SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாஸ்கோவில் இன்று 2வது அரை இறுதி இங்கிலாந்து ஆக்ரோஷத்துக்கு ஈடுகொடுக்குமா குரோஷியா? பைனலுக்கு முன்னேற பலப்பரீட்சை

2018-07-11@ 01:03:58

மாஸ்கோ : பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் 2வது அரை இறுதியில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி மாஸ்கோ லஸ்னிகி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 11.30க்கு தொடங்குகிறது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரை இறுதியில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதிய நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போகும் 2வது அணி எது என்பதை தீர்மானிப்பதற்கான அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன, அரை இறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகளுமே ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவை என்பதால், தொடர்ந்து 4வது முறையாக ஐரோப்பிய அணியே உலக கோப்பையை கைப்பற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

1966ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ள இங்கிலாந்து, பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணியின் ஹாரி கேன் இதுவரை 6 கோல் அடித்து தங்க ஷூ விருதுக்கான வேட்டையில் முன்னிலை வகிக்கிறார். இங்கிலாந்து வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டத்துடன், 24 வயது கோல் கீப்பர் ஜார்டன் பிக்போர்டின் சாகசமும் குரோஷிய அணிக்கு சவாலாக இருக்கும். பயிற்சியாளர் கேரத் சவுத்கேட்டின் வித்தியாசமான வியூகங்களும் இங்கிலாந்து மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதே சமயம், நடுகள ஆட்டத்தில் மிக வலுவாக விளங்கும் குரோஷிய அணி எத்தகைய சவாலுக்கும் தயாராக உள்ளது. பார்சிலோனா அணிக்காக விளையாடும் இவான் ராக்கிடிச், ரியல் மாட்ரிட் நட்சத்திரம் லூகா மார்டிச் இருவரும் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். பந்தை துல்லியமாகப் பாஸ் செய்வதும், நீண்ட நேரத்துக்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதும் குரோஷிய அணிக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. மொத்தத்தில் வலுவான அணிகள் மோதும் இன்றைய அரை இறுதி ஆட்டம், கால்பந்து ரசிகர்களுக்கு திகட்டாத விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi68bday

  வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

 • losangeleswaterlight

  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

 • vinayagarsilai

  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

 • mankutstromchina

  தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

 • tirupathififth

  திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்