SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடுகாட்டிலும் இடமில்லை! சுடுவதால் கெடும் சுற்றுச்சூழல்!

2018-07-11@ 10:47:19

பெருகும் மக்கள் தொகையால் கிராமங்கள் நகருக்குள் ஐக்கியமாகி வருகின்றன. விரிவாக்கம் என்ற பெயரில் ஏரி, குளம் என நீ்ர்நிலைகள் காணாமல் போய் விடுகின்றன. காசு கொடுத்தால் பட்டா கிடைத்து விடும். அதிகம் காசு கொடுத்து அடுத்தவருக்கும் விற்று கொள்ளையடிக்கலாம். இப்படி காணாமல் போகும் பட்டியலில் நீர் நிலைகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது இடுகாடுகள்/ சுடுகாடுகள். ரியல் எஸ்டேட்காரர்களின் எளிதான இலக்கு இந்த சுடுகாடுகள்தான். உள்ளூர் ஊராட்சி தலைவரை கையில் போட்டுக் கொண்டால், வருவாய் துறையினர் வஞ்சனையில்லாமல் வாங்கிக் கொண்டு பட்டா போட்டு தந்து விடுவார்கள்.

அதன் பிறகு அதனை கூறுப்போட்டு கோடிகளை குவிக்கலாம். கொஞ்சம் பெரிய சைஸ் கல்லறைகளாக வீடுகள் ஆக்கிரமிக்கும். அதன்பிறகு உள்ளூர் மக்கள் மட்டுமல்ல கூறுப்போட்ட இடத்தை வாங்கி வீடுகட்டியவர்களும் சுடுகாட்டை தேடி அலைவார்கள். இப்போது அளவில் மட்டுமல்ல எண்ணிக்கையிலும் இடுகாடுகள் காணாமல் போகின்றன. ஒரு காலத்தில் பல ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடந்த இடுகாடுகள், இப்போது கிரவுண்ட் கணக்கில் சுருங்கி விட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் புதைப்பது கிடையாது. எரிப்பது மட்டும்தான். இருந்த கல்லறைகளும் இடிக்கப்பட்டு விட்டன.

இப்போதும் சென்னையில் ஒரு சில இடங்களில் புதைக்க அனுமதிக்கிறார்கள். சில மாதங்களில் அதே இடத்தை தோண்டி வேறு உடல் புதைக்கப்படும்.
ஆனால் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், ரவுடிகள், வியாபாரிகள் என்றால் ஆண்டு கணக்கில் அப்படியே இருக்கும். ஆனாலும் கல்லறை கட்ட முடியாது. கல்வெட்டு வைக்கலாம். சென்னையை போல் ஏரி மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் புதைக்க அனுமதி இல்லை. எரிக்க மட்டுமே அனுமதி. மீறினால் தண்டனை என்ற எச்சரிக்கை பலகைகள் பல இடுகாடுகளில் வைக்கப்பட்டுள்ளன. இடுகாடுகள் ஆக்கிரமிப்பினால் மட்டும் காணாமல் போகவில்லை.

உறவுகளை புதைத்தவர்கள் எல்லாம் தங்கள் அன்பை அடையாளப்படுத்தவும், செல்வாக்கை காட்டவும் கல்லறைகள் கட்டுவதாலும் இடபற்றாக்குறை. சிலர் மண்டபம் கட்டுகிறார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றி இடுகாட்டை மீட்பதற்கு பதில் எரிக்க மட்டுமே அனுமதிக்கிறது அரசு. ஆனாலும் கெஞ்சி கூத்தாடி புதைத்து வருகின்றனர். சமரசம் உலாவிய இடங்கள் எல்லாம் இப்போது சாம்பல் காடுகளாகி விட்டன. சுடுகாடு இருக்கும் பகுதிகள் அறிவிக்கப்படாத புகை மண்டலங்களாகி விட்டன. புதைப்பதுதான் உலகம் முழுவதும் இருக்கும் மரபு. தமிழர்களின் மரபு மட்டுமல்ல சுற்றுச்சூழலை கெடுக்காத பழக்கமும் அதுதான். எரி்ப்பதால் சுற்றுச்சூழல் கெடுகிறது. அரசுக்கு அதைப்பற்றி என்ன கவலை. அதனால் பெருகும் மக்கள் தொகை சுடுகாட்டுக்கு மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கும் கேடாக தொடர்கிறது…

எரிப்பதிலும் பிரச்னை


சுடுகாட்டை ஆக்கிரமித்தவர்களிடம் மனை வாங்கி வீடு கட்டியவர்களும், ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களும், குடியிருப்பு பகுதியில் உள்ள சுடுகாட்டை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். உடல்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது, சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்பது அவர்கள் குற்றச்சாட்டு. ஆனால் வீடு கட்ட மனை வாங்கும் போது சுடுகாடு பக்கத்தில் வாங்குகிறோமே என்ற அறிவு இருப்பதில்லை. வாங்கிய பிறகு இருக்கும் சுடுகாட்டை காலி செய்வதில் தீவிரம் காட்டுகிறார்கள். இதற்கு சென்னை நகரில் இருக்கும் அத்தனை இடுகாடுகளும், சுடுகாடுகளும் உதாரணம்.

கட்டுவதில் மட்டும் ஆர்வம்

இறந்த உறவுகளை புதைத்த இடங்களில் மண்ணை குவித்து நல்ல நாட்களில் சாணம் போட்டு மெழுகி, கோலம் போட்டு அழகு செய்வார்கள். குறிப்பாக நினைவு நாள், மயானக் கொள்ளை, மாட்டுப்பொங்கல் ஆகிய நாட்களில் இப்படி அழகுப்படுத்தி, ஆராதனை செய்து வணங்குவது வாடிக்கை. ஆனால் இப்போதெல்லாம் கட்டிடக் கல்லறைகள்தான். முன்பு புதைத்தப்பின் கல்லறை கட்டுவார்கள். அதுமட்டுமல்ல புதைப்பதற்கு முன்பே குழி தோண்டியதும் தொட்டி கட்டி அதில்தான் புதைக்கின்றனர். சாங்கியத்துக்கு 3 கைப்பிடி மணலை உள்ளே போடுகின்றனர். பின்னர் கற்பலகைகளை பரப்பி அதன் மீது கல்லறை கட்டுகின்றனர். சுடுகாடுகள் சென்னைக்கு வெளியே கல்லறை காடுகளாகி விட்டன.

- சிஎஸ்ஆர்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்