SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலக்கரி இறக்குமதியில் 1500 கோடி நஷ்டம் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

2018-07-12@ 01:47:50

சென்னை: தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததில் ரூ.1500 கோடி நஷ்டம் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும் என்று திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவலருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து நேற்று அவர்வெளியிட்ட அறிக்கை: தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அரசுக்கு 1500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இல்லையேல் தி.மு.க சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அதிமுக ஆட்சியின் நிர்வாக அலங்கோலங்கள் குறித்து 2016-17 ம் ஆண்டிற்கான இந்திய தலைமை தணிக்கை கணக்காளரின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1599.81 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்ட நாளில் உள்ள விலைக்குப் பதிலாக நிலக்கரியை இறக்குமதி செய்யும் நாளில் இருந்த விலையை மின் பகிர்மானக்கழகம் கொடுத்ததாலும், தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததாலும் இந்த மோசமான இழப்பை சந்திக்க வேண்டியதாகி விட்டது என்று சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. நிலக்கரியின் சர்வதேச விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருந்த நேரத்தில் விலையை அதிகரித்துப் போடுங்கள் என்று ஒப்பந்ததாரர்களை மின் பகிர்மானக் கழகமே கேட்டுக் கொண்டுள்ளது என்ற சி.ஏ.ஜி.யின் அறிக்கை பேரதிர்ச்சியாக இருக்கிறது. தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கை போட்டு உடைத்திருக்கிறது.

சென்னை மக்களை பேரிடரில் சிக்க வைத்த டிசம்பர் 2015 வெள்ளம் பற்றிய சி.ஏ.ஜி. அறிக்கை அதிமுக அரசின் நிர்வாக தோல்விக்கு சான்றாவணமாக விளங்குகிறது. டிசம்பர் 2015 வெள்ளப் பேரிடருக்கு அதிமுக அரசே முழுப் பொறுப்பு என்று முகத்தில் அறைந்தார் போல் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த அறிக்கையில், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவுப்படி 2015 டிசம்பர் 1 ம் தேதியன்று குறைந்தபட்சம் ஆறு மணி நேரங்களுக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விட்டிருந்தால் போதும். ஆனால் 20,960 கன அடி நீரை திறந்து விட்டதோடு மட்டுமின்றி, 21 மணி நேரம் அப்படி தொடர்ந்து அன்றைய தினம் தண்ணீரை திறந்து விட்டதால்தான் சென்னை பெருவெள்ளத்தில் சிக்கியது என்பதை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. நிதி மேலாண்மை அவலத்தை கோடிட்டுக் காட்டியுள்ள சி.ஏ.ஜி அறிக்கை, “மாநில அரசு கடன்கள் எல்லாம் அடுத்த ஐந்து வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலைக்கு வரும். அப்போது மிக மோசமான கடனாளி மாநிலமாக மாறி, தமிழகம் கடனில் மூழ்கி விடும்” என்று கடுமையாக எச்சரித்துள்ளது. 2014-2015ம் ஆண்டில் 17.56 சதவிகிதமாக இருந்த மாநிலத்தின் கடன் 2016-17ல் 29.85 சதவிகிதமாக அபாயகரமான அளவிற்கு அதிகரித்து விட்டது. கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி மட்டும் 2014-15 ம் ஆண்டில் 20.88 சதவிகிதமாக உயர்ந்து ஒட்டுமொத்த நிதி மேலாண்மையும் அதிமுக ஆட்சியில் சிரிப்பாய் சிரிக்கிறது.

“அம்மா உணவகத்திற்காக சப்பாத்தி செய்ய வாங்கிய 15 மெஷின்களில் 12 வேலை செய்யவில்லை”, “பந்தோபஸ்து டூட்டிக்கான கட்டணங்களை உரிய காலத்தில் மாநில காவல்துறை தலைவர் மாற்றி அமைக்காததால் அரசுக்கு 97.92 கோடி ரூபாய் நஷ்டம்”, “அரசின் மெத்தனத்தால் 1120 கோடி ரூபாய் வணிகவரி இழப்பு”, “25 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் 2016-17ம் ஆண்டில் 9366.11 கோடி ரூபாய் இழப்பு”, “மாநில போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் 14.23 கோடி ரூபாய் இழப்பு” என்று சி.ஏ.ஜி. அறிக்கையின் பக்கங்கள் எல்லாம் அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஏற்பட்ட இழப்புகளின் தொகுப்பாக இருப்பது அ.தி.மு.க அரசின் முதலமைச்சர்களும், அமைச்சர்களும் அனைத்து துறைகளிலும் படு தோல்வியடைந்து விட்டார்கள் என்பதை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஆகவே, இந்த நஷ்டங்களை மட்டும் கூட்டிப் பார்த்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அதிமுக அரசு காலி பண்ணியிருக்கிறது என்பது 2016-17 சி.ஏ.ஜி. அறிக்கையின் வாயிலாக தெரிகிறது. ஆகவே, செம்பரம்பாக்கம் ஏரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீரை 21 மணி நேரங்கள் திறந்து விட்டு, சென்னையை வெள்ளக்காடாக்கி, மக்களின் உயிரையும், உடமைகளையும் பேரிடருக்குள்ளாக்கியது குறித்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்து மக்களின் உயிரோடு விளையாடிய உண்மைக் குற்றவாளிகளை உலகிற்கு அடையாளம் காட்டி, தண்டிக்க வேண்டும். அதேபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ. 1500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2019

  24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்