SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொது ஆண்டுக்கு முன் - பொது ஆண்டுக்கு பின்: கணக்கெடுப்பு கதை

2018-07-11@ 10:20:37

உலக மக்கள் தொகையில் 2வது இடத்தில் இருக்கிறது இந்தியா. குழந்தைகள் கடவுள் தரும் வரம். இறைவன் தருவதை மறுப்பது நியாமில்லை. இந்தியாவுக்கு ஆண்டவன் அதிகம் அள்ளித்தந்தார். அதனால்தான் ஜனத்தொகையும் பெருகியது என்று சொல்ல முடியாது. பிறப்பை தடுக்க வழித் தெரியாததால்தான் பெருகியது என்பதுதான் உண்மை. மக்கள் தொகை பெருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம். சரி மக்கள் தொகை தினம் கொண்டாடுவதால், மக்கள் தொகை கணக்கெடுப்பதால் மக்கள் தொகை குறைந்து விடுமா? உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு ஏற்படுத்த கடைப்பிடிப்பது. மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் நேர், எதிர்மறை விளைவுகள் குறித்து அறிய உதவும் நாள். ஆண்டுக்கு ஒருமுறை ஆரவாரத்துடன் சொல்லும் நாள் இது.

மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பதின் மூலம் ஒவ்வொரு நாட்டின் மக்கள் எண்ணிக்கை தெரியவரும். அதன் மூலம் மக்களின் தேவைகளின் அளவை அறியலாம், அவற்றை நிறைவேற்ற வழிகளை, வாய்ப்புகளை கண்டறியலாம். எதிர்காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையை கணிக்கலாம். அதற்காக திட்டமிடலாம். என பல வகைகளிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நமக்கு உதவும். அதனால்தான் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பழக்கம் தொடங்கியது. மக்கள் தொகை கொள்கையின் தந்தையாக போற்றப்படுபவர் தாமஸ் ராபர்ட் மால்தூஸ். இவர் ‘மக்கள் தொகை பெருகினால் எதிர்காலம் ஆபத்தானதாக மாறிவிடும்’ என்று உலகை எச்சரித்தவர். அதை உலகம் உணர்ந்ததால் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகையை கணக்கெடுக்கின்றனர்.

பொது ஆண்டுக்கு முன்...


ராபர்ட் மால்தூஸ் கவலைப்படுவதற்கு முன்பே மக்கள் தொகை கணக்கீடு செய்யும் பழக்கம்  பொது ஆண்டுக்கு முன்பே(நன்றி: தமிழக அரசு) அதாவது மக்களுக்கு புரியும் படி சொல்வதென்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இருந்துள்ளன. பாபிலோனியர்கள் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தொகை கணக்கெடுத்துள்ளனர். நாடு முழுவதும் கணக்கெடுப்பு செய்ய ஆறேழு ஆண்டுகள் ஆனதாம். ஆள் கணக்குடன் கூடவே மக்கள் வைத்திருந்த வெண்ணெய், தேன், பால், கம்பளி, காய்கறிகள் அளவுகளையும் கணக்கீடு செய்துள்ளனர். ஆவணப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு என்றால் 2518 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஷியா பேரரசில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்புதான். நிலம் ஒதுக்கீடு செய்யவும், வரி விதிக்கவும் இந்த கணக்கெடுப்பு நடந்ததாம்.

இந்தியாவை பொருத்தவரை தமிழ் பேரரசுகள் ஆண்ட காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அனைத்து நவீனங்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆனால் அவை இந்திய வரலாறாக பதியப்படவில்லை. எனவே இந்திய வரலாறை கணக்கில் கொண்டால் மவுரிய பேரரசு காலத்தில் சுமார் 2370 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டதாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சொல்கிறது. வரி விதிக்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாம். கூடவே மக்களின் பொருளாதார நிலை, வேளாண் தொழில்  ஆகியன குறித்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாம்.

