SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலாடி பகுதியில் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில் : வாழ்வாதாரம் பாதிப்பு

2018-06-19@ 12:16:26

சாயல்குடி: கடலாடி தாலுகாவில் மண்பாண்டம் தொழில் நலிவடைந்து வருவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். கடலாடி தாலுகாவில் ஓரிவயல், பனைக்குளம், பூதங்குடி, கூரான்கோட்டை, மேலக்கிடாரம், காவாகுளம், மேலச்சிறுபோது, கடுகுசந்தை, சத்திரம், சாயல்குடி, மாரியூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்டம் செய்யும் தொழில் நடந்து வந்தது. வறட்சியால் தொழில் நலிவடைந்து, தொழிலாளர்கள் குடும்பங்கள் வறுமையால் வாடி வருவதால், மாற்றுத்தொழிலுக்கு மாறி வருகின்றனர். இத்தொழில் காணாமல் போய் வருவதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து காவாகுளம் கிருஷ்ணசாமி(75) கூறும்போது, மூன்றாவது தலைமுறையாக இத்தொழில் செய்து வருகிறோம். தற்போது மண்பானை, பனைமுட்டி, சமையல் மண் பாத்திரங்கள், கால்நடை தண்ணீர் தொட்டி, புரவி எடுப்பின் போது குதிரை, சாமி சிலைகள், தவளும் பிள்ளை போன்ற மண் பொம்மைகளை செய்து வருகிறோம்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டி, மண்டபம், சாயல்குடி, திருப்புல்லாணி, கீழக்கரை பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பனை மரத்தொழில் செய்யும் தொழிலாளர்கள், பதனீர் இறக்குவதற்கு பனை முட்டி வாங்கி செல்கின்றனர். சாயல்குடி, கடலாடி மற்றும் அருகிலுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் இறுதி சடங்கு செய்ய வாங்கி செல்கின்றனர். இதனை போன்று மதுரை, தூத்துக்குடி நகரை  சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்று இருப்பு வைக்கின்றனர். அவர்களிடமிருந்து தென்மாவட்டங்களிலுள்ள அனைத்து ஊர்களிலுள்ள மண்பாண்டம் கடை வியாபாரிகள் வாங்கி, சில்லரை வியாபாரத்திற்கு விற்கின்றனர். வியாபாரிகளுக்கு ஒரு முட்டி ரூ.20 க்கு கொடுத்து வருகிறோம். ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு சமையல் செய்ய வாங்கி செல்கின்றனர்.

தானியங்களை சேகரிக்கும் குலுமைகள், கால்நடை தண்ணீர் தொட்டி, பெரியபானை போன்றவை செய்வதன் மூலம் நல்ல லபாபம் வரும். ஆனால் தொடர் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு, தானியங்களை சேகரித்து வைப்பதற்கு வழியில்லாமல் போனது. இதனால் தானிய குலுமை தயாரிப்பது முற்றிலும் நின்று விட்டது. வறட்சியால் கிராமங்களில் கால்நடைகளை வளர்ப்பது குறைந்து விட்டது. இதனால் கால்நடை தண்ணீர் தொட்டி செய்வதும் குறைந்து வருகிறது. மண்பாண்டம் பொருட்களை சீசன் தொழிலுக்கு மட்டும் வாங்கி செல்வதால் மற்ற காலங்களில் பிழைப்பு நடத்துவது பெரும் சவாலாக உள்ளது. இப்பகுதியில் ஏற்பட்ட தொடர் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், டிராக்டர்களில் விற்கப்படும் தண்ணீரை கூடுதல் விலை கொடுத்து வாங்கி, மண்பாண்டங்கள் செய்வதற்கு பயன்படுத்தும் நிலை உள்ளது.

மேலும் கண்மாய், ஊரணி போன்ற இடங்களில் மண்களை அள்ள வருவாய்துறை, கனிமவளத் துறை, காவல்துறை என அனுமதி பெறும் நிலை உள்ளது. மண் அள்ளுதல், பிசைதல், தயாரித்தல், செப்பனிடுதல், சுடுதல் போன்ற பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பது இல்லை. இதுபோன்ற காரணங்களால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடந்து வந்த இத்தொழில் தற்போது நடக்கவில்லை. ஒரு சில ஊர்களில் மட்டுமே நடக்கிறது. இதுபோன்ற காரணங்களால் நாளுக்கு நாள் தொழில் நலிவடைந்து காணாமல் போய் வருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மண் அள்ளிக்கொள்ள இலவச அனுமதி வழங்க வேண்டும். வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும். மண் பாண்டங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு கட்டுப்படி ஆகும் விலையில் வாங்கி, பனை மரத்தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-07-2018

  15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-07-2018

  14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • TrumpLondonprotest

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

 • Michigancorpseflower

  18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

 • Chinachemicalplantfire

  சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்