பவர் இல்லாத லோக் ஆயுக்தா சட்டம் : மு.க.ஸ்டாலின் அறிக்கை
2018-07-12@ 00:50:13

சென்னை : பல் இல்லாத வாய்போல பவர் இல்லாத லோக் ஆயுக்தா சட்டம் என்று திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்ற நெருக்கடியின் காரணமாக அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் குறை மனதுடன் கொண்டு வந்தபோதும் லோக் ஆயுக்தா சட்டமுன்வடிவை எடுத்த எடுப்பிலேயே தி.மு.கழகம் வரவேற்றது. அதே நேரத்தில் அந்த சட்டமுன்வடிவு முழுமையான வலிமை கொண்டதாக, நிர்வாகத்தில் ஊழலை உண்மையாகவே ஒழிக்கக்கூடியதாக வெளிப்படைத்தன்மை கொண்ட அரசாங்கத்துக்கு உத்தரவாதம் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், அதுகுறித்த விவாதத்தின் போது கழகத்தின் சார்பிலான கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டன.
லோக் ஆயுக்தா சட்டம் வேண்டும் என்று கோரிய தி.மு.க. அதனை எதிர்த்து வெளிநடப்பு செய்யலாமா என வழக்கம்போல தங்கள் மீது படிந்திருக்கும் களங்கத்தை மறைக்கும் யுக்தியாக, தி.மு.கழகத்தின் பக்கம் பழியைத் திருப்பப் பார்க்கிறார்கள். லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை தி.மு.கழகம் எதிர்க்கவில்லை. அது, பல் இல்லாத பொக்கை வாயாக வெட்டப் பயன்படாத அட்டைக்கத்தியாக இருக்கிறது என்பதையும், அந்த ஓட்டை வாய் வழியாக ஊழல் பெருச்சாளிகள் குறுக்கு வழியில் தப்பி ஓடி, நிர்வாக நேர்மை என்ற உன்னதமான உயிருக்கே உலை வைக்கும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. சட்டமன்றத்தில் நான் உரையாற்றும்போது, “இது ஒரு அதிகாரம் இல்லாத அமைப்பாக, பவரும் பல்லும் இல்லாத லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை இங்கே நீங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.
செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப முடியாது என்ற நிலையில் நீங்கள் இருந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தோம். அமைச்சர் ஜெயக்குமார் “லோக் ஆயுக்தாவைக் கொண்டு வரவேண்டும் என்ற தி.மு.க. ஏன் இதை எதிர்க்கிறது? மாளிகையில் பல்பு இல்லை என்று சொல்வதுபோல காரணம் சொல்கிறது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். எள்ளி நகையாடுவதாக நினைத்துக்கொண்டு, மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பியுள்ளார் சகோதரர் ஜெயக்குமார் கமிஷன் ராஜ்ஜியம் நடத்தும் ஆட்சியாளர்கள் முடிவு செய்யும் ஒப்பந்தங்கள் (டெண்டர்கள்) பற்றி லோக் ஆயுக்தா நடவடிக்கை எடுக்க முடியாது கலெக்ஷன் ராஜ்ஜியம் நடத்தும் ஆட்சியாளர்கள் நியமிக்கும் பணிகள் (போஸ்டிங்) குறித்து லோக் ஆயுக்தா நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படியென்றால், இந்த சட்டமுன்வடிவால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.
ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும் என்பதே ஆள்வோரிடம் நாம் வைக்கும் கோரிக்கை. நமது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போனால், அதை நிறைவேற்றுகின்ற அதிகாரம் நம் கைகளில் மக்களின் ஆதரவினால் விரைந்து வரும். அப்போது, அந்த சட்டத்திற்குப் பல் இருக்கும் பவர் இருக்கும். அதன் காரணமாக, முன்னாள் ஆட்சியாளராகப் போகும் இந்நாள் ஆட்சியாளர்கள் அந்தப் பற்களின் வலிமையை உணரக்கூடிய இடத்தில் வசமாகச் சிக்கியிருப்பார்கள் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். ஊழலுக்கு இடம் தராமல், வலிமையான பற்களைக் கொண்ட லோக் ஆயுக்தா உருவாக்கப்பட்டு, ஆட்சி நிர்வாகம் என்பது அனைத்துத் தரப்பு மக்களும் அடி முதல் நுனி வரை விரும்பிச் சுவைக்கும் கரும்பு போன்ற சட்டத்தை வரவேற்று உருவாக்கும் காலம் விரைவில் ஜனநாயக ரீதியாக அமையும். அதுவரை போலிகள் போடும் கொண்டாட்டத்தைப் பொறுத்துக் கொண்டுதானே ஆகவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க கோரி மார்ச் 9ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: அற்புதம்மாள் அறிவிப்பு
ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்
ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம்..... பிப்.,24ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிச்சாமி
மதுவிலக்கு கொள்கைக்கான கால அட்டவணை வெளியிடக்கோரி காத்திருப்பு போராட்டம் நடத்திய 400 டாஸ்மாக் ஊழியர்கள் கைது
வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதி: அதிகாரி உத்தரவு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்