உலகின் பெரும் பேரரசுகளாக இருந்த ரோமப் பேரரசு, சோழப் பேரரசுகள் மட்டுமல்ல பழங்குடி பேரரசுகள் இருந்த காலத்திலும் வருவாயை இலக்காக கொண்டுதான் கணக்கெடுப்புகள் நடந்தன. இப்படி இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் மக்களிடம் எப்படியெல்லாம் வரி வசூலிக்கலாம், யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக அந்தக் கால அரசுகள் தலைகளை எண்ணின. அதுதான் இன்று ஜிஎஸ்டி வரை தொடர்கிறது.

பொது ஆண்டுக்கு பின்பு...


இந்தியாவில், மொகலாயர் காலத்தில்தான் மக்கள் தொகை பற்றிய விவரங்கள் முதன்முதலாக தொகுத்து வெளியிடப்பட்டன. அக்பருடைய அரசவையில் இடம் பெற்றிருந்த அபுல்பாசல் என்ற அறிஞர் எழுதிய, ‘அயனி அக்பரி’ என்ற நூலில், அன்றைய காலக்கட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்ததைக் காண முடிகிறது. அதனைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் காலத்தில், (1687)அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த எலிகு ஏல் என்பவர் இங்கிலாந்து மன்னரின் ஆணைப்படி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வசித்தவர்கள் தொடர்பான முழு விவரங்களைச் சேகரித்து தந்தார். பின்னர், 1853-ம் ஆண்டு வடமேற்கு பகுதியில் சிறிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கிறிஸ்டோப் குலிமிட்டா என்பவர் தலைமையில், 1871-ல் மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அப்போதுதான் மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் நாட்டில் நிகழ்ந்த பஞ்சங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன.

இந்தியாவில், மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணி முதன்முதலாக 1872-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களின் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு பணியின்போது, கல்வி மற்றும் எழுத்தறிவு, பாலினம், பொருளாதார நிலை, பிறப்பு, இறப்பு விகிதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர், பெற்றோர் விழுக்காடு, வீடு முதலான உறைவிடங்கள், மொழி, மதம் போன்ற தகவல்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், பங்கேற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி மையத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுவதற்காக, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகள் உட்பட 18 மொழிகளில் பயிற்சி குறிப்பேடுகள் தயாரிக்கப்பட்டன. அதனடிப்படையில், 16 மொழிகளில் மக்கள் தொகை குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. இந்த ஆண்டில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின்போது, இந்தியா-வங்காளதேசம் ஒன்றாக இணைந்து, எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டன.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான வீடுகளைப் பட்டியல் இடுதலில், கட்டிட எண் மற்றும் மக்கட்தொகை கணக்கெடுப்பு வீட்டு எண், அறைகளின் எண்ணிக்கை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, வாகனம் பற்றிய விவரங்கள் உட்பட 35 கேள்விகள் கேட்கப்பட்டன. கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுபடி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 19 லட்சத்து 3 ஆயிரத்து நானூற்று இருபத்தி இரண்டு பேர் எனக் கணக்கிடப்பட்டது. இதில், ஆண்களின் எண்ணிக்கை 623, 724, 248 எனவும், பெண்களின் எண்ணிக்கை 586, 469, 174 எனவும் கணக்கிடப்பட்டது.  இந்த 7 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 135 கோடியை தாண்டிவிட்டது.

பெயருக்கு பதில் எண்

நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை தொடங்கியது. இன்று மக்களே எண்களாகி விட்டனர். ஆம் தேசிய அடையாள அட்டையான ‘ஆதார் அட்டை’ யில் வழங்கப்பட்ட எண்ணே ஒருவரின் பெயராகும் நிலை.  உங்கள் பெயர் சொல்லாவிட்டாலும் உங்கள் ஆதார் எண்ணை தந்துதான் சேவைகளை பெறமுடியும் என்ற நிலைமை உருவாகி வருகிறது. இன்னும் கொஞ்ச நாட்கள் ஆனால் பெயருக்கு பதில் போலீஸ்காரர்களை கூப்பிடுவது போல் எண்களை சொல்லி மக்களை அழைக்கும் காலம் வரும்.

- ச.விஜயகுமார்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ModiSalmanDelhi

  சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

 • SuperSnowMoon2k19

  அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

 • 20-02-2019

  20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்