SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரை இறுதியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி அசத்தல்: பைனலுக்கு முன்னேறியது பிரான்ஸ்

2018-07-12@ 00:12:52

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் அரை இறுதியி, 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை போராடி வென்ற பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், தொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடிய பெல்ஜியம் அணி வீரர்கள் பந்தை துல்லியமாகப் பாஸ் செய்து தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் பிரான்ஸ் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். எனினும், பிரான்ஸ் அணி கேப்டனும் கோல் கீப்பருமான ஹூகோ லோரிஸ் அபாரமாக செயல்பட்டு பெல்ஜியம் அணி வீரர்களின் ஷாட்களை தடுத்தார்.

பிரான்ஸ் அணி வீரர்களும் அவ்வப்போது மின்னல் வேக பதில் தாக்குதலில் ஈடுபட்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படாததால், இடைவேளையின்போது இரு அணிகளும் 0-0 என சமநிலை வகித்தன. இரண்டாவது பாதியில் முனைப்புடன் விளையாடிய பிரான்ஸ் அணிக்கு 51வது நிமிடத்தில் ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி பந்தை பெல்ஜியம் கோல் பகுதிக்கு முன்பாக பறக்கவிட்டார் கிரீஸ்மேன். பெல்ஜியம் தற்காப்பு வீரர்கள் பந்தை வெளியேற்ற முயன்றபோது, உயரே தாவிக்குதித்த சாமுவேல் உம்டிடி அபாரமாக ‘ஹெட்’ செய்து பந்தை வலைக்குள் திணித்தார். பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றதுமே, தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கியது.

பதில் கோல் அடிக்க பெல்ஜியம் அணி வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. அந்த அணியின் ஈடன் ஹஸார்ட் பந்தை சிறப்பாகக் கடத்திச் சென்று பிரான்ஸ் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். எனினும் அவரது முயற்சிகளை பிரான்ஸ் கோல் கீப்பர் ஹூகோ லோரிஸ் மற்றும் தடுப்பாட்டக்காரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முறியடித்தனர். ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்ற பிரான்ஸ் அணி பைனலுக்கு முன்னேறியது. அந்த அணியின் சாமுவேல் உம்டிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து - குரோஷியா அணிகளிடையேயான 2வது அரை இறுதியில் வெற்றி பெறும் அணியுடன் 15ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மோதும்.

ஆண்டுகளுக்கு பிறகு...
* பிரான்ஸ் அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பை பைனலில் விளையாட தகுதி பெற்றுள்ளது. 2006ம் ஆண்டு பைனலுக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி இத்தாலி அணியுடன் மோதியது. கூடுதல் நேர ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததால் பெனால்டு ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டதில், பிரான்ஸ் 3-5 என்ற கோல் கணக்கில் தோற்று 2வது இடம் பிடித்தது.
* மூன்றாவது முறையாக பிரான்ஸ் அணி பைனலுக்குள் நுழைந்துள்ளது. 1998ல் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அந்த அணி அதில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
* உலக கோப்பை ஆட்டங்களில் பிரான்ஸ் அணி 3வது முறையாக பெல்ஜியம் அணியை வீழ்த்தியுள்ளது.
* பெல்ஜியம் அணி 64 சதவீத நேரமும், பிரான்ஸ் அணி 36% நேரமும் பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
* பிரான்ஸ் 19 ஷாட்கள் அடித்த நிலையில், பெல்ஜியம் தரப்பில் 9 ஷாட்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. இவற்றில் பிரான்ஸ் அணியின் 5 ஷாட்களும், பெல்ஜியம் அணியின் 3 ஷாட்களும் இலக்கு நோக்கி துல்லியமாக அமைந்தன.
* பெல்ஜியம் அணிக்கு 5 கார்னர் வாய்ப்புகளும், பிரான்ஸ் அணிக்கு 3 கார்னர்களும் கிடைத்தன.
* பெல்ஜியம் வீரர்கள் 16 தவறுகள் செய்தனர். பிரான்ஸ் தரப்பில் 6 தவறுகள் இழைக்கப்பட்டன.
* பெல்ஜியம் தரப்பில் 3, பிரான்ஸ் தரப்பில் 2 வீரர்கள் மஞ்சள் அட்டை பெற்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்