SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் ஒரு ஆண் கூட கு.க செய்வதில்லை

2018-07-11@ 10:34:52

நாம் இருவர்; நமக்கு இருவர், முதல் குழந்தை இப்போது வேண்டாம்; இரண்டாவது குழந்தை எப்போதும் வேண்டாம் என்ற குடும்பக்கட்டுப்பாட்டு விளம்பரங்கள் ஓயாமல் ஒலிக்கும். பார்க்கும் பக்கமெல்லாம் இந்த வாசகங்கள் ஒளிரும். பெருகும் மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறிய அரசுகளின் பொருமல்கள் இவை. விளம்பரம் பலனளிக்காததால் கட்டாயப்படுத்தி.... ஒருக்கட்டத்தில் மிரட்டி.... குடும்பக்கட்டுப்பாடு(கு.க) செய்ய ைவத்த கறை படிந்த பக்கங்கள் இந்திய வரலாற்றில் ஏராளம். வெறும் 65 ரூபாய் பணத்துக்கும், 5 கிலோ அரிசிக்கும், பின்னர் ஹார்லிக்ஸ் பாட்டிலுக்கும் பலரின் பரம்பரைகள் காலாவதியாகின.

ஆம், குழந்தை பிறக்காதவர்களுக்கு மட்டுமல்ல, கல்யாணம் ஆகாதவர்களுக்கு கூட குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலும் அவசரக்கால சட்டம் அமலில் இருந்த போது ஏன் என்றுக் கூட கேட்க நாதியில்லை. மத்திய அரசு சொன்னதை கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்படியே அராஜகமாக அமல்படுத்தப்பட்டன. ஆட்களை பிடிக்க முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஊரில் வேலை கிடைக்காமல் சும்மா சுற்றிக் கொண்டிருந்தவர்களை பிடித்து ஏஜென்ட்களாக நியமித்தனர். அறுவை சிகிச்சைக்கு ஆள் பிடித்தால் தலா 5 ரூபாய் கமிஷன். கமிஷனுக்காக ஆளாய் பறந்த ஏஜென்ட்கள் கண்ணில் கண்டவர்களை எல்லாம் கட் பண்ண வைத்தனர். கமிஷன் கம்மி என்பதால் கு.க செய்து கொண்டவர்களின் காசிலும் கமிஷன் பார்த்தனர்.

அவசரக் கால காங்கிரஸ் ஆட்சி போன கையோடு ஓய்ந்துபோனது. கூடவே ஆட்சி மாறி ஜனதா வந்ததால் ஜனங்களில் குரல் கொஞ்சம் மத்திய அரசை எட்டியது. அதனால் கு.க கெடுபிடிகள் குறைந்தன. விளம்பரங்கள், சலுகைகள் மூலம் கு.க செய்ய வைத்தனர். கு.க செய்து கொண்ட அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்கப்பட்டது.(அந்த படியையும் சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்து விட்டது தனிக்கதை). இப்போது இந்த பிரச்னை அறவேயில்லை. பொதுமக்களே இப்போது ஒன்று வேண்டாம், இரண்டாவது எப்போதும் வேண்டாம்’ என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் கு.க அறுவை சிகிச்சை செய்வதை மட்டும் இன்றும் தவிர்க்கவில்லை. ஆனால் என்ன பெண்கள் மட்டும்தான் இப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

அதாவது 100 பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஒரு ஆண் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். அதாவது 100 பெண்களுக்கு ஒரு ஆண் என்ற இந்த கணக்கு 2015-16ம் ஆண்டு வரைதான். ஆனால் இப்போது 2016-17ம் ஆண்டில் 100 பெண்களுக்கு  0.3 ஆண்கள் அதாவது 1000 பெண்களுக்கு 3 ஆண்கள்தான் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். அதிலும் நாட்டிலேயே பிறப்பு விகிதம் அதிகம் இருக்கும் பீகாரில் ஒருவர் கூட கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. நாட்டிலேயே கல்வியறிவு அதிகம் பெற்ற கேரளாவில், குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில் வெறும் 0.1சதவீத ஆண்கள்தான் கு.க அறுவை சிகிச்சை செய்துள்ளனர். டெல்லி, ஒரிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் 0.2 சதவீத ஆண்கள்தான் கு.க செய்து கொண்டவர்கள். நமது சீர்மிகு தமிழகமும் இந்த விஷயத்தில் பீகார் வழியைதான் கடைப்பிடித்துள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டில் ஒரு ஆண் கூட தமிழ்நாட்டில் கு.க செய்யவில்லை.

முன்பெல்லாம் ஆண்கள்தான் உடல் உழைப்பு தருபவர்களாகவும், அதிகம் வேலைக்கு செல்பவர்களாகவும் இருந்தனர். அதனால் கு.க அறிமுகமான போது பெண்கள் மட்டுமே கு.க செய்துக் கொண்டனர். இன்று ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண்களும் உழைக்கிறார்கள், வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் இன்றும் பெண்கள் மட்டுமே கு.க செய்து கொள்கின்றனர். ஆண்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் நிலைமை மாறவில்லை. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல. எளியது, அறுவை சிகிச்சை செய்த அன்றே வீட்டுக்கு திரும்பலாம், அதன் அடையாளம் கூட தெரியாது என்று சொன்ன பிறகும் ஆண்கள் தயங்கினர். கு.க வினால் ஆண்மைக்கு ஆபத்து இல்லை என்ற பிறகு சில ஆண்கள் தைரியமாக முன் சென்றனர். ஆனால் இன்னும் அவர்கள் பின்னால் செல்ல ஆண்களுக்கு தைரியமில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் பட்டியல் போடுகின்றன.

அதே நேரத்தில் குழந்தை பெற்ற எல்லா பெண்களும் கு.க செய்து கொள்வதில்லை. நாடு முழுவதும் 36 சதவீத பெண்கள் மட்டுமே கு.க செய்துக் கொள்கின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் 68.3 சதவீத பெண்கள் கு.க செய்கின்றனர். தமிழ்நாட்டில் 49.4 சதவீதம், கர்நாடகாவில் 48.6 சதவீதத்தினரும் என தென்னிந்திய பெண்களே அதிகம் கு.க செய்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் கருத்தடை சாதனங்கள், மாத்திரைகளை பயன்படுத்தி கர்ப்பமாகாமல் பார்த்துக் கொள்கின்றனர். குறிப்பாக அறுவை சிகிச்சை செய்துக் கொண்டால் குண்டாகிவிடுவோம், உடல் அழகு கெட்டு விடும் என்று ஆண்களை போல் இல்லாமல் பெண்களும் கொஞ்சம் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.

- இராஜேஷ்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kajarainhome

  புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

 • sriramayanatrain

  புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

 • kajapuyal_roof111

  திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

 • 16-11-2018

  16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • gslvrocket

  ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்