SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய் நாற்றில் மிளகாய், வெண்டை, பாகற்காய், வெள்ளரி அதிகம் சாகுபடி: ஆஸ்திரேலியா தொழில் நுட்பத்தில் பட்டதாரிகள் அசத்தல்

2018-07-09@ 15:49:52

தர்மபுரி: பாலக்கோடு அருகே ஆஸ்திரேலியா தொழில்நுட்பத்தில் பட்டதாரிகள் காய்கறி சாகுபடி செய்து சாதனை படைத்து வருகின்றனர். ஒரு தக்காளி செடியில் மட்டும் 25 முதல் 40 கிலோ வரையில் மகசூல் கிடைக்கிறது. இந்த தோட்டத்தை பாரம்பரிய விவசாயிகள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஆதி மனிதனின் வாழ்க்கை முறையாக தொடங்கி, நவீன காலத்தில் தொழிலாக மலர்ந்து மண்ணிலுள்ள உயிர்களுக்கெல்லாம் உணவு கொடுத்து வரும் தொழிலே விவசாயம். தற்போது உயிர்நுட்ப அறிவியலாக மறுமலர்ச்சி பெற்றுள்ளது. உயிர் தொழில்நுட்பம் நிறைந்த விவசாயம், பாரம்பரிய வேளாண்மையும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு வளர்ந்து வருவது போலத்தோன்றினாலும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கிறது. உற்பத்திக்கு முதலிடம் கொடுத்து வந்த நிலை மாறி, சந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தி செய்ய வேண்டிய அவசியத்தை உலகமயமாக்கல் உறுதி செய்து விட்டது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அகே புலிகரை கிராமத்தில் தக்காளி தோட்டம் ஒரு ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கல்லூரி பட்டதாரிகளான ராஜதுரை, சோலைராஜன், சூர்யபிரகாஷ், சதீஷ்குமார், புவனேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து தக்காளி தோட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த தக்காளி தோட்டம் ஆஸ்திரேலியா தொழில் நுட்பத்தின்படி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மண் இல்லாமல் தேங்காய் நாற்றில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்துள்ளனர். அதற்கான உயிர் உரமும் இடப்படுகிறது. பூச்சிகொல்லி மருந்துகள் செடியில் பயன்படுத்துவதில்லை. பூச்சிகளும் எளிதில் இவற்றை தாக்குவதில்லை. முழுக்க முழுக்க இயற்கை முறையில் விளைவிக்கப்படுகிறது. இந்த தக்காளி செடியின் ஆயுள் காலம் 8 மாதமே.

வழக்கமாக மண்ணில் விளைவிக்கப்படும் தக்காளி செடியின் ஆயுட்காலம் நான்கு மாதம் வரையே. ஆனால், ஆஸ்திரேலியா தொழில் நுட்பத்தில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடியில் 8 மாதம் வரை தக்காளி அறுவடை செய்யலாம். 20 அடி வரையில் இந்த தக்காளி செடி வளரும். ஒற்றை தண்டில் வளரக்கூடியது. கயிற்றில் கட்டியவாறு இந்த செடி வளர்க்கப்படுகிறது. கொத்து கொத்தாக தக்காளி காய்த்து தொங்குகிறது. ஒரு கொத்தில் ஒரு கிலோ முதல் ஒன்றை கிலோ வரை தக்காளி கிடைக்கிறது. ஒரு செடியில் 25 கிலோ முதல் 40 கிலோ வரை மகசூல் பெறமுடிகிறது. வழக்கமான தக்காளி செடியில் 10 முதல் 20 கிலோ வரை மகசூல் கிடைக்கும். சாதாரண தக்காளி அறுவடை செய்து வைத்தால் அதிகபட்சமாக 10 நாட்கள் வரை வைக்கலாம்.

ஆஸ்திரேலியா தொழில்நுட்பத்தில் சாகுபடி தக்காளி கெடாமல் 20 நாட்கள் வரை வைத்திருந்து சந்தையில் விற்பனை செய்யலாம். பெரும்பாலும் இந்த தக்காளி வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கு தகுதியானதாக உள்ளது. ஒரு தக்காளி 100 கிராம் எடையுடனும், அதிக புளிப்பு மற்றும் ேலசான இனிப்பு தன்மை கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்த தக்காளி மதிப்பு கூட்டுப் பொருட்கள் செய்ய ஏற்றதாக அமைந்துள்ளது. வெளியூர் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கு வந்து தக்காளி மற்றும் இரை வெண்டை, மிளகாய், பாகற்காய், வெள்ளரி போன்றவற்றை வாங்கி செல்கின்றனர்.
 
இதுகுறித்து வேளாண் பிடெக் படிப்பை முடித்து, ஆஸ்திரேலியா வேளாண் பண்ணையில் மேலாளராக பணியாற்றும் பாலக்கோடு பட்டதாரி இளைஞரான ராஜதுரை கூறியதாவது; வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் நம்ம தமிழக விவசாயிகள் சளைத்தவர்கள் இல்லை. தமிழக விவசாயிகள் திறமையானவர்கள். வானத்தையும், மண்ணையும் பார்த்து விவசாயம் செய்யக்கூடியவர்கள். அந்த வகையில் தற்போது போதிய நிலத்தடி நீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திலிருந்து சில விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் படித்த பட்டதாரிகள் விவசாயத்திற்கும் திரும்பும் வகையில் அதிக மகசூல் தரக்கூடிய காய்கறிகளை சாகுபடி செய்கிறோம்.
 
இதற்காக முறையாக பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்குகிறோம். நான் உள்பட 5 பட்டதாரிகள் இணைந்து தக்காளி தோட்டத்தை உருவாக்கியுள்ளோம். ஆஸ்திரேலியா தொழில்நுட்பத்தில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மண் தேவை இல்லை. மிக குறைந்த நீர் தேவை. தேங்காய் நார் போதுமானது. இதில் 8 மாதம் வரை தக்காளி தொடர்ந்து அறுவடை செய்யலாம். தக்காளி சாகுபடி செய்து வெற்றிக்கண்டதால், தற்போது பச்சைமிளகாய், வெண்டை, பாகல், வெள்ளரிக்காய் சாகுபடி செய்துள்ளோம். ஆஸ்திரேலியா தொழில்நுட்பத்தில் சாகுபடி செய்துள்ள இந்த காய்கறிகள் ஏற்றுமதிக்கு ஏற்றவகையாக தரமான காய்கறிகளாக உள்ளது. அதிக வருவாய் கிடைக்கும். எங்களைபோன்று புதிய தொழில்நுட்பத்தில்  பட்டதாரி விவசாயிகள் காய்கறி, வேளாண் சாகுபடியில் ஈடுபட்டால் அதிக லாபம் ஈட்டலாம், என்றனர். இது பற்றிய தகவல் அறிந்து தர்மபுரி, பாலக்கோடு சுற்றுவட்டார விவசாயிகள் இந்த தோட்டத்தை நேரடியாக வந்து பார்வையிட்டு சாகுபடி முறையை கண்டு வியந்த வண்ணம் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • artexpo

  சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

 • modimeetmaurico

  பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

 • Switzerlandhorse

  சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்