SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய்லாந்து குகையில் நடந்த ரகசியங்கள் வெளியீடு மயக்க மருந்து கொடுத்து சிறுவர்கள் மீட்பு

2018-07-12@ 00:03:36

சியாங் ராய்: தாய்லாந்து குகையின் சிக்கலான பகுதியை நீந்தி கடந்த சிறுவர்களின் பயத்தை போக்குவதற்காக மீட்புக் குழுவினர் அவர்களுக்கு வீரியம் குறைந்த மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.  தாய்லாந்தின் ‘தாம் லுவாங்’ குகைக்குள் கடந்த மாதம் 23ம் தேதி நுழைந்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், ஒரு பயிற்சியாளரும் 4 கிமீ தூரம் சென்று விட்டனர். அதன் பிறகு மழையின் காரணமாக குகைக்குள் தண்ணீர் புகுந்ததால், அவர்களால் வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர். அவர்களை 9 நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்து நீர்மூழ்கி வீரர்கள் கண்டுபிடித்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து மற்றும் பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்பட்டு, ‘ஸ்கூபா டைவிங்’ பயிற்சியும் அளிக்கப்பட்டது.

சிறுவர்களை மீட்கும் பணி கடந்த ஞாயிறன்று தொடங்கியது. முதல் நாள் 4 பேரும், கடந்த திங்கட்கிழமை 4 பேரும், மீதம் இருந்த 5 பேர் நேற்று முன்தினமும் மீட்கப்பட்டனர். இவர்களை மீட்கும் பணியில் 19 நீர்மூழ்கி வீரர்களும், 100க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினரும் ஈடுபட்டனர். அதற்கு முன்பாக, இந்த செய்தியை சேகரிக்க குகை அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பத்திரிகை நிரூபர்களும், செய்தி சேனல் கேமராமேன்களும் அங்கிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால், மீட்பு பணியின் போது நடந்த சம்பவங்கள் பற்றிய தெளிவான  தகவல் உடனடியாக தெரியவில்லை. பல விஷயங்கள் ரகசியம் காக்கப்பட்டன.

மீட்புப்பணியில் ஈடுபட்ட கமாண்டர் சியானதா என்பவர் கூறுகையில், ‘‘குகையில் இருந்து வெளியேறிய சிறுவர்கள் ஸ்டிரச்சரில் மயங்கிய நிலையில் இருந்தனர். சிலருக்கு கைவிரல்கள் மட்டும் அசைந்தன. அவர்கள் சுவாசித்தபடி இருந்தனர். குகைக்குள் இருந்த டாக்டர்கள் அடிக்கடி நாடித் துடிப்பை பரிசோதித்தனர்’’ என்றார். இதற்கான காரணம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘‘குகைக்குள் அபாயமான பகுதியை கடந்தபோது  சிறுவர்களின் பதற்றத்தையும், பயத்ைதயும் குறைப்பதற்கான மருந்து கொடுக்கப்பட்டது’’ என்றார். சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டது வீரியம் குறைந்த மயக்க அல்லது தூக்க மருந்தாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

குகையிலிருந்து கடைசி சிறுவனையும், கால்பந்து பயிற்சியாளரையும் மீட்டபோது, குகையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் மோட்டார் பம்புகள் செயல் இழந்தன. இதனால், குகைக்குள் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. அப்போது குகைக்குள் 1.5 கி.மீ தூரத்துக்கு 100க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் இருந்தனர். குகையில் இருந்து அனைத்து சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்ட பின்பு, தாய்லாந்து வீரர்கள் 3 பேரும், ஆஸ்திரேலிய டாக்டர் ஒருவரும் குகையில் இருந்து வெளியேறாமல் இருந்தனர்.

குகைக்குள் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, அனைவரும் தண்ணீர் உயர்கிறது என கூச்சலிட்டபடி வெளியேறத் தொடங்கினர். குகைக்குள் இருந்து ஆஸ்திரேலிய டாக்டரும்,  தாய்லாந்து மீட்பு வீரர்களும் வெளியே வந்தபோது, மீட்பு குழுவினர் குகைக்குள் மனித சங்கிலி அமைத்து உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தாய்லாந்து பிரதமர் நன்றி
சிறுவர்கள் மீட்கப்பட்டதைத்  தொடர்ந்து தாய்லாந்து பிரதமர் பிரயூத் சானோச்சா மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொலைக்காட்சியில் நேற்று ஆற்றிய உரையில், `‘அரசின் நடவடிக்கை, பொதுமக்களின் உதவி மற்றும் வெளிநாட்டினரின் தார்மீக ஆதரவால் மீட்புப்பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதற்கு உதவிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பணியின்போது உயிர்த்தியாகம் செய்த தாய்லாந்து முன்னாள் கடற்படை வீரர் சமான் குனான் எப்போதும் நமது இதயத்தில் நிறைந்திருப்பார்’’ என கூறினார்.

உயிரை காத்த யோகா
மாணவர்களுடன் சிக்கியிருந்த பயிற்சியாளர் எக்போல் புத்த துறவியும், சிறந்த யோகா பயிற்சியாளரும் ஆவார். குகையில் சிக்கியிருந்த போது மாணவர்களின் சக்தி வீணாகாமல் தடுக்க அவர்களுக்கு யோகா கற்றுத் தந்து அவர்களின் பயிற்சியாளர் காத்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.

தண்ணீரை வெளியேற்ற இந்தியா உதவியது:
மழை வெள்ளத்தால் சூழ்ந்த குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. குகையில் நிரம்பி இருந்த நீரை வெளியேற்றிய பிறகுதான் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குகையில் இருக்கும் நீரை வெளியேற்றுவதற்காக சிறந்த தொழில்நுட்ப திறன் கொண்ட நிறுவனமான இந்தியாவின் கிர்லோஸ்கர் நிறுவனத்தை பயன்படுத்திக்கொள்ளும்படி இந்திய தூதரகம் தாய்லாந்து அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.  இதனையடுத்து புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த நிறுவனம் இந்தியாவிலேயே சிக்கலான இடங்களில் இருந்தும் தண்ணீரை வேகமாகவும், திறனுடனும் நீரை இணைத்து வெளியேற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஒன்றாகும்.  இதற்காக நிறுவனம் சார்பில், மகாராஷ்டிராவில் இருந்து நீரைவெளியேற்றும் அதிக திறன் கொண்ட 4 பம்புகள் தாய்லாந்துக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மேலும், கிர்லோஸ்கர் நிறுவன வல்லுநர்கள் குழு கடந்த 5ம் தேதி தாய்லாந்து சென்று, அங்கு குகையின் தன்மை குறித்து ஆய்வு செய்து அதில் இருந்து நீரை வெளியேற்றுவது குறித்து ஆலோசனை வழங்கியது.

இந்திய தொழில்நுட்ப குழு வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் பம்ப் அமைக்கும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குகையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்