SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

60 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடனுக்கு ‘ஸ்வீட்’ வெற்றி!

2018-06-19@ 00:53:41

நோவ்கோராட்: உலக கோப்பை தொடரில் ஸ்வீடன் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெற்றியை  ருசித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிபா உலக கோப்பை தொடரின் எப் பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்வீடன் அணி, தனது முதல் லீக்  ஆட்டத்தில் தென் கொரியாவுடன் நேற்று மோதியது. போட்டி தொடங்கியதில் இருந்தே ஸ்வீடன் வீரர்கள் பந்தை துல்லியமாகக் கடத்திச் சென்று தென்  கொரிய கோல் பகுதியில் தாக்குதல் நடத்தினர். எனினும் தற்காப்பு ஆட்டத்தில் வலுவாக இருந்த தென் கொரிய அணியினர் ஸ்வீடன் வீரர்களின் கோல்  அடிக்கும் முயற்சிகளை எளிதாக முறியடித்தனர்.

இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலை வகித்தன. இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த  ஆட்டத்தில், ஸ்வீடன் வீரருக்கு எதிராக தென் கொரிய வீரர் தவறு செய்ததை அடுத்து கள நடுவர் வீடியோ அசிஸ்டன்ட் ரெப்ரீயின் உதவியை  நாடினார். இதில் விஏஆர் குழுவினர் ஸ்வீடன் அணிக்கு ஆதரவாக பெனால்டி கிக் வழங்கினர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்வீடன் அணி கேப்டன்  ஆண்ட்ரியாஸ் கிரான்க்விஸ்ட் 65வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை கொடுத்தார், கடைசி கட்ட நிமிடங்களில் தென்  கொரிய வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் ஸ்வீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. 1958ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் உலக  கோப்பை போட்டித் தொடர் நடந்தபோது, தொடக்க லீக் ஆட்டத்தில் மெக்சிகோ அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதன் பிறகு  பங்கேற்ற 7 உலக கோப்பை தொடர்களிலும் முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல் (5 டிரா, 2 தோல்வி) தவித்து வந்த ஸ்வீடன், 60  ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரியாவை வீழ்த்தி அந்த சோக வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
* கேப்டன் கிரான்க்விஸ்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
* ஸ்வீடன் அணி 56 சதவீதம் நேரமும், தென் கொரியா 44% நேரமும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
* ஸ்வீடன் 15 ஷாட் அடித்த நிலையில், தென் கொரியா தரப்பில் 5 மட்டுமே அடிக்கப்பட்டன. இவற்றில் ஸ்வீனடின் 4 ஷாட்கள் இலக்கு நோக்கி  துல்லியமாகப் பாய்ந்தன. தென் கொரிய வீரர்களின் ஒரு ஷாட் கூட இலக்கை குறிவைக்கவில்லை.
* ஸ்வீடனுக்கு 6 கார்னர் வாய்ப்புகளும், தென் கொரியாவுக்கு 5 கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தன.
* தென் கொரிய வீரர்கள் 23 தவறுகள், ஸ்வீடன் வீரர்கள் 20 தவறுகள் செய்தனர்.

ஆட்ட நாயகன் ஆண்ட்ரியாஸ்:
தென் கொரிய அணிக்கு எதிராக வெற்றி கோல் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஸ்வீடன் கேப்டன் ஆண்ட்ரியாஸ் கிரான்க்விஸ்ட் கூறுகையில்,  ‘களத்தில் மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டோம். அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அடுத்து வரும்  ஆட்டங்களிலும் இது தொடரும் என நம்புகிறேன்’ என்றார்.

ரஷ்ய எம்.பி. எச்சரிக்கையால் சர்ச்சை
உலக கோப்பை போட்டியை பார்ப்பதற்காக வரும் வெளிநாட்டு ரசிகர்களுடன் ரஷ்ய பெண்கள் உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால் கலப்பு  இன குழந்தைகள் பிறப்பதையும், கணவரின்றி தனித்து வாழும் தாய்மார்கள் தவிக்க நேர்வதையும் தவிர்க்கலாம் என்று அந்நாட்டு நாடாளுமன்ற  உறுப்பினர் எச்சரித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்