்  வனவிலங்குகள் சாலையில் அடிபட்டு இறப்பதை தடுக்க முடியும். இம்முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் வனப்பகுதியில் மேலும் சில  இடங்களில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகளை பொருத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு சஞ்சய் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்